BB Tamil 9: "கண்ணு முன்னாடி நடக்கும்போது குமட்டிட்டு வரும்" - மனம் திறக்கும் பிக...
'என்னை தாக்க முயன்ற முக்கிய குற்றவாளியை பனையூரில் பதுக்கி வைத்துள்ளார்கள' -எம்.எல்.ஏ., அருள் பேட்டி
பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி A ஃபார்ம், B ஃபார்ம் கையெழுத்திடுவது நான்தான் என்று கூறியுள்ளார். ராமதாஸ் அய்யா வாழ்நாளில் பாதிக்கும் மேற்பட்ட நாட்களை பாமகவிற்காக அர்ப்பணித்து இயக்கத்தை உருவாக்கினார். கட்சியை துவங்கிய நாளிலிருந்து இன்று வரை யாருடைய தலையீடும் இல்லாமல் 2006 வரையிலும் செயல்பட்டார். அன்புமணி தலையீட்டுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தது. பாமக துவங்கியதில் இருந்து இன்று வரை 55 சட்டமன்ற உறுப்பினர்கள், 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐந்து அமைச்சர்களை பெற்றுக் கொடுத்தவர் ராமதாஸ் தான். இதற்குக் காரணமான ராமதாஸ் ஐயாவை தவிர யாரும் உரிமை கொண்டாட முடியாது. அன்புமணியின் தலையீட்டால் பாமக கட்சி கீழ்நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அதன் பிறகு தான் அங்கீகாரத்தை பாமக இழந்தது. பாமக கட்சி தன்னுடையது என்று கூறினால் ராமதாஸ் அய்யாவின் உழைப்பை திருடுவதற்கு சமம்... மகன் என்பதற்காக ராமதாஸ் அய்யாவின் உழைப்பை திருட முடியாது. நான் பாமக துவங்கியதில் இருந்து எந்த கட்சியிலும் உறுப்பினராக இருந்தது இல்லை. ஆனால், திமுகவிலிருந்து பல்வேறு கட்சிகளுக்கு சென்று இப்பொழுது பாமகவில் இணைந்து கட்சியை கைப்பற்ற வழக்கறிஞர் பாலு துடித்துக் கொண்டிருக்கிறார். தவறான உதாரணமாக அன்புமணி மாறிவிடக்கூடாது என்பதற்காக தான் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வாழப்பாடி தாக்குதல் விவகாரத்தில் காவல்துறையில் எடுக்கப்பட்ட வீடியோ மூலம் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்புமணி ஆதரவாளர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதற்கு பயந்து தான் என் மீது ஒருதலை பட்சமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னை கட்டையை எடுத்து தாக்குதல் நடத்த வந்த வீடியோ, கல்லை எடுத்து போடும் காட்சிகள் இருக்கின்றன. என்னை தாக்கமுயன்ற முக்கியமான குற்றவாளியை பனையூரில் பதுக்கி வைத்துள்ளார்கள். உண்மையான குற்றவாளி யார் என்று காவல்துறைக்கு தெரியும், வீடியோ எடுத்து உள்ளார்கள். ஆனால் முக்கிய குற்றவாளிகள் 10 பேரை இதுவரை கைது செய்யவில்லை. கைது செய்யாதது ஏன். தேர்தல் ஆணையத்தில் மாம்பழ சின்னம் எனக்கு தான் என்று கொக்கரிப்பது எல்லாம் பொய்யானது. ஜி.கே.மணி தலைவராக இருந்தபோது கையெழுத்திட்டார். இப்பொழுது அவரது பதவி காலம் முடிந்துவிட்டது. இப்பொழுது ராமதாஸ் ஐயா தான் தலைவர், எனவே அவர்தான் தலைவராக கையெழுத்திடுவார். தர்மபுரி, சேலம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டத்தை கூட்டியபோது ஏராளமான இளைஞர்கள் கூட்டம் வந்தது. பொறுப்பாளர்கள் சிலர் அன்புமணி பின்னால் போய் இருக்கலாம், பாட்டாளி மக்கள் கட்சி என்பது ராமதாஸ் பின்னால் தான் உள்ளது. ராமதாஸ் ஐயா யாரை சொல்கிறாரோ, அவருக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் சத்தியம். நிறைவேற்றப்படாத தீர்மானத்தை கொடுத்து முகவரியை மாற்றியுள்ளார்கள். தலைவர் அன்புமணி என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. முறையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியாக எதிர்கொள்வோம். நீதி, நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம். ராமதாஸ் ஐயா போட்டியிட சீட்டு வழங்கினார். இதில் பாலுவை அங்கீகரிக்காமல், அவரை மக்கள் துரத்தி விட்டார்கள். ஆனால் அதிக வாக்குகளை கொடுத்து மக்கள் என்னை வெற்றி பெற செய்தார்கள்" என்றார்.

















