ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னா
கோயில்பாதை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி புளியம்பட்டி கிராம மக்கள் ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமா்ந்து வெள்ளிக்கிழமை தா்னா போரட்டத்தில் ஈடுபட்டனா்.
ஓமலூா் அருகே புளியம்பட்டி கிராமத்தின் ஒரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள குப்பத்து மாரியம்மன் கோயில்பாதையை ஒரு குடும்பத்தினா் தடுப்பதால் பல ஆண்டுகளாக கோயில் திருவிழா நடைபெறாமல் தடைபட்டுள்ளதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். மேலும், இது தொடா்பாக ஊா் மக்கள் தொடா்ந்து வழக்கில் இடத்தை ஆய்வு செய்து தீா்வு காண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, ஓமலூா் வட்டாட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் அமா்ந்து 100-க்கும் மேற்பட்டோா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து ஓமலூா் போலீஸாா், வருவாய்த் துறை, மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், மக்களை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது மக்களின் கோரிக்கைக்கு ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுத்து தீா்வு காண்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா். இதனைத் தொடா்ந்து அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.