``இந்தியா - ரஷ்யா உறவு 'துருவ நட்சத்திரத்தை' போன்றது'' - மோடி பெருமிதம்
உங்க வீட்ல சின்னப் பிள்ளைகள் இருக்காங்களா? அப்போ இத படிங்க!
நெல்லையில், ரிவர்ஸ் எடுக்கப்பட்ட கார் மோதி 5 வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம், செய்தியை பார்த்தவர்களுக்கும், வாசித்தவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கும். இந்த நேரத்தில், குழந்தைகளின் பாதுகாப்புக்கான சில கைடன்ஸை வழங்குவது அவசியமாக இருக்கிறது.
காரின் முன்சீட்டில் உட்கார்ந்தால்...

* காரில் போகும்போது, எல்லா பிள்ளைகளும் முன் சீட்டில்தான் உட்கார ஆசைப்படுவார்கள். ஆனால், சீட் பெல்ட் போட விரும்ப மாட்டார்கள். அது பிள்ளைகளுக்கு ஒரு சதவிகிதம்கூட பாதுகாப்பில்லாத பிராக்டிஸ் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
* பிள்ளைகளை தனியாக காரில் விட்டுச் செல்வது அவர்களுக்கு உயிர் ஆபத்தையே ஏற்படுத்திவிடலாம் என்பதற்கு பல சம்பவங்கள் சாட்சியாக இருக்கின்றன. ஏ.சி.யில் ஏதேனும் பிரச்னை வந்தாலோ, காருக்குள் சூடு அதிகமாகியோ, குழந்தை மூச்சுத்திணறி இறக்க நேரிடலாம். எக்காரணம் கொண்டும் இந்தத் தவறை செய்யாதீர்கள்.
காருக்குள் சத்தமாக பாடல் ஒலித்துக்கொண்டிருந்தால்...

* சில அப்பாக்கள் குழந்தைகளை மடியில் உட்கார வைத்துக்கொண்டு கார் ஓட்டுவார்கள். காரை சடன் பிரேக் போடும்போது, குழந்தையின் நெஞ்சில் காரின் ஸ்டீரியங் வேகமாக இடிக்க நேரிடலாம்.
* காருக்குள் சத்தமாக பாடல் ஒலித்துக்கொண்டிருந்தால், காரின் பின்னாடி நிற்பவர்கள் எவ்வளவு கத்தினாலும் கார் ஓட்டுபவரின் காதில் விழாது. இந்த நேரத்தில் கார் ஓட்டுபவர் கவனக்குறைவாக ரிவர்ஸ் எடுத்தால், பின்னால் நிற்பவரின் நிலையை தனியாக சொல்ல வேண்டியதில்லை. பெரியவர்களுக்கே இதுதான் நிலைமை. இதில், சிறு பிள்ளைகள் நின்றால்..?
சன் ரூஃப் காரில் செல்லும்போது...

* காரின் கூரை திறந்து மூடுகிற (sunroof) மாடல்களில் செல்லும்போது, சடன் பிரேக் போட்டால் பிள்ளைகள் வெளியே விழுந்துடலாம். சில மாதங்களுக்கு முன்னால், சன் ரூஃப் காரில் நின்றபடியே சென்ற சிறுவன் எதிர்பாராவிதமாக இரும்பு வளைவில் மோதியால் அவன் கழுத்தெலும்பு உடைந்துபோனது. அதனால், எச்சரிக்கையாக இருங்கள் பெற்றோர்களே...
* குழந்தைகளுடன் காரில் செல்பவர்கள், குழந்தைகளை வெளியில் நிறுத்திவிட்டு ரிவர்ஸ் எடுக்கவே கூடாது. ரிவர்ஸ் எடுக்க வேண்டுமென்றால், குழந்தைகளை காரில் ஏற்றிய பிறகுதான் அதை செய்ய வேண்டும்.
360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறதா..?

* இப்போது வருகிற பெரும்பாலான கார்களில் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால், காரைச் சுற்றியிருப்பவர்களை (சிறு பிள்ளைகள் உள்பட) கார் ஓட்டுபவரால் நன்கு பார்க்க முடியும். விபத்தையும் தவிர்க்க முடியும். ஒருவேளை உங்கள் காரில் 360 கேமரா இல்லையென்றால், இப்போதே பொருத்திக்கொள்வது உங்களுக்கும் நல்லது; மற்றவர்களுக்கும் நல்லது.
நியூட்ரல் செய்வதை மறக்காதீர்கள்..!

