செய்திகள் :

DMK 75: 'இந்த உரையாடல் அவசியமானது!' அறிவுத் திருவிழா ஒரு விரிவான பார்வை

post image

'கதை கேளு... கதை கேளு... ஒரு கதை சொல்றோம் கேளு!' என பறையடித்தபடி ஒரு கருஞ்சட்டை குழு மேடையேறுகிறது. சிவப்புத் துண்டை தோளில் போர்த்திய ஒரு பெண்மணி, 'கட்சின்னா என்னன்னு தெரியுமா?' எனக் கேட்கிறார். காவி நிற துண்டு போர்த்திய நபர் ஒருவர், 'மசூதியை இடிக்குறது. மதக்கலவரத்தை தூண்டுறது.' என்கிறார். பறை ஒலிக்கிறது.

திமுக அறிவுத்திருவிழா
திமுக அறிவுத்திருவிழா

மீண்டும் 'கட்சின்னா என்ன தெரியுமா?' கேள்வி. இன்னொரு நபரோ, 'முதலில் சின்னம்மா அணியில் இருப்பது. அதன்பிறகு அவர் அக்கா மகன் அணியில் இருப்பது. பின்னர் அவர்களை கழட்டிவிட்டு பதவிக்கு வருவது.' என்கிறார். மீண்டும் பறை. மீண்டும் கேள்வி. 'கட்சின்னா தமிழனா இல்லையான்னு ப்ளட் டெஸ்ட் எடுக்குறது...' 'கட்சின்னா கரண்டு கம்பத்துல ஏறுறது' எனஅடுத்தடுத்து கூறுகிறார்கள். கடைசியாக திமுகவை பிரதிபலிக்கும் அந்த சிவப்பு துண்டு போர்த்திய பெண்மணி, 'கட்சின்னா மக்களின் பண்பாட்டு சமூக பொருளாதார சூழலை மாற்றியமைப்பது. வெற்றியோ தோல்வியோ மக்களோடு களத்தில் நிற்பது' என்கிறார். பறை அதிர்கிறது.

இப்படி தொடங்கும் அந்த நாடகம் புத்தர், பெரியார், அம்பேத்கர் தொட்டு பலரையும் பேசி சமகால அரசியலை பகடி செய்து முடிக்கிறது. திமுகவின் இளைஞரணி ஏற்பாடு செய்திருக்கும் திமுக பவள விழா அறிவுத்திருவிழாவின் தொடக்கவிழாவில் திணை நிலவாசிகள் குழு அரங்கேற்றிய நாடகம் இது. அன்று மட்டுமல்ல, அன்று தொடங்கி ஒரு வாரமாக கலை இலக்கிய நிகழ்ச்சிகளோடு முற்போக்கு புத்தகக் கண்காட்சி என்ற ஒன்றையும் வள்ளுவர் கோட்டத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

கருணாநிதி - அண்ணா
கருணாநிதி - அண்ணா

அறிவுத்தளத்தில் இயங்கி எழுத்தின் மூலமும் பேச்சின் மூலம் தங்களின் அரசியலை வெகுஜனத்துக்கு கொண்டு சேர்த்து ஆட்சியைப் பிடித்தது திமுக. கலைஞர் உடல் நலிவுறும் வரைக்குமே எதோ ஒரு விதத்தில் திமுக அதன் பாரம்பரிய செயல்பாடுகளோடு தொடர்பிலேயே இருந்தது. கலைஞரின் கண் பார்வையில் முரசொலி இருக்கிறது. உடன்பிறப்புகளுக்கு கடிதம்' என கலைஞரே அன்றைய அரசியல் சூழல்களை விவரிக்கிறார் எனும் நெருக்கம் தொண்டர்களுக்கு இருந்தது. ஆனால், கலைஞர் நலிவுற்ற பிறகு அரசியல் களத்தைத் தாண்டி அறிவுத்தளத்தில் தங்களின் கொள்கைகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்துவதில் திமுக எங்கேயோ சுணங்கி நின்றதைப்போல தோன்றியது.

