`உயர்கல்வி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பேசி தீர்வுகாண வேண்டும்' - விஐடி வ...
``இதற்குப் பிறகும் துணை முதல்வர் பதவியில் இருப்பதா?" - உதயநிதி ஸ்டாலினை சாடும் பாஜக
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 2023-ம் ஆண்டு சனாதான ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், `சனாதன தர்மம் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது. டெங்கு, மலேரியாவைப் போல் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும்." எனக் குறிப்பிட்டார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி அமித் மால்வியா எக்ஸ் தளத்தில் தமிழ்நாட்டின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் படங்களை பதிவிட்டு, சில சர்ச்சை கருத்துகளை தெரிவித்திருந்தார்.
அது தொடர்பாக திருச்சியில் அமித் மால்வியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அமித் மாள்வியா மதுரை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமித் மால்வியா மீதான வழக்கை நேற்று ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``உயர் நீதிமன்றம் அமித் மால்வியாவுக்கு எதிரான தி.மு.க-வின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது மட்டுமல்லாமல், இந்தக் கருத்து தி.மு.க-வின் இந்துக்களுக்கு எதிரான மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான மரபணுவின் பின்னணியில் இருந்து வருகிறது என்றும் கூறியுள்ளது.
உயர் நீதிமன்றக் கண்டனத்திற்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் பதவியில் நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை. அவரை உடனடியாக துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மேலும் இந்த நாட்டின் 80 சதவீத மக்கள்தொகைக்கு எதிராக, அதாவது இந்து சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உதயநிதியின் கருத்து இனப்படுகொலைக்கான அழைப்பு." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
















