ராமதாஸுடன் EPS, அன்புமணியுடன் BJP, புது டீல், இடையில் Stalin! | Elangovan Explai...
``ஒரு தவறும் செய்யவில்லை; அடி மேல் அடி, நொறுங்கிப் போனேன்" - மத தாக்குதல் பற்றி ஜெமிமா ஓபன்!
ஜெமிமா ரோட்ரிக்ஸ்... இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இனி மறக்க முடியாத பெயர்.
நடந்து முடிந்த மகளிர் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி முதல்முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்று அரைநூற்றாண்டுக் கனவை நனவாக்கியிருக்கிறதென்றால் அதில் தவிர்க்கமுடியாத பங்களிப்பைக் கொடுத்தவர் ஜெமிமா.
இந்த லீக் போட்டியில் வென்றால்தான் அரையிறுதிக்குச் செல்ல முடியும் என்ற நெருக்கடியான போட்டியில் நாட் அவுட் வீராங்கனையாக 76 ரன்கள் அடித்தார்.

அடுத்து அரையிறுதியில், அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்த 339 ரன்கள் டார்கெட்டை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணியில் 48 ஓவர்கள் களத்தில் நின்று நாட் அவுட் வீராங்கனையாக 127 ரன்கள் அடித்து அணியை இறுதிப் போட்டிக்கு கொண்டுசென்றார்.
அந்த அரையிறுதிப் போட்டி முடிவில்தான் பைபிள் வாசகம் ஒன்றை மேற்கோள்காட்டி அவர் பேசினார். அதற்குச் சிலர் மத ரீதியில் அவர்மீது வன்மத்தைக் கொட்டினர்.
ஏற்கெனவே, மும்பையின் பழமையான கர் ஜிம்கானா க்ளப்பில் ஜெமிமா உறுப்பினராக இருந்தபோது, அவரது தந்தை தனது மகளின் பெயரைப் பயன்படுத்தி ஹாலை (Hall) வாடகைக்கு எடுத்து மதமாற்ற கூட்டத்தை நடத்தியாக சிலர் குற்றம்சாட்டினர்.
ஆனால், அதில் உண்மை எதுவும் இல்லை எனச் சம்பந்தப்பட்ட பலரும் கூறிவிட்டனர். இருப்பினும் அந்தக் குற்றச்சாட்டைக் காரணம் காட்டி ஜெமிமா அந்தக் க்ளப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

தற்போது உலகக் கோப்பையில் ஜெமிமா பைபிள் வாசகத்தைக் குறிப்பிட்டதால் சிலர் வேண்டுமென்றே மீண்டும் அவரை மத ரீதியில் வார்த்தைகளால் தாக்கினர்.
ஆனால் அதையெல்லாம் கடந்து இன்று சாம்பியனாக வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ஜெமிமா, அந்த அந்தக் க்ளப் விவகாரத்தில் என்ன நடந்தது, அது தன்னை எந்த அளவுக்குப் பாதித்தது என்பது பற்றித் தற்போது இந்தியா டுடே ஊடகத்திடம் மனம் திறந்திருக்கிறார்.
அந்த நேர்காணலில் ஜெமிமா, ``உண்மையில் அது எப்போது நடந்தது என்று எனக்கு நினைவிருக்கிறது. அதை எதிர்கொள்வது என்னுடைய விஷயம். ஆனால், நாங்கள் செய்யாத ஒரு விஷயத்திற்காக என் பெற்றோரை அதில் இழுத்தது மிகவும் வேதனையாக இருந்தது.
அந்த நேரத்தில் நாங்கள் செய்தவை அனைத்தும் விதிமுறைகளின்படிதான் இருந்தது. அதற்கான ஆதாரங்களும் எங்களிடம் இருந்தன.
ஆனால் எனக்கெதிராகவும் என் குடும்பத்துக்கெதிராகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எங்களை மிகவும் பாதித்தன. ஏனெனில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை.

துபாயில் நடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு அந்த சம்பவம் நடந்தது. அந்தத் தொடரில் நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை.
தனிப்பட்ட முறையில் என் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நான் ஆடாததால் மிகவும் சோர்வாக உணர்ந்தேன்.
அந்த சமயத்தில் திடீரென்று செய்திகளில் மக்கள் என்னைப் பற்றி, என் குடும்பம் மற்றும் சர்ச் பற்றி மோசமான விஷயங்களைச் சொல்வதைப் பார்த்தேன். அது என்னை நொறுக்கியது.
அழுதேன், என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. அடி மேல் அடியை உணர்ந்தேன்" என்று கூறினார்.




















