மின்னணுப் பெட்டி முதல் மக்கள் மன்றம் வரை: தேர்தல் அனுபவங்கள்
ரூ.2.6 கோடிக்கு குஜராத் அதிரடி வீரரை ட்ரேட் செய்த மும்பை; கூடுதலாக LSG-யிலிருந்து ஒரு ஆல்ரவுண்டர்!
அடுத்தாண்டு ஐ.பி.எல் சீசனுக்கான மினி ஏலம் டிசம்பரில் நடக்கவிருக்கிறது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் ஏலத்தில் விடும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பித்தாக வேண்டும்.
இவ்வாறான சூழலில்தான், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ட்ரேடிங் முறையில் ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்கப்போவதாகத் தீவிரமாகப் பேச்சு அடிபடுகிறது.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ அணியிலிருந்து ஒரு ஆல்ரவுண்டரையும், குஜராத் அணியிலிருந்து மிடில் ஆர்டர் அதிரடி வீரரையும் ட்ரேடிங் முறையில் வாங்கி சைலன்ட்டாக சம்பவம் செய்திருக்கிறது.
இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ஷர்துல் தாகூர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோர் தங்களது அணியில் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
மும்பை அணி Cash Deal (பணப் பரிமாற்றம்) முறையில் இந்த ட்ரேடிங்கை செய்திருக்கிறது. ஷர்துல் தாகூரை ரூ. 2 கோடி கொடுத்தும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டை ரூ. 2.6 கோடி கொடுத்தும் மும்பை அணி வாங்கியிருக்கிறது.

ஐ.பி.எல்லில் 105 போட்டிகளில் 107 விக்கெட்டுகள் மற்றும் 300+ ரன்கள் அடித்திருக்கும் ஷர்துல் தாகூர் 2023, 2024 சீசன்களில் சுமாராக ஆடியிருந்தாலும் கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பியிருந்தார் என்பதும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் மிடில் ஆர்டரில் அதிரடியாக 157 ஸ்ட்ரைக் ரேட்டில் 291 ரன்கள் அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



















