செய்திகள் :

கருணாநிதி விரும்பியது நாகை, அண்ணா சொன்னது குளித்தலை; காங்கிரஸை கதிகலங்க வைத்த உத்தி | முதல் களம் - 2

post image

`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல்’ எனும் தொடர்.

அது 1957 ஆம் ஆண்டின் தொடக்க காலம்.

இந்தியா சுதந்திரம் அடைந்து ஒரு தசாப்தம் கூட நிறைவடையவில்லை. நாட்டின் விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த கட்சி என்கிற அடிப்படையில், நாடு முழுவதும் மக்களிடையே காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. ஆட்சி அதிகாரமும் காங்கிரஸ் கட்சியிடம்தான். அதில், தமிழ்நாடும் விதிவிலக்கு அல்ல. இத்தகைய அரசியல் சூழ்நிலையில்தான், சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து மார்ச் மாதம் பொதுத் தேர்தல் என்கிற அறிவிப்பு வெளியானது. 

கருணாநிதி - அண்ணா


இன்னொருபுறம், பேரறிஞர் அண்ணா தலைமையில் 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், இந்தத் தேர்தலில் முதல் முதலாக களம் இறங்கியது. திமுகவின் சார்பில் 124 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அந்த 124 பேர்களில் திமுகவின் இளம் தலைவர்களில் ஒருவரான மு.கருணாநிதியும் இடம்பெற்றார். அப்போது அவருக்கு வயது 33 மட்டுமே.

தான் போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால், கருணாநிதி, தனது பிறந்த ஊரான திருக்குவளையை உள்ளடக்கிய நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அண்ணாவின் தேர்வு வேறு ஒன்றாக இருந்தது. "குளித்தலையில் போட்டியிடு" என்கிற அண்ணாவின் கட்டளைக்கு இணங்கி, சிறிதும் தயங்காமல், தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத குளித்தலையை நோக்கி பயணித்த கருணாநிதி, அங்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.  

அப்போதைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த குளித்தலை, காவிரி நதிக்கரை வளமும், வறண்ட நிலப்பரப்பும் கலந்த ஒரு பிரம்மாண்ட தொகுதி. குளித்தலை, முசிறி, கரூர், லாலாப்பேட்டை, நங்கவரம், அந்தநல்லூர் என்று பல கிராமங்களையும் நகரங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.

காங்கிரஸ் வேட்பாளராக காட்டுப்புத்தூர் தர்மலிங்கமும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கறிஞர் கே.ஏ. சண்முகமும்  போட்டியிட்டனர். இவர்கள் இருவரும், அந்தப் பகுதியில் வலுவான அடித்தளம் மற்றும் மக்களிடையே நன்கு அறிமுகம் கொண்டவர்கள் என்பதால், இவர்களை வெல்வது கருணாநிதிக்கு கடுமையான சவாலாகவே இருந்தது.

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

ஆனாலும், தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்னர், திரைத்துறையில் தனது கூர் தீட்டிய வசனங்களால் மக்களை வசீகரித்ததில் கிடைத்த செல்வாக்கும் புகழும், பெரியார் மற்றும் அண்ணாவுடன் பணியாற்றியதில் கிடைத்த அரசியல் களப்பணி அனுபவமும் கருணாநிதியை தைரியம் கொள்ள வைத்தன. தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கினார். மக்களின் கவனத்தை ஈர்க்க, பிரசார உத்தியை மாற்ற வேண்டும் எனத் தீர்மானித்தார். திரைப்படத்துக்கு திரைக்கதை தீட்டியவர் அல்லவா? அந்த அனுபவம் அவருக்கு மிக நன்றாகவே கை கொடுத்தது. 

அதுவரை தமிழகத் தேர்தல்களில் கண்டிராத பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார். இதில், அவரது முதல் உத்தி - சுவர் ஓவியங்கள். திருவாரூரைச் சேர்ந்த ராஜன் மற்றும் லாலாப்பேட்டையைச் சேர்ந்த ராமலிங்கம் என்கிற இரண்டு ஓவியர்களை வரவழைத்து, சுவர்களை உதயசூரியன் சின்னத்தால் நிரப்பினார்.

கூடவே  “காகிதப் பூ மணக்காது காங்கிரஸ் ஆட்சி இனிக்காது, டாட்டா பிர்லா கூட்டாளி பாட்டாளிக்கு பகையாளி" என எதுகை மோனையில் அவர் எழுதிக்கொடுத்த பல்வேறு பிரசார வாசகங்கள் மக்களைச் சுண்டி இழுத்தன. சுவர்களில் எழுதப்பட்ட கவிதை நடையிலான அந்த வாசகங்களை மக்கள் கூடிக்கூடி நின்று வாசித்து, அது குறித்து சிலாகித்துப் பேசினர்.  

