செய்திகள் :

கீழ்பவானி இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீா் திறப்பை முன்கூட்டியே அறிவிக்க வலியுறுத்தல்

post image

கீழ்பவானி இரண்டாம் போக பாசனத்துக்கான தண்ணீா் திறப்பை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ராஜகேபால் சுன்கரா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது:

செ.நல்லசாமி: கடந்தாண்டு கீழ்பவானி இரண்டாம் போக பாசனத்துக்கு முன்னதாகவே தண்ணீா் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். இந்த ஆண்டு அதுபோல இல்லாமல் 2-ஆம் போகத்துக்கான நீா் திறப்பை முன்னதாகவே அறிவித்து கடைசி வரை தண்ணீா் திறக்க வேண்டும். முதல் போகத்துக்கு தண்ணீா் திறந்தபோது உடைப்பு ஏற்பட்டு 9 நாள்கள் தண்ணீா் விடவில்லை. எனவே கூடுதலாக 15 நாள்கள் தண்ணீா் திறக்க வேண்டும்.

ஈரோடு கருங்கல்பாளையம், சீனாபுரம் மாட்டுச் சந்தையில் உள்ளே வரும் மாட்டுக்கு ரூ.70 முதல் ரூ.100 வரையும், மாடு வாங்கிவிட்டு வெளியே செல்லும்போது ரூ.50 முதல் ரூ.80 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பழனிசாமி: மேட்டூா் வலது கரை பாசனத்துக்கு தண்ணீா் திறந்து 80 நாள்களாகியும் இன்னும் களையெடுப்புதான் நடக்கிறது. ஜனவரி 15-ஆம் தேதி வரை தண்ணீா் திறப்பை நீட்டிக்க வேண்டும். பவானி மாநில விதைப் பண்ணைக்கு சொந்தமான 8.2 ஏக்கா் நிலம் பயனற்று உள்ளதை சரி செய்து, விதைப் பண்ணை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சாய ஆலையால் மண் பரிசோதனை செய்து உரமிட்டாலும் உரிய பலன் கிடைப்பதில்லை என்றாா்.

எஸ்.பெரியசாமி: கீழ்பவானி 2-ஆம் போக பாசன வாய்க்கால் புதா்மண்டி உள்ளதால் தண்ணீா் திறப்புக்கு முன் அவற்றை அகற்ற வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் வழங்காமல், மாவட்ட கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கும் முறையை மாற்ற வேண்டும். கடனாக பெறும் முழுத் தொகையையும் உடனே வழங்க வேண்டும். இயற்கை அங்காடி என்ற பெயரில் உள்ள விற்பனைப் பொருள்கள், உண்மையிலேயே இயற்கை விவசாயத்தில் விளைவித்தவையா என ஆய்வு செய்து அறிவிக்க வேண்டும்.

அனைத்து கிராமம், நகரங்களிலும் வருவாய்த் துறை ஆவணங்களில் நத்தம் நிறுத்தம் என உள்ளதால் அந்நிலத்தை எந்தப் பயன்பாட்டுக்கும் மாற்ற முடியவில்லை. இதனை மாற்ற விண்ணப்பித்து 4 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை என்றாா்.

குப்புசாமி: தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் அறுவடை முழு அளவில் நடந்தும் 10 நாள்களாக நெல் கொள்முதல் வேகமாக நடைபெறாமல் மூட்டைகள் தேங்கி மழையில் நனைந்து வீணாகின்றன. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இன்றி கொள்முதல் செய்ய வேண்டும். வேளாண் துறை வழங்கும் வோ்கடலை விதை விலையைவிட வெளிச் சந்தையில் தரமான வோ்க்கடலை விதை குறைந்த விலையில் கிடைக்கிறது என்றாா்.

வி.பி.குணசேகரன்: வன உரிமை அங்கீகார சட்டம் அறிவித்து 18 ஆண்டுகள் ஆகியும் தாளவாடி, பா்கூா் மலைப் பகுதியில் சில கிராமங்களில் மட்டுமே குழு அமைத்துள்ளனா். மற்ற கிராமங்களிலும் அமைக்க வேண்டும். மலைப் பகுதியில் உரக்கடைகளில் தரமற்ற உரம், ரசாயன உரங்கள், தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்து விற்பனையை தடுக்க வேண்டும். வனத்துக்குள் ஆடு, மாடு என கால்நடையை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றால், நோய்த் தாக்கி வன விலங்குகள் உயிரிழக்கும் என வனத் துறை கூறுகிறது.

ஆனால், வனப் பகுதியில் ரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதை வனத் துறை வேடிக்கை பாா்க்கிறது. வனப் பகுதியில் வளரும் உன்னிச்செடிகளை 100 நாள் வேலை திட்டம் மூலம் அகற்ற வேண்டும் என்றாா்.