* சில நேரங்களில் ரிவர்ஸ் கியர் போட்டு காரை பார்க் செய்ய வேண்டி வரலாம். அப்படி பார்க் செய்துவிட்டு கியரை மாற்றாமலேயே காரை ஆஃப் செய்துவிடுவார்கள். இதனால் மீண்டும் காரை ஸ்டார்ட் செய்யும்போது கவனக் குறைவாக இருந்தால், கார் சட்டென்று ரிவர்ஸில் போகும். எனவே, காரை நிறுத்தும்போது கியரை நியூட்ரல் செய்வதை தொடக்கம் முதலே பிராக்டிஸ் செய்ய வேண்டும். சில நேரங்களில் ஃபர்ஸ்ட் கியரில் காரை நிறுத்த வேண்டியிருக்கும். அப்போது ஹேண்ட் பிரேக்கை மறக்காமல் போட வேண்டும். இதனால் கார் தானாக பின்னால் நகர்வது தடுக்கப்படும்.
குழந்தைகள் ஆக்ஸிலேட்டரை திருகி விட்டால்...

* நம் ஊரில் கிட்டத்தட்ட குழந்தைகள் ஹெல்மெட் போடுவதே இல்லை. அவர்களை வண்டியில் வைத்துக்கொண்டு, ஸ்கூலுக்கு நேரமாகி விட்டது என வண்டியை வேகமாக ஓட்டாதீர்கள்.
பெட்ரோல் டேங்க் மீது குழந்தைகளை உட்கார வைத்துக்கொண்டு, பெட்ரோல் போடுவது போன்ற ஆபத்து வேறில்லை.
ஸ்கூட்டரில் குழந்தைகள் முன்னால் நின்றுகொண்டிருக்கையில், வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு கவனக்குறைவாக இருந்தீர்களென்றால், அவர்கள் ஆக்ஸிலேட்டரை திருகி விடலாம். அதிலும், இன்றைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சத்தமும் கேட்காது என்பதால், கவனமாக இருங்கள் பெற்றோர்களே.
குழந்தைகள் உங்கள் கையைப் பிடித்தபடி நடக்கையில்...

* வாகனங்கள் குறித்த எச்சரிக்கை உணர்வு வருகிற வயதுவரை, உங்கள் பிள்ளைகளுடன் தெருவில் நடந்துபோகையில், வண்டிகள் உங்களுடைய எந்தக் கையின் பக்கமாக வருகிறதோ, அந்தப்பக்கம் குழந்தைகளை நடக்க விடாதீர்கள். வண்டிகளை வேடிக்கைப் பார்க்க அந்தப் பக்கம்தான் பிள்ளைகள் நடக்க விரும்புவார்கள் என்பது தனிக்கதை. இருந்தாலும் நாம் கவனமாக இருப்போம்.
தண்ணீர் ஆபத்தும் கிச்சன்ஆபத்தும்...

* மொட்டைமாடியில் இருக்கிற தண்ணீர் டேங்குகளை மூடி வையுங்கள். பிள்ளைகள் நடமாடும் பகுதிகளில் இருக்கிற சம்ப்புகளை சரியாக மூடி வையுங்கள். நடை பழக ஆரம்பித்திருக்கிற குழந்தைகள் இருக்கிற வீட்டில், பெரிய சைஸ் பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைக்கும்போது கட்டாயம் மூடி வையுங்கள். நமக்கு அது பாதம் மூழ்குகிற அளவுக்கான நீர் தான். ஆனால், அது குழந்தைகளுக்கு எமன் என்பதை நினைவில் வையுங்கள். கத்தி என்றால் வெட்டும்; சூடான எண்ணெய் ஆபத்தானது; வெந்நீர் ஆபத்தானது என்பன போன்ற விழிப்புணர்வு பிள்ளைகளுக்கு வரும்வரைக்கும் அவர்களை கிச்சனுக்குள் அனுமதிக்காதீர்கள்.
சைல்ட் லாக் ப்ளீஸ்..!
* ஃபிரன்ட் லோடு வாஷிங் மெஷினில் சைல்ட் லாக் போட மறக்காதீர்கள். குழந்தைகள் தொண்டையில் சிக்கிக்கொள்ளக்கூடிய சிறு சிறு பொருள்களை வீட்டுக்குள் அனுமதிக்கவே அனுமதிக்காதீர்கள். அது அத்தியாவசியமான பொருள் என்றால், அவர்கள் கைகளுக்கு எட்டாத உயரத்தில் வையுங்கள். அப்பாக்கள் தங்கள் ஷேவிங் செட்டையும், அம்மாக்கள் தங்கள் பெர்ஃபியூமையும் மறைத்து வையுங்கள்.
குழந்தைகள் பாதுகாப்பாக வாழ, கவனமாக இருப்போம்..!




















