மக்களவையில் திருப்பரங்குன்ற விவகாரம்: பாஜக VS திமுக இடையே நடந்த காரசார விவாதம்!
திருப்பரங்குன்றம் : `அயோத்தி, மணிப்பூர்... சங்பரிவாரின் வழக்கமான வழிமுறையே!’ - க.கனகராஜ் | களம் 1
எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’
இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ’ திருப்பரங்குன்றம் விவகாரம். பல்துறைகளை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் இந்த சர்ச்சை குறித்து விரிவாக தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)
“நான் யாரையும் தூக்கில் போடச் சொல்லவில்லை. எந்த கட்டிடத்தையும் இடிக்கச் சொல்லி ஆணையிடவில்லை. இந்த ஆணையை நிறைவேற்றுவதால் எந்த சீரமைக்க முடியாத விளைவுகளும் ஏற்பட்டிருக்காது.” என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் பேசியிருக்கிறார்.
அவர் இப்படி கடுமை காட்டியிருப்பது அவருடைய தீர்ப்பில் உள்ளபடியே “இந்த ஆண்டு முதல்” தீபத்தூணில் விளக்கு ஏற்றப்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என்பதற்கான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்.

ஆம். சீரமைக்க முடியாத விளைவு தான் ஏற்பட்டிருக்கும் என்பதை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களுக்கு சொல்லிக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இது தற்செயலான நிகழ்வல்ல. சங்பரிவார் அமைப்புகள் வழக்கமாக மேற்கொள்ளும் வழிமுறைதான் இது. இப்படிதான் 1949ல் அதுவரையிலும் பிரச்சனையில்லாமல் இருந்த பாபர் மசூதியில் கே.கே. நாயர் என்கிற மாவட்ட ஆட்சித் தலைவர் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட குழந்தை ராமர் விக்ரகத்தை வெளியே எடுக்க மறுத்து சண்டித்தனம் செய்தார்.
சுதந்திரப் போராட்டக் காலத்திலோ அதற்கு முன்போ சங்பரிவாரும் சரி வேறு யாரும் அந்த இடம் ராமர் பிறந்த இடம் என்று சொல்லவே இல்லை. பாபர் மசூதி கட்டப்பட்ட பிறகு துளசிதாசர் ராம் சரித மானஸ் எழுதினார். அது, சமஸ்கிருதம் அல்லாத ஒரு மொழியில் எழுதப்பட்ட முதல் ராமாயணம் என்கிறார்கள். அதற்காக அவர் கடும் எதிர்ப்பை சம்பாதித்தார். ஆனாலும் உறுதியாக நின்றார். 1500களில் பாபர் மசூதி கட்டப்பட்ட பிறகு 37 வருடம் கழித்து எழுதப்பட்ட ராம் சரித மானஸில் அந்த இடம் தான் ராமர் பிறந்த இடம் என்று சொல்லப்படவில்லை.
1949ல் குழந்தை ராமர் விக்ரகத்தை எடுக்க மறுத்த கே.கே. நாயர் பின்னர் ஜன சங்கத்தின் எம்.எல்.ஏ.,வாகவும், எம்.பி.யாகவும் இருந்தார் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பிறகு, பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இடித்தவர்களில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.
இதேபோன்று தான் 1991ம் ஆண்டு வழிபாட்டு தலங்கள் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அயோத்திப் பிரச்சனை தவிர அனைத்து வழிபாட்டு தலங்களும் இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15ந் தேதி என்ன நிலையில் இருந்ததோ அதுதான் நீடிக்கும் என்று நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது.
தலைமை நீதிபதியாக பணியாற்றிய டி.ஒய். சந்திரசூட் அதற்கு புது வியாக்கியானம் கொடுத்தார். மாற்றக் கூடாது என்று தான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர ஆய்வு செய்யக் கூடாது என்று சொல்லப்படவில்லை. எனவே, ஆய்வுகள் நடத்தலாம் என்று சொன்னார். ஞானவாபியை தோண்ட ஆரம்பித்தார்கள், சம்பல் மசூதியை தோண்ட ஆரம்பித்தார்கள் குறைந்தபட்சம் 5 பேர் கொல்லப்பட்டார்கள்.

