``ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து அவருக்கு பொருத்தமானதல்ல" - தஸ்லிமா நஸ்ரீன்
``எனக்கு நோபல் பரிசு தரவில்லை... அதனால் 'அமைதி' பேச்சுக்கே இடமில்லை" – வைரலாகும் ட்ரம்ப் கடிதம்!
டென்மார்க் கட்டுப்பாட்டில், சுயராஜ்யத்தில் இருக்கும் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதற்கிடையில், உலகம் முழுவதும் 8 போர்களை நிறுத்தியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு தனக்குக் கொடுக்க வேண்டும் என, ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
ஆனால், நோபல் கமிட்டி, கடந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியது. இந்த நிலையில், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து, தனக்கு வழங்கப்பட்டு இருந்த அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கினார். இந்த விவகாரம் உலக அரங்கில் நகைப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவுக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. அந்தக் கடிதத்தில், ``சுமார் 8 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், எனக்கு அந்தப் பரிசை வழங்க வேண்டாம் என்று உங்கள் நாடு முடிவு செய்துவிட்டது. அதனால் இனிமேல் 'அமைதி' பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக நான் உணரவில்லை.
இப்போது அமெரிக்காவிற்கு எது தேவையோ அதைப் பற்றி மட்டுமே நான் சிந்திப்பேன். டென்மார்க்கால் கிரீன்லாந்தை ரஷ்யா, சீனாவிடமிருந்து பாதுகாக்க முடியாது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படகு அங்கு தரையிறங்கியது என்பதற்காக அந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமாகிவிடாது. அமெரிக்காவின் படகுகளும் அங்கே தரையிறங்கியுள்ளன. மேலும், கிரீன்லாந்து மீது அமெரிக்காவிற்கு முழுமையான கட்டுப்பாடு இல்லையென்றால், உலகம் பாதுகாப்பாக இருக்காது.
நேட்டோ உருவான காலத்திலிருந்து வேறு எவரும் செய்யாத பல நன்மைகளை நான் செய்துள்ளேன். இப்போது நேட்டோ எனக்காக ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது. கிரீன்லாந்து விவகாரத்தில் நேட்டோ உதவ வேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கடிதத்தின் உண்மைத் தன்மையை முன்னணி செய்தி நிறுவனங்களால் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், சமூக வலைதளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் இதுவே இப்போது விவாதப் பொருளாக உள்ளது.