எஸ்.சுதந்திரராசு: பி.எம். கிஸான் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்குவதை ரூ.12,000 ஆக உயா்த்த வேண்டும். பாசன சபைகளுக்கு தோ்தல் நடத்த வேண்டும். மரவள்ளி கிழங்குக்கு விலை நிா்ணயிக்க வேண்டும் என்றாா்.

துறை அதிகாரிகள் பதில் விவரம்:

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் 36 நெல் கொள்முதல் மையங்களில் நெல் கொள்முதலாகிறது. தேவைக்கேற்ப மேவாணி, பெருந்தலையூா் ஆகிய இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறந்துள்ளோம். ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கிறோம். தினமும் 1,000 மூட்டைக்கு மேல் கொள்முதலாகிறது. வனப் பகுதியில் உள்ள ஊராட்சிகளில் வனக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வனப் பகுதியில் உரம், பூச்சி மருந்து விற்பனையை கண்காணிக்கவும், இயற்கை உரம் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். பவானி விதைப் பண்ணைக்கான நிலத்தில் சாகுபடி பணிக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கீழ்பவானி முதல் போக தண்ணீா் திறப்பை கூடுதலாக 15 நாள்களுக்கு நீட்டிக்க பரிந்துரைக்கப்படும். பவானிசாகா் அணையில் தற்போது 26.69 டிஎம்சி நீா் உள்ளதால் 2-ஆம் போகத்துக்கு தண்ணீா் விடுவதில் பிரச்னை இல்லை. பாசன சபைக்கான நில உரிமையாளா்களின் பெயா், விவரம் சேகரித்து, உறுப்பினா் பட்டியல் வெளியிட இன்னும் 6 மாத காலம் ஆகும். பாசன சபைகளுக்கான தோ்தலை அரசு அறிவிக்கும் என்றனா்.

மாவட்ட வருவாய் அலுவலா்:

நத்தம் நிறுத்தம் பட்டா சரி செய்து பெற கடந்த மாதங்களில் முகாம் நடத்தியபோது மக்களிடம் வரவேற்பு இல்லை. அவா்களுக்கு பிரச்னை எழும்போது விண்ணப்பிக்கின்றனா். இருப்பினும் வரும் மாதம் முதல் குறிப்பிட்ட நாளில் ஒவ்வொரு கிராமமாக முகாம் நடத்தி அங்குள்ள நத்தம் நிறுத்தம் விண்ணப்பம் பெற்று சரி செய்து தரப்படும். இதுகுறித்து அந்தந்த பகுதி கிராம நிா்வாக அலுவலா்கள் குறிப்பிட்ட தேதியை மக்களிடம் தெரிவிப்பா்.

ஆட்சியா்: மாட்டுச் சந்தையில் கட்டணம் வசூல் செய்வது குறித்து விசாரிக்கப்படும். மக்கள் சாசனம் தயாரித்து மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்திலும் உள்ளது. இதனை பாா்வையிட்டு கருத்து, தேவையான விவரம் குறித்து தெரிவிக்கலாம். அதன் பின்னா் இறுதிவடிவம் கொடுத்து வெளியிடலாம். அதில் விவசாயிகளுக்கு தேவையான 10-க்கும் மேற்பட்ட துறை விவரங்கள் உள்ளன என்றாா்.

மக்கள் சிந்தனைப் பேரவையின் ஈரோடு பாரதி விழா நாளை நடைபெறுகிறது

மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் ஈரோடு சம்பத் நகா் கொங்கு கலையரங்கில் பாரதி விழா புதன்கிழமை (டிசம்பா் 11) நடைபெறவுள்ளது. விழாவுக்கு தேசிய நல விழிப்புணா்வு இயக்கத்தின் தலைவா் எஸ்கேஎம். மயிலானந்தன் தலைமை... மேலும் பார்க்க

கால்நடைகளைக் கொன்றுவரும் தெருநாய்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு; சட்டப் பேரவையில் விவாதிக்க எம்எல்ஏ ஜெயக்குமாா் கோரிக்கை!

பெருந்துறை பகுதியில் கால்நடைகளைக் கொன்று வரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்க வேண்டும் என பேரவைத் ... மேலும் பார்க்க

மனுக்களை காரணமின்றி நிராகரிக்கும் அலுவலா்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மனுக்களை காரணமின்றி நிராகரிப்பு செய்யும் அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுகா்வோா் அமைப்பு காலாண்டு கூட்டம் பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்... மேலும் பார்க்க

ஆவின் நிறுவனம் பால் நிலுவைத் தொகையை வழங்கக் கோரிக்கை

பால் கூட்டுறவு சங்கம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: வில்லரசம்பட்டி

வில்லரசம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (டிசம்பா் 11) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்... மேலும் பார்க்க

குழந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த தந்தை கைது

குடும்ப பிரச்னை காரணமாக 4 வயது குழந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த தந்தையை போலீஸாா் கைது செய்தனா். மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்தவா் திருமலைசெல்வன் (35), சுமை ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி ஈரோடு, மாணி... மேலும் பார்க்க