அடுத்ததாக இன்னொரு புதிய உத்தியையும் கருணாநிதி புகுத்தினார். அதுதான் `டோர் ஸ்லிப்’ எனப்படும் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் முறை. இன்று எல்லோரும் பயன்படுத்தும் இந்த முறையை முதலில் கொண்டு வந்தவர் கருணாநிதிதான் என்கிறார்கள் அந்தக் கால அரசியலை அசைபோடுபவர்கள். அதாவது, ஒரு வீட்டில் வாக்கு சேகரிக்கும்போது, அந்த வீட்டின் கதவில், 'எங்கள் ஓட்டு கருணாநிதிக்கே' என்கிற வாசகமும் உதயசூரியன் படமும் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை, திமுகவினர் ஒட்டி விடுவார்கள். அதே போல் வீடுதோறும் காலண்டர்களும் விநியோகமானது. 

மூன்றாவது உத்திதான் எதிரணியினரையே, குறிப்பாக காங்கிரஸ் கட்சியைக் கதிகலங்க வைத்த  உத்தி. அதிகாலை நான்கரை மணிக்கெல்லாம் எழுந்து, காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் வீடுகளுக்கே சென்று “எனக்கு ஓட்டுப் போடுங்கள்” எனக் கேட்பார் கருணாநிதி. அவரது கார் ஓட்டுநர், கருணாநிதி வாக்கு கேட்டுச் செல்லும் வீடுகளின் கதவில், உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தை ஒட்டி வைத்துவிட்டு வருவார்.

காலையில் எழுந்து பார்க்கும் காங்கிரஸ்காரர்கள் அதிர்ச்சி அடைவார்கள். “என்னய்யா, கருணாநிதி வந்தாரா?” என ஒருவருக்கு ஒருவர் கேட்கத் தொடங்கினார்கள். கூடவே பிரச்சாரத்தில் அண்ணா, எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரும் கை கொடுத்தனர். 

கலைஞர் கருணாநிதி- அண்ணா

பிரசாரத்தில் கருணாநிதி பயன்படுத்திய வாகனம் ஒரு பழைய ஃபியட் கார். அந்தக் காரில், தன்னுடன் ஆறு பேரை அடைத்துக்கொண்டு, தொகுதி முழுவதும் சுற்றிச் சுற்றி சுழன்றடித்தார். இப்போது இருப்பது போன்றெல்லாம் அப்போது உணவு விடுதிகள் அவ்வளவாக கிடையாது. கரூர் மார்க்கெட்டில் எஸ்.வி. சாமியப்பன் என்பவரின் லாரி செட்டில் இருந்த திமுக அலுவலகமே, இரவில் கருணாநிதி உள்ளிட்டோருக்கான தங்குமிடமாக இருந்தது.

இரண்டு ரூபாயில் எட்டு இட்லி பொட்டலம் வாங்கி, எல்லோரும் பகிர்ந்து சாப்பிடுவார்கள். தொலைபேசி அரிது. கரூர் அஞ்சல் நிலையத்துக்கு எதிரே இருந்த டெலிபோன் எக்ஸ்சேஞ்சில்  வரிசையில் நின்றுதான் டிரங்க் கால் மூலம் சென்னைக்குப் பேசி அண்ணாவிடம், தேர்தல் களத்தின் நிலைமையைத் தெரிவிக்க வேண்டும். அதேபோன்று தனது அக்காள் மகன் முரசொலி மாறனுக்கு டிரங்கால் போட்டு பேசித்தான் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் கைச்செலவுக்கான பணத்தையும் வரவழைப்பாராம் கருணாநிதி.

அந்த நாட்களில் பெரும்பாலான அரசியல் மேடை பேச்சுகள் கடினமான சொற்கள், நீளமான வரலாறு பேசும் பாணியில் இருந்தன. ஆனால், கருணாநிதியின் பிரசாரம் அந்தக் கால அரசியல் கூட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. அவர் பேசும்போது , இன்றைய சில தலைவர்கள் பேசுவதைப் போன்ற ‘ஸ்கிரிப்ட் ரீடிங்’ பாணியில் இருந்ததில்லை. ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் உள்ளூர் பிரச்னைகளைக் குறிப்பிட்டு, அதற்கான தீர்வுகளை தெளிவாக விளக்கினார்.

அவரின் பிரசாரத்தில் ஒவ்வொரு கூட்டமும் தனித்தன்மை வாய்ந்ததாக  இருந்தது. சில இடங்களில் மேடை தேவைப்படாமல், மரத்தடியில் அல்லது திறந்த வெளியில் கூடிச் சிறிய கூட்டங்கள் நடத்தப்பட்டன. அரசியல் உரையை விட சுவைமிகு கதைகள், எடுத்துக்காட்டுகள் மூலம் மக்களைக் கவர்ந்தார். சுருக்கமாக சொல்வதென்றால் அவரது பிரசாரம்,'திமுக வென்றால் இதை மாற்ற முடியும்' என்கிற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்துவதாக இருந்தது.

