சர் சி.பி.ராமசாமி அய்யர் பங்கும்... அபசகுனம் விவாதமும்; அணையின் அடித்தளம் | அணை ...
`எங்க மக்கள் கல்வியை முழுமையா எல்லாரும் ஏத்துக்கணும்' - நாடோடிப் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ரோஸி!
தமிழகத்தில் ஏராளமான பழங்குடியின சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களில் காடுமலைகளில் நிலையாக இருப்பவர்கள் தவிர பருவகாலங்களுக்கு ஏற்ப இடம்பெயர்ந்து வாழும் நாடோடிப் பழங்குடியினரும் இருக்கின்றனர்.
அவ்வாறு நாடோடிக்குழுகளாக வாழ்ந்து வந்தவர்கள் தான் நரிக்குறவர் பழங்குடியின சமூகத்தினர். இன்று பேருந்து நிலையங்கள், ஊர்த்திருவிழாக்கள், சந்தைகள் போன்றவற்றில் கைவினையாக செய்யப்பட்ட பாசி மணிகளையும், ஊசி மணிகளைகளையும் விற்று தங்களது வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
நாடோடிகளாக திரிந்தவர்கள் இன்று பலர் நிரந்தரமாக ஓரிடத்தில் குடியேறி குடியிருப்புகளாக வாழத் தொடங்கியிருக்கின்றனர். அவ்வாறு வண்ணமயமான சிறிய மணிகளை விற்று வாழ்க்கையை ஓட்டினாலும் குறைந்த வருமானமே ஆயினும் தன்னுடைய உழைப்பையும் நம்பிக்கையையும் இழந்துவிடாமல் உறுதியோடு வாழும் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ரோஸியிடம் பேசினோம்.

“ திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்மையார் குப்பத்தில் தான் இருக்கிறேன். கடந்த முப்பது வருடத்துக்கும் மேலாக வாரச்சந்தை, திருவிழாக்கள்ன்னு மக்கள் அதிக கூடுற இடங்களில் அலங்காரப் பொருட்களை கையாலயே செஞ்சி விற்பனை செஞ்சி அதுல கிடைக்கிற வருமானத்தை கொண்டு தான் குடும்பத்தை நடத்தி வருகிறேன்.
சில வருசத்துக்கு முன்னால என்னோட கணவர் இறந்துட்டார். எனக்கு இரண்டு மகன்கள் ஒரு மகளும் உண்டு. இப்போது அவர்கள் தான் என் உலகமாக இருக்கிறார்கள். எங்க காலத்துல ஏழு, எட்டு வயதிலேயே கல்யாணம் செய்து வைத்திடுவார்கள். ஆனால் இப்போ கொஞ்சம் மாறி பிள்ளைகள் பருவமடைந்த பிறகே கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. அதைப்போல முன்னாடி ஆண்கள் தான் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்து கல்யாணம் பண்ணுவாங்க ஆனா இப்போ பெண்கள் கிட்ட வரதட்சணை கேட்குறாங்க.

இதனால நிறைய பெண்களோட கல்யாணம் தடைபடுது. சில விசயங்கள் மாறி இருந்தாலும் எங்களோட வறுமை மட்டும் இன்னும் போகல. சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் என்னைப்போல பெண்களுக்கு உடல்சத்து எப்படி கிடைக்கும்? உடல்ல சத்துக்குறைபாடு, குடும்பச் சுமை, பணக் கஷ்டம்ன்னு எல்லாத்தையும் தாண்டி தான் வாழ வேண்டிருக்கு.
இங்க எல்லாருக்கும் சாதாரணமா கிடைக்கிற அடிப்படை வசதிக்குக்கூட போராட வேண்டிய நிலைதான் இருக்கிறோம். குடிநீருக்கு தெரு குழாய் வசதிக்கூட இல்லாம தினமும் சிரமப்பட்டு ரொம்ப நடந்து போய் எடுத்து வந்து தான் பயன்படுத்த வேண்டிருக்கு. இதற்காக பல மனுக்கள் கொடுத்து கோரிக்கை வைத்தும் இதுவரைக்கும் எந்த மாற்றமும் நடக்கல" என்றவர் சிறிது நேரம் இடைவெளிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்.

``எங்களுக்கு சிறிய உதவி கிடைச்சாலே எங்க வாழ்க்கை சுலபமாகும். அரசு வழங்குகிற மாணவர்களுக்கான ஊக்கத் தொகைகளும் இங்க இருக்கிற மாணவர்களுக்கு சரியா கிடைக்கிறதில்லை. இன்னமும் எங்க சமூகத்துல கல்வியை முழுமையா ஏற்றுக்கொள்ளுற மனநிலை வரலன்னு தான் சொல்லணும். குறிப்பா பெண்களை அதிகம் படிக்கவைத்தா நல்ல வரன் கிடைக்கிறதுல சிக்கல் வரும்ன்னு பழைய எண்ணங்களோடே நிறைய குடும்பங்கள் இருக்கிறாங்க. இதனால பல பெண் பிள்ளைகளோட கனவு பள்ளிப்படிப்போட பாழாப்போகுது. முன்னாடி ஆண்கள் வேட்டையாடி, ஊர் ஊராகச் சுற்றி நாடோடிகளாக வாழ்ந்திட்டு வந்தோம்.

ஆனா இன்னைக்கு ஒரே இடத்துல தங்கி தான் வாழ்றோம் இப்பயும் கல்விங்கிறது இங்க உள்ள பிள்ளைகளுக்கு கிடைக்காத ஒன்றாக தான் இருக்கு. எங்களுக்காக அரசு சார்புல நிறைய திட்டங்கள் இருந்தாலும், எல்லாருக்கும் அது போய் சேர்வதே இல்லை. இன்னும் சிலருக்கு அது என்ன திட்டம்ங்கிறதே தெரியுறது இல்ல. இதுக்கெல்லாம் கல்வி தான் தீர்வா இருக்க முடியும்ன்னு நினைக்கிறேன். எங்க மக்களும் கல்வி மூலமா நல்லா நிலைமைக்கு வருவாங்கன்னு நம்புறேன்.” என்ற ரோஸியின் முகத்தில் அவ்வளவு நம்பிக்கை ஒளி.
-தர்ஷினி . சி





