விஜய் பின்னால் திரளும் இளைஞர்கள் அரசியலற்று நிற்கிறார்கள் என திமுகவினர் விமர்சித்த போது, 'இத்தனை ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திராவிட கட்சிகள் ஏன் இளைஞர்களை அரசியல்படுத்தவில்லை? ஏன் அவர்கள் இந்த கால இளைஞர்களோடு உரையாடத் தவறினார்கள்?' எனும் கேள்வி எழுந்ததை தவிர்க்கவே முடியவில்லை.

கருத்தரங்கம்
கருத்தரங்கம்

இந்தப் புள்ளியியிலிருந்துதான் திமுகவின் இளைஞரணி ஏற்பாடு செய்திருக்கும் 'அறிவுத்திருவிழா' கவனத்தை ஈர்க்கிறது. கடந்த ஞாயிற்றுக்ஸகிழமை ஒரு நாள் முழுவதும் அங்கே செலவிட்டிருந்தேன்.1500 பேர் அமரக்கூடிய கருத்தரங்கம் அது. முழுக்கவும் இளைஞரணி உறுப்பினர்களால் அரங்கம் நிறைந்திருந்தது. அத்தனை பேரும் தன்னிச்சையாகவெல்லாம் வந்திருக்கவில்லை. இளைஞரணி அமைப்புச் செயலாளர்கள் உத்தரவின் பேரில் உறுப்பினர்கள் திரட்டப்பட்டிருந்தனர். வருகைப் பதிவேட்டில் வந்தவர்களின் விவரங்களைப் பதிவுசெய்து கொண்டனர்.

கூட்டம் கலையக் கூடாது என்பதற்காக சில சமயங்களில் அத்தனை கதவுகளையும் பூட்டி வைத்தார்கள். ஆனால், அப்படி பூட்டி வைத்து அவர்கள் பேசிய விஷயங்கள் முக்கியமானவையாக இருந்தது. நாடக்கலையின் வழி திராவிட இயக்கங்கள் எப்படி வளர்ந்ததென மு.ராமசாமி அத்தனை செறிவாக உரையாற்றினார். அந்த காலத்தில் நாடகத்தில் புரட்சி என்கிற வார்த்தைக்கு பதில் கலகம் என்கிற வார்த்தையை பயன்படுத்தினால் அதிகார வர்க்கம் எப்படி பொங்கும் என உதாரண சம்பவங்களோடு விளக்கினார்.

கருத்தரங்கம்
கருத்தரங்கம்

இந்தி எதிர்ப்பு, தேவதாசி முறை ஒழிப்பு பற்றி கனிமொழி பேசினார். பெரியார் மீதெழும் விமர்சனங்களின் உள்ளீடற்ற தன்மையை எழுத்தாளர் சுகுணா திவாகர் விளக்கினார். சட்டமன்ற உறுப்பினர் எழிலன் சமகால அரசியல் விவாதமொன்றை நறுக்கென தொட்டார். 'இன்றைய இளைஞர்களை தற்குறி என கூறுவதை நிறுத்துங்கள். அவர்களெல்லாம் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இளைஞர்கள். அவர்களிடம் நாம்தான் உரையாட தவறிவிட்டோம்.' என சுயபரிசோதனையோடு அவர் முன்னெடுத்த வைத்த வாதத்துக்கு அரங்கமே கைதட்டியது.

இந்த கருத்தரங்கை முடித்துவிட்டு புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என உதயநிதியின் மேற்பார்வையில் திமுக பவள விழாவுக்காக கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேஜஸ்வி, அகிலேஷ், அரவிந்த் கெஜ்ரிவால் என பல அகில இந்திய தலைவர்களும் அந்தப் புத்தகத்திற்காக கட்டுரை கொடுத்திருக்கிறார்கள். பெரியாரிய அம்பேத்கரிய ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் திமுக குறித்து கட்டுரை எழுதியிருக்கிறார்கள். அந்த புத்தகத்திற்கும் நல்ல வரவேற்பு இருப்பதை பார்க்க முடிந்தது.