காதல் படிக்கட்டுகள் - கலைஞர் கருணாநிதி!

குளித்தலையின் கரையோரப் பகுதிகளில் காலை முதல் மாலை வரை நடத்தப்பட்ட கூட்டங்கள் அனைத்திலும் பெண்களும் இளைஞர்களும் அதிகம் கூடினர்.“எழுத்தாளராக இருக்கும்போது நம்ம பிரச்னையை எல்லாம் கதைல எழுதினார்; இப்போ சட்டமன்றத்துலச் சொல்லப் போறாராம்!”—என்கிற ரீதியில் வாக்காளர்களிடம் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் மிகுதியானது. 

1950-களில் நடந்த கல்லக்குடி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்துப்படுத்த நிகழ்வு, தமிழக அரசியலில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. அந்தப் போராட்டக் கதைகள் குளித்தளை பிரச்சாரத்திலும் பேசப்பட்டு, கருணாநிதிக்கான வாக்குகளை அதிகமாக்கியது. 

கருணாநிதியின் இந்த புதுமையான உத்திகளும் பிரசாரங்களும்தான், குளித்தலை தொகுதியில் அவருக்கான முதல் தேர்தல் வெற்றியைக் கொடுத்து. கடைசியாக 2016-ல் போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதிவரை, தொடர்ந்து 13 தேர்தல்களிலும் மகுடம் சூட வைத்தது. குளித்தலை தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதிக்கு  22,785 வாக்குகள் கிடைத்தன. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றார் கருணாநிதி. முதன்முறையாக 15 உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் காலடி வைத்த திமுக, தமிழக அரசியலில் ஒரு நீண்ட நெடிய அத்தியாயத்துக்குள் அடியெடுத்து வைத்து, இன்றளவும் எதிர்க்கட்சியாகவும் ஆளும் கட்சியாகவும் மாறிமாறி தமிழர்களிடம் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக கோலோச்சிக்கொண்டிருக்கிறது.

கருணாநிதி

சட்டமன்றத்தில் அடியெடுத்த பின்னர், கருணாநிதி மேற்கொண்ட நுணுக்கமான அரசியல் அணுகுமுறைகளும், அறிவுக்கூர்மையான வாதங்களும், அவரை திமுகவின்  முக்கிய தலைவர்களில் ஒருவராக வேகமாக உயர்த்தி, அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பல முறை ஆட்சிக்கட்டிலிலும், சாகும்வரை திமுக தலைவராகவும் அரியாசனத்தில் அமரவைத்தது. அந்த வகையில், கருணாநிதியின் இத்தகைய நீண்ட அரசியல் பயணத்திற்கான அடித்தளமாக அமைந்தது அவரது குளித்தலை தேர்தல் வெற்றியே! 

(தொடரும்)


அடுத்த வாரம்: எம்.ஜி.ஆரின் முதல் தேர்தல்: அசந்துபோன அண்ணாவும் வெற்றியை தந்த ஒற்றை புகைப்படமும்!

ஓய்வூதியத் திட்டம்: "அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தும் பழனிசாமி ஏன் பதறுகிறார்?" - அன்பில் மகேஸ்

"2003-ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்முலமாக்கிய அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? பழனிசாமி ஏன் பதறுகிறார்?" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்... மேலும் பார்க்க

"சாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டுமானால், முதலில்..." - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சொல்வது என்ன?

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலா... மேலும் பார்க்க

'பல சிரமங்களை இதுவரை சகித்துக்கொண்டிருந்தேன்' - பா.ஜ.க-வில் இணைந்த சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டசபை தொகுதியில் 2006, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜேந்திரன். கடந்த முறை அந்த தொகுதியில் போட்டிய... மேலும் பார்க்க

'மாநில நிதி நிலைமை சரியாக இருப்பதால்தான் ரூ.2000 கொடுப்பதாக எடப்பாடி அறிவித்துள்ளார்' - மனோ தங்கராஜ்

பொதுவுடைமை சிற்பி ப.ஜீவானந்தத்தின் 63-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நாகர்கோவிலில் அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, பால்வளத்துறை அமைச்சர் மனோ... மேலும் பார்க்க

'விண்ணை முட்டும் ஆம்னி பஸ் டிக்கெட்; தவிக்கும் மக்கள்!' - கண்டுகொள்ளாத அரசு?

பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு சொந்த ஊர்களிலிருந்து மக்கள் சென்னை திரும்ப ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னையை நோக்கிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்திருப்பது ப... மேலும் பார்க்க