மக்களவையில் திருப்பரங்குன்ற விவகாரம்: பாஜக VS திமுக இடையே நடந்த காரசார விவாதம்!
``இதுதான் தொழில் முனைவு'' - ரூ.25 லட்சம் சம்பளத்தை விட்டு டெலிவரி பாயாக மாறிய இளைஞர் -பின்னணி என்ன?
பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்களில் கை நிறைய சம்பளம், படித்த படிப்பிற்கான வேலை கிடைப்பதே அரிதாக இருக்கும் இக்காலத்தில், பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆண்டுக்கு ரூ. 25 லட்சம் சம்பளம் கொண்ட வேலையை விட்டுவிட்டு, ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக மாறிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த அந்த இளைஞர், எதிர்காலத்தில் புதிதாக ‘கிளவுட் கிச்சன்’ (Cloud Kitchen) ஒன்றை தொடங்கும் திட்டத்தில் உள்ளார்.

ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு முன், கள நிலவரத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது அவரது நோக்கம் என்று கூறியிருக்கிறார்.
வாடிக்கையாளர்களுக்கு என்ன மாதிரியான உணவு தேவைப்படுகிறது? எந்த விலையில் உணவை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்? எந்தெந்த பகுதிகளில் உணவு ஆர்டர்கள் அதிகம் வருகின்றன? போன்ற விஷயங்களை களத்திலிருந்து கற்றுக்கொள்வதற்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உணவுத் தேவைகள் எப்படி இருக்கின்றன என்பதை அறிய அவர் விரும்பினார். இதற்காகவே, தனித்துவ வேலையை விட்டுவிட்டு, டெலிவரி ஊழியராக இணைந்துள்ளார்.
அவரது இந்த முடிவை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எதிர்த்துள்ளனர். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும், அந்த இளைஞர் தனது முடிவில் உறுதியாக உள்ளார்.

கடந்த சில வாரங்களாக டெலிவரி ஊழியராக பணியாற்றியதன் மூலம், குறைந்த விலையில் அதிக விற்பனையை தரக்கூடிய 12 உணவு வகைகளை அவர் கண்டறிந்துள்ளார். இதனை வைத்து, அடுத்த 3 முதல் 4 மாதங்களில் தனது புதிய தொழிலில் லாபம் ஈட்ட முடியும் என்று அவர் நம்பிக்கையுடன் உள்ளார்.
இந்தச் சம்பவத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அவரது நண்பர், “இதுதான் உண்மையான தொழில் முனைவு” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


















