`இந்த போன்ல தான் வேலை செய்கிறீர்களா?’ பட்டன்போனை தூக்கிப்போட்ட குமரி கலெக்டர்; கொதிக்கும் VAO-க்கள்
கிராம நிர்வாக அலுவலர்களை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஒருமையில் பேசி அவமானப்படுத்துவதாகவும், செல்போனை தூக்கி வீசியதாகவும், இதனால் மன உளைச்சலில் உள்ள வி.ஏ.ஓ-க்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகர்கோவிலில் அமைந்துள்ள கலெக்டர் அலுவகத்தில் ஆட்சியர் அலுவலக அறை முன்பு கிராம நிர்வாக அதிகாரிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று கலெக்டர் அழகு மீனா தலைமையில் அகஸ்தீஸ்வரம் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில் வாக்குச்சாவடி நிலை கண்காணிப்பாளரும் புத்தேரி கிராம நிர்வாக அலுவலருமான நாகேஸ்வரகாந்த் என்பவரை மாவட்ட கலெக்டர் அழகுமீனா ஒருமையில் பேசியதுடன், அவரது செல்போனை வீசி எறிந்தும் அவமரியாதை செய்ததாக குற்றம்சாட்டி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து புத்தேரி கிராம நிர்வாக அலுவலரும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கன்னியாகுமரி மாவட்டச் செயலாளருமான நாகேஸ்வரகாந்த்திடம் பேசினோம், "எஸ்.ஐ.ஆர் பணிக்காக சுமார் நான்கு வாரங்களாக சனி, ஞாயிறு கிழமைகள் கூட விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். பத்து பி.எல்.ஓ-க்களுக்கு ஒரு வி.ஏ.ஓ சூப்பர்வைசராக உள்ளார். மேலும் அதிகாரிகள் சொல்லும் வழிமுறையை பின்பற்றி படிவங்கள் பூர்த்தி செய்து பெற்றுவருகிறோம்.

பி.எல்.ஓ-க்களாக நியமிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி பணியாளர்கள் சிலர் திணறினாலும் நாங்கள் எங்கள் மொபைல் போனில் 2002-ம் ஆண்டுக்கான பூத் எண் உள்ளிட்டவைகளை கண்டுபிடித்து அந்த பணிகளை செய்து படிவங்களை பதிவேற்றம் செய்து வருகிறோம். கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.ஐ.ஆர் பணிகளில் தமிழக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
நேற்று மாலை 4 மணிக்கு ஆய்வு கூட்டத்திற்காக எங்களை கலெக்டர் வர சொன்னார்கள். எஸ்.ஐ.ஆர் சம்பந்தப்பட்ட முகாமில் பணிகளை செய்ததால் மொபைலில் சார்ஜ் இறங்கி விட்டது என்பதால் ஸ்மார்ட் ஃபோனை சார்ஜ் போட்டுவிட்டு பட்டன் போனை எடுத்துக்கொண்டு கலெக்டர் மீட்டிங்கு சென்றிருந்தேன். கலெக்டர் அந்த மீட்டிங்கில் என்ன எழுப்பி விட்டு, கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு பி.எல்.ஓ-வுக்கு போன் செய்யும்படி என்னிடம் கலெக்டர் தெரிவித்தார். நான் என்னுடைய பட்டன் போனில் இருந்து சம்பந்தப்பட்ட பி.எல்.ஏ-வுக்கு போன் செய்தேன். அப்போது ஆர்.டி.ஓ மேடம் எனது மொபைலை வாங்கி அந்த பி.எல்.ஓ-விடம் பேசினார்கள். அப்போது கலெக்டர் மேடம் அந்த போனை வாங்கி, இது யாருடையது எனக்கேட்டார்கள்.
அது என்னுடைய போன் என தெரிவித்தேன். 'இந்த போனை வைத்துத்தான் வேலை செய்கிறீர்களா?' எனக்கேட்டு செல்போனை மேசையில் தூக்கி எறிந்துவிட்டு, என்னை 'வெளியே போ' எனக்கூறிவிட்டார். நேற்று காலையில்தான் கூகுள் மீட்டிங்கில் ஸ்மார்ட் போன் மூலம் இணைந்தேன். அதுவும் கலெக்டருக்கு தெரியும். சுமார் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் கூகுள் மீட்டில் இருக்க வேண்டும். அதன் பிறகு படிவங்கள் பெற வேண்டும். இப்படி மிகவும் நெருக்கடியான வேலைக்கு மத்தியில் கலெக்டரும் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார். சாதாரண ஆட்களாக இருந்தால் நேற்று நடந்த சம்பவத்திற்கு அவர் தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு சென்று இருப்பார்.
இதுபோன்று வேறொரு எஸ்.ஐ.ஆர் முகாமில் சென்று ஒரு வி.ஏ.ஓ-வை 'பிச்சைக்கார நாயே' என கலெக்டர் திட்டியிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு மீட்டிங்கில் பெண் வில்லேஜ் ஆபீசர் ஒருவரை பார்த்து, 'உன் மூஞ்சிய பாத்தாலே தெரியுது நீ வேலைபார்க்கமாட்டாய்' என உருவக்கேலி செய்து பேசியிருக்கிறார். எஸ்.ஐ.ஆர் பணியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வி.ஏ.ஓ-க்களுக்கே இந்த நிலைமை என்றால், அதற்கு கீழ் உள்ள மாவட்டங்களில் உள்ளவர்களின் நிலையை நினைத்துப்பாருங்கள்.

அது மட்டுமல்லாது தேர்தல் பணியில் சுணக்கம் காட்டினால் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதால் அதை வைத்து மிரட்டுகிறார்.
கடைநிலை ஊழியராக இருந்தாலும் நாங்களும் மனிதர்கள்தானே. வெள்ளைக்காரர்கள் நடத்தியது போன்று எங்களைஅடிமை என நினைத்து நடத்துகிறார்கள் கலெக்டர். இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாகத்தான் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் கலெக்டர் அவரது செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனகேட்டு இந்த போராட்டத்தை நடத்துகிறோம்" என்றார்.
இறுதியாக கலெக்டர் சென்று வி.ஏ.ஓ-க்களிடம் கூலாக பேச்சுவார்தை நடத்தியதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
