இப்படி ஏராளமான உதாரணங்கள் இருக்கிறது. சங்பரிவாரின் வழிமுறையே இதுதான். ஒரு இடத்தை பிரச்சனைக்கு உள்ளாக்குவார்கள், தங்களுக்கு பொருத்தமான நீதிபதியோ, அதிகாரியோ வந்ததும் அந்த இடத்தை தாங்கள் சொல்வது போன்று மாற்றுவார்கள். பிறகு, அதையே ஆதாரம் என்பார்கள். இப்போதும் திருப்பரங்குன்றத்தில் அவர்கள் அதைத்தான் தொடங்கியிருக்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் மட்டுமல்ல; திண்டுக்கல் மாவட்டம், பெருமாள்பட்டி, அபிராமியம்மன் கோவில் என்று தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். எனவே தான் தூக்கிலா போடச் சொன்னேன், இடிக்கவா சொன்னேன் என்பதெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிற காரணத்தினால் தான் தமிழ்நாடு அரசு உறுதியாகவும், சரியாகவும் இந்த நிலைபாட்டை எடுத்திருக்கிறது. அதற்காக தமிழக அரசு பாராட்டப்பட வேண்டும்.
`நீதிமன்றம் சொன்னால் அமல்படுத்த வேண்டியது தானே, என்னிடம் ரௌத்திரம் காட்டாதீர்கள்’ என்றும் பேசியிருக்கிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மணிப்பூரில் இப்படித்தான் ஒரு தீர்ப்பு வந்தது. அங்குள்ள மெய்ட்டி இனத்தவருக்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டுமென்று ஆணையிட்டார்கள். அங்கு தமிழ்நாட்டில் இருப்பது போன்று ஒரு அரசாங்கம் இல்லை.
மாறாக, விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் அல்லது இருக்கட்டும் என்று நினைத்து அந்த ஆணையை நிறைவேற்ற புகுந்தார்கள். இரண்டரை வருடமாக மணிப்பூர் எரிந்து கொண்டே இருக்கிறது. 238 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 200க்கும் மேற்பட்ட வழிபாட்டு தலங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன அல்லது எரிக்கப்பட்டன. இப்போதும் அமைதி திரும்பவில்லை. சொந்த மாநிலத்திலேயே 70 ஆயிரம் பேர் அகதிகளாக்கப்பட்டனர். பின்னர் அந்த ஆணையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது என்பது வேறொரு விசயம். ஆனால், அமல்படுத்தாமலேயே இருந்திருந்தால் இத்தனை அழிவுகள், அவமானங்கள் நேர்ந்திருக்காது. எனவே தான் சொல்கிறோம் மீள முடியாத சேதங்களை இந்த தீர்ப்பு உருவாக்கும் என்று.

அடுத்ததாக, இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள்கையாண்ட முறை வியப்பளிக்கிறது. ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் 2014ல் சொன்ன தீர்ப்புக்கு மாறாக இப்போது தீர்ப்பளித்திருக்கிறார். எச்சில் இலையில் புரளும் விவகாரத்திலும் இரண்டு நீதிபதிகள் சொன்னதற்கு மாறாக புரண்டால் புண்ணியம், புரளுட்டும் என்று இவர் தீர்ப்பு சொன்ன பிறகு உச்ச நீதிமன்றம் அதை மாற்றியதை மறந்திருக்க முடியாது. பாஸ்போர்ட் சம்பந்தமான ஒரு வழக்கில் அண்ணாமலையை வானளாவ புகழ்ந்ததும், திரு டேவிட்சன் ஆசிர்வாதத்தை தேவையற்ற முறையில் இழுத்து விட்டதும் தமிழகம் அறிந்திருக்கிறது.
பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மைக்கேல்பட்டியில் ஒரு பள்ளியில் படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதில் மதமாற்ற நிர்ப்பந்தம் இருப்பதாகச் சொல்லி தமிழ்நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் செய்தது. தேசிய குழந்தைகள் ஆணையம் வந்தது. பார்க்கிற யாருக்கும் ஆமாம். மத மாற்ற நிர்ப்பந்தம் தான் இறப்புக்கு காரணம் என்ற தோற்றத்தை உருவாக்கினார்கள். நீதிபதி சுவாமிநாதன் அவர் பங்குக்கு தமிழ்நாடு அரசு, காவல்துறை, சிபிஐ யாரையும் கேட்காமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். வெகுகாலம் கழித்து முடிவு வந்தது. மத மாற்ற நிர்ப்பந்தம் அதனால் தற்கொலை என்பது வடிகட்டிய பொய் என்று வந்து விட்டது. அண்ணாமலைக்கு ஆதரவாகத்தான், பாஜகவிற்கு உதவுவதற்காகத் தான் அந்த தீர்ப்பே வழங்கப்பட்டதாக பலருக்கும் ஐயம் எழுந்தது.

