சுவைக்கத் தூண்டும் சாட் : `சேவ் பூரி' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?
எம்ஜிஆர் பிறந்தநாளிலேயே உயிர்நீத்த தீவிர ரசிகர் - யார் இந்த `எம்ஜிஆர்' இசக்கி?
தென்காசி மாவட்டம், கடையம் அருகில் அமைந்துள்ளது பாப்பான்குளம் கிராமம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இசக்கி, அவர் தி.மு.கவில் இணைந்த போது தி.மு.கவில் இணைந்தார். பின்னர், அ.தி.மு.க என்ற தனிக்கட்சி தொடங்கிய பின்னர், அ.தி.மு.கவிலும் இணைந்து பயணித்து வந்தார்.
இவர், அப்பகுதியில் “எம்.ஜி.ஆர் உணவகம்” என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த உணவகத்தை அ.தி.மு.கவின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் திறந்து வைத்துள்ளார்.

அந்த உணவகத்திற்குள் நான்கு புறமும், 100-க்கும் மேற்பட்ட எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களை மாட்டி உணவகத்தை ஒரு அருங்காட்சியமாகவே மாற்றி வைத்திருந்தார். இதனால், இவரை ஊர் மக்கள் “எம்.ஜி.ஆர் இசக்கி” என்றே அழைத்து வந்தனர்.
இவர், அ.தி.மு.கவில் முன்னாள் ஒன்றிய அவைத்தலைவராகவும், கவுன்சிலராகவும் பதவி வகித்தாலும் எம்.ஜி.ஆரின் தொண்டன் என்ற மகிழ்ச்சியிலேயே சுழன்று வந்துள்ளார். வயது மூப்பும் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இசக்கி, நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்து சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பி ஓய்வில் இருந்தார்.
இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் மற்றும் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் கொண்டாடினர். பிறந்த நாளன்று தன் உணவகத்தின் அருகில் தான் நிறுவிய எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவிக்க பூக்கடையில் ரோஜா மாலை ஆர்டர் செய்திருந்தார். மாலைக்காக காத்திருந்த அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

சில நிமிடங்களில் அவரின் உயிரும் பிரிந்தது. ”தலைவர் பிறந்தநாளில் அவரது தீவிர தொண்டனின் உயிர் பிரிந்து விட்டதே” என அப்பகுதி மக்கள் சோகத்துடன் பேசி வருகின்றனர். இத்துயரச் சம்பவம் பாப்பான்குளம் கிராமமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்று மாலையே அவரின் இறுதிச்சடங்கும் நடந்து முடிந்தது.




















