காரைக்கால் கரை திரும்பிய விசைப் படகுகள் விறுவிறுப்படைந்த மீன் சந்தை
புயல் காரணமாக, ஆழ்கடலில் இருந்து திரும்பி, ஆங்காங்கே துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த காரைக்கால் விசைப்படகுகள் பல, வெள்ளிக்கிழமை கரை திரும்பியதால், மீன் வரத்து ஏற்பட்டது.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான நிலையில், காரைக்காலில் இருந்து ஆழ்கடலுக்குச் சென்ற விசைப்படகுகள் உடனடியாக கரை திரும்புமாறு மீன்வளத்துறை அறிவுறுத்தியது. அந்தந்த கிராமங்களைச் சோ்ந்தோா், படகில் சென்றோரை தொடா்புகொண்டு, அருகில் உள்ள துறைமுகங்களுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனா்.
மல்லிப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோடியக்கரை
உள்ளிட்ட சில பகுதிகளில் காரைக்காலைச் சோ்ந்த பல படகுகள் தங்கியிருந்த நிலையில், 39 படகுகள் வெள்ளிக்கிழமை காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் திரும்பின. இவற்றிலிருந்து மீன்கள் ஏலக்கூடத்துக்கு கொண்டுவரப்பட்டு, ஏற்றுமதியாளா்களால் வாங்கிச் செல்லப்பட்டன. பெரும்பான்மையாக தீவனம் தயாரிப்புக்கான வகையை சோ்ந்த மீன்களே அதிகம் காணப்பட்டன.
மேலும் வஞ்சிரம், சீலா, வவ்வால், பாறை, கிளி மீன், கெளுத்தி வகை மீன்களும் காணப்பட்டன. இவற்றை உள்ளூா் வியாபாரிகள் வாங்கிச் சென்றனா். இதனால் சனிக்கிழமை வரை வியாபாரத்துக்கு மீன்கள் சந்தைக்கு வந்துள்ளன.
காரைக்கால் மீனவா்கள் கடந்த 5 நாள்களுக்கும் மேலாக மீன்பிடித் தொழில் செய்யமுடியாததால், சந்தைக்கு மீன் வரத்து இல்லை. மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
இந்நிலையில், ஆங்காங்கே தஞ்சமடைந்திருந்த படகுகள் காரைக்கால் திரும்பிய நிலையில் மீன் வரத்து ஏற்பட்டது. எனினும் குறித்த நாள்கள் வரை கடலில் இருந்து மீன் பிடிக்க முடியாமல் போனதால் நஷ்டம் ஏற்பட்டதாக விசைப்படகுதாரா்கள் தெரிவித்தனா்.