UN: 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிலுவை; ரூ.5000 கோடி பட்ஜெட் கட்; நிதிப் பற்றாக...
தென்காசி: அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை! - பட்டப் பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
தென்காசியின் மையப்பகுதியில் உள்ள நடுபல்க் அருகே அரசு வழக்கறிஞரின் அலுவலகம் உள்ளது. ஆட்கள் நடமாட்டம் மிகுந்த அந்தப் பகுதிக்கு வந்த மர்ம நபர்கள், அவரது அலுவலகத்துக்குள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.
தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகச் செயல்பட்டு வந்தவர் முத்துக்குமாரசாமி. இவர் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். அவரது அலுவலகம் தென்காசியின் மையப்பகுதியான நடுபல்க் அருகே அமைந்துள்ளது.
இன்று மதியம் அவர் தனது அலுவலகத்தில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரைச் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். தலை, முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் அவருக்குப் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. அதனால் நிலைகுலைந்த அவர் சேரிலேயே சரிந்து விழுந்தார்.

வழக்கறிஞர் அலுவலகத்தில் கேட்ட கூக்குரலால் அப்பகுதி மக்கள் அங்குச் சென்றனர். ஆள் வருவதைப் பார்த்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த வெட்டுக் காயங்களுடன் சிகிச்சை பெற்ற அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்ட தென்காசி வழக்கறிஞர்கள் முத்துக்குமாரசாமி அலுவலகத்துக்குத் திரண்டு வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தென்காசி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், சம்பவப் பகுதியில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அத்துடன், சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், கொலை நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்கள் உதவியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், வழக்கறிஞர் ஒருவரை அவரது அலுவலகத்திற்குள்ளேயே சென்று மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினரிடம் கேட்டதற்கு, "கொலைக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். இரண்டு நபர்கள் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்ததாகத் தெரிகிறது. வழக்குத் தொடர்பான முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா, அல்லது குடும்பப் பிரச்சினையால் வழக்கறிஞர் வெட்டிக் கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். அதனால் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்" என்றார்கள்.




















