Celebrities share their memories with AVM Saravanan at his funeral | Cinema Vika...
காரியாபட்டி: ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு லஞ்சம்; பேரூராட்சி பொறியாளர் கைது!
மதுரை செல்லூரைச் சேர்ந்த பழனி குமார், ஒப்பந்தக்காரராக உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த 2022 ம் ஆண்டு ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு ஒப்பந்தம் எடுத்துள்ளார். தற்போது பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் முதல் கட்டமாக ரூ.1 கோடியே 14 லட்சம் மதிப்பிலான பில் நிலுவை தொகை ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் மீதமுள்ள ரூ.19 லட்சம் பில் தொகை ஒப்பந்ததாரர் பழனி குமாருக்கு வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் மீதமுள்ள இந்த பில் தொகை வழங்குவதற்கு காரியாபட்டி பேரூராட்சியில் பணிபுரியும் பொறியாளர் கணேசன் என்பவர் ரூ.3,50,000 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த லஞ்சப் பணத்தில் ரூ. 50,000 முன்பணமாக வழங்க வேண்டும் எனவும் பொறியாளர் கணேசன் கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்தக்காரர் பழனி குமார், விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையை நாடி உள்ளார்.

இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஒப்பந்தகாரர் பழனி குமார் பொறியாளர் கணேசனிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி ராமச்சந்திரன், ஆய்வாளர்கள் பூமிநாதன் மற்றும் ஜேஸ் மும்தாஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் லஞ்சம் வாங்கிய காரியாபட்டி பேரூராட்சி பொறியாளர் கணேசனை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.