திமுக இளைஞர் அணி
திமுக இளைஞர் அணி

இந்தப் புத்தகத்தின் உருவாக்கம் குறித்தும் அறிவுத்திருவிழா பற்றியும் அதன் ஆலோசனைக்குழுவில் இருந்த மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கரிடம் பேசினேன். "காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு புத்தகத்துக்கான வேலையை கடந்த ஜூனிலேயே தொடங்கிவிட்டோம். வெறுமென திராவிட இயக்கப் பின்னணி சார்ந்தவர்களாக மட்டுமில்லாமல் இடதுசாரி, தலித் இயக்கப் பின்னணி உடையவர்களையும் உள்ளடக்கியதாகத்தான் புத்தகம் இருக்க வேண்டுமென உதயநிதி விரும்பினார்.

கிட்டத்தட்ட நூறு பேரிடம் இதற்காக கட்டுரையை வாங்கியிருக்கிறோம். வெறுமென துதிபாடும் கட்டுரைகளாக இல்லாமல் திராவிட இயக்கத்தின் முக்கியத்துவத்தை தேசிய அரசியலில் திமுகவின் தேவையை உணர்த்தும் வகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி தலைப்பை கொடுத்து கூடுதல் கவனம் செலுத்தியே கட்டுரைகளை சேகரித்தோம். சோனியா காந்தி, தேஜஸ்வி, லாலு பிரசாத் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோரெல்லாம் திமுகவை பார்க்கும் பார்வை அத்தனை ஆச்சர்யமாக இருக்கிறது. ராஜமன்னார் கமிட்டி மூலம் முதல் முதலாக ஒன்றிய மாநில அரசுகளின் உறவை அலசி ஆராய்ந்தது கலைஞர்தான். அதுதான் இன்றைக்கும் பல மாநிலங்கள் தங்களின் உரிமைக்குரலை ஒன்றிய அரசை நோக்கி எழுப்ப முன்னோடியாக இருக்கிறது.

ஆர்.விஜயசங்கர்

இது சுயமரியாதை இயக்கத்தின் 100 வது வருடம். ஆர்.எஸ்.எஸூக்கும் இது 100 வது வருடம். மக்கள் மனங்களை தத்துவார்த்தரீதியாக வெல்லவேண்டிய போராட்டம் ஒன்று இங்கே நடந்து கொண்டிருக்கிறது. திராவிட இயக்கங்கள் பேசும் சமூகநீதிதான் மக்களை ஒன்றிணைக்கிறது. ஆனால், அந்த சமூக நீதி தத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் திமுக மாதிரியான இயக்கம் எங்கேயோ தடுமாறிவிட்டது. இதை உதயநிதியிடமே கூறினேன். அவர்கள் தரப்புமே அதை உணர்ந்திருக்கிறார்கள்.

மேலும், இப்போது திராவிட இயக்கக் கருத்துகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லவேண்டிய தேவை இருப்பதையும் அறிகிறார்கள். இந்த தன்னுணர்தலின் வெளிப்பாடுதான் அறிவுத்திருவிழா. முற்போக்கு சிந்தனை உடைய அத்தனை கொள்கைகளையும் ஒரே குடையின் கீழ் இணைக்கும் விதமாக புத்தகக் கண்காட்சியை நடத்துகிறார்கள். திராவிட இயக்கக் கருத்தாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் எனப் பலதரப்பட்டோரையும் கொண்டு கருத்தரங்கம் நடத்துகிறார்கள்.

கலை நிகழ்ச்சி
கலை நிகழ்ச்சி

இளைஞரணி உறுப்பினர்கள் பல மணி நேரத்துக்கு அமர்ந்து அதைக் கேட்கின்றனர். இதன் மூலம் நாளையே மாற்றம் வந்துவிடும் எனச் சொல்லமாட்டேன். ஆனால், ஒரு புதிய தலைமுறைக்கு திமுக அரசியலை கற்பிக்கிறது. இதுவே பெரிய முன்னெடுப்பு. இந்த அறிவுத்திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தவும், மாவட்டந்தோறும் நடத்தவும் ஆலோசனை வழங்கியிருக்கிறோம். நீண்ட கால அடிப்படையில் இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்." என்றார்.

