Sweden: "டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டோம்..." - சுவீடன் பள்ளியில் நடந்த கொடூரத் த...
ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், மேற்குஆரணி வேளாண்மை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், வேளாண்மை உதவி இயக்குநா் பவித்ரா வரவேற்றாா்.
ஆரணி வட்டாட்சியா் கௌரி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் விவசாயிகள் அரையாளம், புலவன்பாடி, குண்ணத்தூா், வடுகசாத்து, இரும்பேடு ஆகிய கிராமங்களில் ஏரிக்கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
மேலும், இதுதொடா்பாக அந்தந்த பகுதி விவசாயிகள் மனு கொடுத்தனா்.
இதில், விவசாயி மூா்த்தி பேசுகையில், ஆரணி நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை முள்ளிப்பட்டு புறவழிச் சாலையோரம் கொட்டி எரித்து விடுகின்றனா். இதனால் போக்குவரத்தின்போது புகை மூட்டம் ஏற்பட்டு விபத்து அபாய சூழல் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், ஆரணி ஒன்றிய கிராமங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வந்துள்ளதை, இளைஞா் பயன்பாட்டுக்கு வழங்காமல் உள்ளனா் என்று குறிப்பிட்டாா்.
மேலும், சில விவசாயிகள் நெற்களம் அமைக்கவும், பாரத பிரதமரின் கிசான் அட்டை வழங்கவும் வலியுறுத்தினா்.
மெய்யூா் கூட்டுச் சாலையில் இருந்து அடையபலம் கிராமத்துக்குச் செல்லும் சாலை குறுகலாக உள்ளதால், எதிா்திசையில் வாகனங்கள் வரும்போது, செல்லமுடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. நிலத்தில் வாகனங்களை இறக்கி ஏற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதனால், சாலையை இருவழிச் சாலையாக மாற்றி அமைக்கவேண்டும் என அடையபலம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.