ஆதார், பான், பாஸ்போர்ட்டெல்லாம் அல்ல... இவைதான் குடியுரிமைக்கான ஆதாரம்! - மத்திய...
ஏ.ஆர். ரஹ்மான் வரலாற்றுச் சாதனை: `கோல்டன் பிளேட்’ விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர்!
கலைக்கும் இசைக்கும் எல்லைகள் இல்லை என்பதைத் தனது ஒவ்வொரு மெட்டிலும் நிரூபித்து வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஒரு இசையமைப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக மாறியிருக்கும் ரஹ்மானின் சாதனைகள் எண்ணிலடங்காதவை. அவரது புகழ் மகுடத்தில் புதிதாக ஒன்று சேர்ந்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க மெலன் அரங்கில், 'அமெரிக்கன் அகாடமி ஆஃப் அச்சிவ்மென்ட்' (American Academy of Achievement) அமைப்பின் 56-வது சர்வதேச சாதனையாளர்கள் உச்சிமாநாடு நடைபெற்றது.
இந்த விழாவில் உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் பீட்டர் ஜாக்சன் ('Lord of the Rings' இயக்குநர்) கைகளால் ரஹ்மான் 'கோல்டன் பிளேட்' (Golden Plate Award) விருதினைப் பெற்றார்.
இந்த விருது ஆண்டுதோறும் சாதாரணமாக வழங்கப்படும் ஒன்றல்ல. உலக அளவில் தங்கள் துறைகளில் மகத்தான சாதனைகளைச் செய்து, வரலாற்றை மாற்றி அமைத்து, பல தலைமுறைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் ஆளுமைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் மிக உயரிய கௌரவம் இது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற வரலாற்றுச் சாதனையை ரஹ்மான் படைத்துள்ளார்.

இதற்கு முன் இந்தியாவிலிருந்து சினிமாவுக்காக சத்யஜித் ரே, விளையாட்டுக்காக சச்சின் டெண்டுல்கர், பொருளாதாரத்திற்காக அமர்த்தியா சென் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய மேதைகள் மட்டுமே இந்த விருதினை வென்றுள்ளனர்.
பிரான்சிஸ் போர்டு கப்போலா (சினிமா), மாயா ஏஞ்சலோவ் (இலக்கியம்), ஹருகி முரகாமி (எழுத்தாளர்), மைக்கேல் ஜே. ஃபாக்ஸ் (நடிகர்) போன்ற உலகப் புகழ்பெற்ற ஆளுமைகள் பெற்ற அதே மேடையில், இப்போது ரஹ்மானும் இடம் பிடித்துள்ளார்.
விருதைப் பெற்றுக்கொண்ட பின் ரஹ்மான் பேசிய வார்த்தைகள், அவரது பெருந்தன்மையைக் காட்டியது. "இந்த அங்கீகாரம் எனக்கு மிகவும் ஆழமான அர்த்தத்தைக் கொடுக்கிறது. என்னை இந்த அளவுக்கு உயர்த்திய இந்திய மக்களுக்கும், இந்திய தேசத்திற்கும், நான் பணியாற்றிய இயக்குநர்கள், எனது ரசிகர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன்.
இது எனக்குக் கிடைத்த பெருமை மட்டுமல்ல; நான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ளவும் வளரவும் கொடுக்கப்பட்ட ஒரு நினைவூட்டல். இந்தியாவை இந்த உலக மேடையில் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் நெகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்." என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது நித்தேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்திற்காக, ஹாலிவுட்டின் மற்றொரு லெஜண்டரி இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்தத் தருணத்தில் அவருக்கு இந்தச் சர்வதேச விருது கிடைத்திருப்பது அவரது உலகளாவிய செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விருதுக்கு ரஹ்மான் 100% தகுதியானவர் என்பதை அவருடைய 30 ஆண்டுகால இசைப் பயணமே நமக்கு உணர்த்தும். 'ரோஜா'வில் தொடங்கி இன்றுவரை, இந்திய இசையின் பாரம்பரிய ஆன்மாவை, உலகளாவிய நவீன தொழில்நுட்பத்தோடு கலந்து உலக மேடைகளில் ஒலிக்கச் செய்தவர் ரஹ்மான். இரண்டு ஆஸ்கர் விருதுகள், இரண்டு கிராமி விருதுகள், கோல்டன் குளோப், பாஃப்டா (BAFTA) என உலக அளவில் திரைப்பட இசைக்கான அத்தனை உச்ச விருதுகளையும் வென்ற ஒரே இந்தியர் அவர்தான்.
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எந்த எல்லையுமின்றி பயணிக்கும் இவர், மேற்கத்திய நாடுகளால் மெட்ராஸின் மொஸார்ட் (Mozart of Madras) என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இந்தியக் கலைத் திறமையின் உலகளாவிய தூதராக (Global Ambassador of Indian Artistry) அவர் தொடர்ந்து இயங்குவதே இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டதற்கான முக்கியக் காரணம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த வெற்றி, தனிப்பட்ட ஒரு கலைஞனின் சாதனை மட்டுமல்ல; இது ஒட்டுமொத்த இந்தியக் கலைத்துறைக்கும், குறிப்பாகத் தமிழர்களுக்கும் கிடைத்த மாபெரும் உலகளாவிய அங்கீகாரம். தன் மண்ணின் இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்த ஒரு கலைஞனை, உலகமே எழுந்து நின்று கொண்டாடும் உன்னதமான தருணம் இது.
இந்தியத் திறமைகளுக்குப் புதிய கதவுகளைத் திறந்து வைத்துள்ள ரஹ்மானின் இந்த வெற்றி, வருங்காலத் தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு ஒரு நிரந்தர ஊக்க சக்தியாக விளங்க நாம் எல்லாரும் வாழ்த்துவோம்.

