'திமுக சலூன் கடைகளிலும் டீக்கடைகளிலும் சைக்கிள் கடைகளிலும் திராவிட இயக்க இதழ்களால் பேசி பேசி வளர்க்கப்பட்ட இயக்கம்.' என முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவுத்திருவிழாவின் தொடக்க விழாவில் பேசியிருந்தார். யதார்த்த வார்த்தைகள் அவை. திமுக அப்படித்தான் வளர்ந்திருந்தது. ஆனால், எதோ ஒரு இடத்தில் அவர்கள் வளர்ந்து வந்த பாரம்பரியத்தின் பிடியை இலகுவாக விட்டுவிட்டார்கள் என்பதை அவர்களே ஒத்துக்கொள்வார்கள்.

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

நீதிக்கட்சி தொடங்கி மக்களை அரசியல்படுத்தும் பிரயத்தனங்களும் முற்போக்கு சிந்தனையை நோக்கி தூண்டும் செயல்பாடுகளும் தமிழகத்தில் எப்போதுமே இருந்திருக்கிறது. திமுக அதை படிப்பகங்கள், பத்திரிகைகள், மேடை நாடகங்கள், திரைப்படங்கள் வழியாக வெகுஜனப்படுத்தியது. முற்போக்கு சார்ந்த சிந்தனைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தவேண்டிய பொறுப்பு திமுகவுக்கு இருக்கிறது. திராவிட இயக்கங்கள் சார்ந்து மட்டுமல்லாம் முற்போக்கு சிந்தனையுடய அத்தனை கொள்கைகள் சார்ந்த புத்தகங்களும் இங்கே இருக்கிறது.

கல்லூரி மாணவர்களுக்கும் அரசியல் ஆய்வாளர்களுக்கும் இந்த இடம் அத்தனை பேருதவியாக இருக்கும். உதயநிதியை முன்னிலைப்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி என்பதை ஏற்க முடியாது. ஏனெனில், இந்த நிகழ்ச்சி உதயநிதியின் கனவின் வழி உருவானதுதான். இளைஞரணி.செயலாளர் ஆனதிலிருந்தே எவ்வளவோ நல்ல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். இளைஞரணிக்கு பயிற்சி பாசறைகளை நடத்தியிருக்கிறார். 234 தொகுதிகளிலும் நூலகங்களை அமைக்க சொல்லியிருக்கிறார். இது ஒரு பெருங்கனவின் வெளிப்பாடு.' என்கிறார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.

முற்போக்கு புத்தகக் கண்காட்சி
முற்போக்கு புத்தகக் கண்காட்சி

'மோசமில்லாமல் நன்றாகவே விற்பனை இருக்கிறது. இளைஞர்கள் நிறைய பேர் வருகிறார்கள். திராவிட இயக்க வரலாறுகள் குறித்து அவர்கள் அறிந்துகொள்ள விரும்புவதை தெரிந்துகொள்ள முடிகிறது. ஒரே விஷயத்தை வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதியிருப்பார்கள். நம்மிடம் எந்த எழுத்தாளர்களின் புத்தகத்தை நான் எழுதில் புரிந்துகொள்ள முடியுமென கேட்டுத்தெரிந்து வாங்கிச் செல்கிறார்கள்.' எனப் பதிப்பகத்தினரும் பாசிட்டிவாகக் கூறுகின்றனர்.

'சமீபமாகத்தான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அண்ணாவினுடைய நாடகங்கள், இந்தியாவின் ஜாதிய சமூகம் பற்றிய அம்பேத்கரின் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். கலைஞரின் நாடகங்கள், திரைப்படங்கள், திராவிட இயக்க வரலாறு ஆகியவற்றை பற்றிய புத்தகங்களை இங்கே வாங்கிச் செல்லலாம் என நினைக்கிறேன். இந்த இடமே ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. வார இறுதியில் நண்பர்களையும் அழைத்து வரலாமென இருக்கிறேன்.' என்கிறார் 26 வயது ரிஷப்.