பொதுமேடைகளில் பேசும் போது வேதம் கற்றவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்று நீதிபதி சுவாமிநாதன் பேசியது காணொளியாகவே காணக் கிடக்கிறது. அதாவது வேதம் கற்காதவர்கள் தவறு செய்பவர்களாக இருப்பார்கள் என்பது தான் அதன் தர்க்கரீதியான பொருள். இது மனுஸ்மிருதியில் வக்கிரமான நிலைபாடு. எந்தவொரு நிலைபாட்டையும் தனி நபர் என்கிற முறையில் யாரும் கொண்டாடிக் கொண்டு போகட்டும். ஆனால், சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிற இடத்தில் தன் சொந்தக் கருத்தை தீர்ப்பின் அம்சமாக மாற்றுவது எந்த வகையிலும் ஒரு நீதிபதிக்கு பொருத்தமான இயல்பு அல்ல.
நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் இந்த வழக்கில் காட்டிய தீவிரம், வேகம், பயன்படுத்திய வார்த்தைகள் அனைத்தையும் பார்க்கிற போது அது ஒன்றும் தற்செயலானது என்று கருதமுடியவில்லை. ஆட்சித் தலைவரும், ஆணையரும், ஆலய அதிகாரியும் ஐந்து நிமிடத்தில் ஆஜராக வேண்டுமென்பது தீபம் ஏற்றியதை பற்றி இரவு 10.30 மணிக்கு மீண்டும் நீதிமன்றம் விசாரிக்கும் என்பதெல்லாம் இயல்பானது தானா?. இயற்கை நியதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்திற்கு போவோம்.
ஆனால், திரு ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் இயற்கை நீதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினாரா?. காணொளியில் விளக்கம் கேட்டு நீதிமன்ற அவமதிப்பில் தீர்ப்புச் சொல்வது நியாயம் தானா?. பாண்டிய நெடுஞ்செழியன் உள்நோக்கமின்றி அவசர கதியில் செயல்பட்டதை அதே மதுரையில் வரலாறு பதிவு செய்திருக்கிறது. இன்று கண்ணகிக்கு பதிலாக தமிழகத்தின் மதச்சார்பற்ற கட்சிகள் அதே கேள்வியோடும், கையில் உண்மையோடும் எழுந்து நிற்கிறது.

எனவே, இந்த வழக்கு என்பது சங்பரிவார் வழக்கமாக கையாளும் வழிமுறை தான். நீதிமன்றம் அதற்கு துணைபோய் விடக் கூடாது. தமிழகத்தை நிரந்தரமான மோதல் பூமியாக மாற்றி விடக் கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாடு அரசாங்கம் உறுதியாக நிற்கிறது. தமிழகம் மணிப்பூர் ஆகாமல் காப்பாற்றிய தமிழ்நாடு அரசின் முயற்சி பாராட்டுக்குரியது. தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற நல்லிணக்க பாரம்பரியம் தொடர வேண்டும். தொடரும். தமிழ்நாட்டு மக்கள் வெல்வார்கள்.!
















