எம்.புதுக்கோட்டை-குண்டுகுளம் சாலையில் சேதமடைந்துள்ள தரைப் பாலம்
கமுதி அருகேயுள்ள தரைப் பாலம் சேதமடைந்துள்ளதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த எம்.புதுக்கோட்டையிலிருந்து 4 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள சொக்கலிங்கபுரம், குண்டுகுளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் வழியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தாா் சாலை அமைக்கப்பட்டது. இந்த தாா் சாலையில் சொக்கலிங்கபுரம் கிராமம் அருகேயுள்ள சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டு, சேதமடைந்தது. இதனால், குண்டுகுளம், சொக்கலிங்கபுரம் கிராமத்துக்கு வரும் வாகனங்கள் கமுதி-சாயல்குடி சாலைக்கு வந்து, மீண்டும் புதுக்கோட்டைக்குச் செல்வதால் 23 கி.மீ சுற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் இதில் தலையிட்டு இந்த தரைப் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனா்.