ரிஷப்
ரிஷப்

திமுக இதை தங்களின் சுயலாப அரசியலுக்காகவும் பயன்படுத்தத் தவறவில்லை. இளைஞரணியால் திட்டமிடப்பட்டு முழுக்க முழுக்க உதயநிதியை ப்ரமோட் செய்வதற்காகவே இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. தொடக்கவிழாவில் உதயநிதியை அண்ணா, கலைஞர் ஆகியோரோடு ஒப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் புல்லரித்துப் போய் பேசியிருந்தார். துரைமுருகன் ஒருபடி அதிகமாக 'உதயநிதி ராஜேந்திர சோழனாக மாறி ஸ்டாலினையும் கலைஞரையும் மிஞ்சிய சாதனைகளை செய்வார்.' என வயதை மறந்து துதிபாடினார். ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிதான் என்பதை வலுவாகக் கூறவும், உதயநிதி கொள்கைப் பிடிப்புடைய தலைவர்தான் எனும் தோற்றத்தை ஏற்படுத்தவுதுமே விழாவின் மையமாக இருக்கிறது.

திராவிட இயக்க முன்னோடிகளின் புகைப்படக் கண்காட்சி
திராவிட இயக்க முன்னோடிகளின் புகைப்படக் கண்காட்சி

ஆனால், அதை தாங்கள் இடையில் மறந்த தங்களின் மூதாதையரின் பாரம்பரிய வழி செய்கிறார்கள். காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு புத்தகத்தின் கட்டுரைகளை சிறுசிறு வீடியோக்களாக தயாரித்து இளைஞர்களிடம் கொண்டு சேருங்கள் என்கிறார் முதல்வர். புகைப்பட கண்காட்சி வழி திராவிட இயக்கத்தின் முன்னோடிகளை அறிமுகப்படுத்தி வைக்கிறார் உதயநிதி.

கருத்தரங்கம்
கருத்தரங்கம்

சுயலாப நோக்கம் இருந்தாலும் இளைஞர்களோடு உரையாட அவர்களின் அருகிருந்து அரசியல் பேச ஒரு பிரயத்தனத்தை திமுக முன்னெடுக்கிறது.

'பிச்சையா எடுக்க முடியும்.. இன்னும் பல தொழில் தொடங்குவேன்' - அண்ணாமலை பரபரப்பு விளக்கம்

கோவையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ம் தேதி ... மேலும் பார்க்க

'என்னை தாக்க முயன்ற முக்கிய குற்றவாளியை பனையூரில் பதுக்கி வைத்துள்ளார்கள' -எம்.எல்.ஏ., அருள் பேட்டி

பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி A ஃபார்ம், B ஃபார்ம் கையெழுத்திடுவது நான்தான் என்று... மேலும் பார்க்க

வந்தே மாதரம் 150 : அரிச்சல்முனையில் NCC மாணவர்கள், ராணுவ வீரர்களுடன் தேசியக்கொடி ஏந்தி மரியாதை!

வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மா... மேலும் பார்க்க

தமிழிசை: "விஜய்க்கு இந்த புத்தகத்தை அனுப்பியிருக்கிறேன்" - SIR விவகராத்தில் விளக்கம்

முன்னாள் ஆளுநரும் தமிழக பா.ஜ.க -வின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று (நவ. 13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது SIR நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரலெழுப்புவது தேவையற்றது என்ற... மேலும் பார்க்க

Bihar Election Results Live: பீகாரில் வெற்றி யாருக்கு? முதல்வர் மாற்றம் வருமா? நாளை வாக்கு எண்ணிக்கை!

பீகார் சட்டமன்றத் தேர்தலின் இரண்டு கட்ட (நவம்பர் 6, 11) வாக்குப்பதிவுகளும் முடிந்துவிட்டது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 65.08 சதவிகிதமும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 68.76 சதவிகிதமும் என மொத்தமாக 66.... மேலும் பார்க்க

மோதிக்கொள்ளும் பெருசுகள்; நொந்துகொள்ளும் காவி இளசுகள் டு வசூலுக்குத் தயாராகும் எம்.பி! | கழுகார்

கொதிக்கும் மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்!“அவர்கள்மீது அப்படியென்ன பாசமோ?”மதுரையில், இலைக் கட்சியின் பூத் கமிட்டிப் பயிற்சி நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய இலைக் கட்சியின் ‘சூரிய’ மாஜி, “நமது தல... மேலும் பார்க்க