செய்திகள் :

குழந்தைகளை விழுங்கும் சோஷியல் மீடியாக்கள்... காப்பாற்றுவதற்கு வந்துவிட்டது புது ரூட்!

post image

குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதால் உருவாகும் பிரச்னைகள் மற்றும் ஆபத்துகள், ‘உலக அளவில் பெரும் தலைவலி’ என உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், உலகிலேயே முதல் நாடாக 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியாவை பயன்படுத்தத் தடை விதிக்கும் சட்டத்தை, டிசம்பர் 10-ம் தேதியிலிருந்து அமல்படுத்தவிருக்கிறது ஆஸ்திரேலியா. மலேசியா, டென்மார்க், ஃபிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் இத்தகைய முன்னெடுப்புகள் ஆரம்பமாகியுள்ளன.

ஆக, ‘சமூக ஊடகங்களில் குழந்தைகள் என்பது தீர்க்கவே இயலாத பிரச்னை’ என்று பேசிக்கொண்டிருந்த சூழல் மாறி, ‘தீர்வு இருக்கிறது’ என்பதை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது, உலகளாவிய சமூகம். நம் நாட்டிலும், குழந்தைகளைப் பாதுகாக்கும் இத்தகைய சட்ட நடவடிக்கைகளை நோக்கி நம் அரசுகள் நகர வேண்டும்.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, தடை மீறப்பட்டால் குழந்தைகளுக்கோ, பெற்றோருக்கோ தண்டனை கிடையாது. சமூக வலைதள நிறுவனங்களுக்குத்தான் தண்டனை என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட், ஸ்நாப்சாட் உள்ளிட்ட சோஷியல் மீடியா நிறுவனங்கள், தங்களின் ஊடகங்களில் கணக்குத் தொடங்குபவர்கள் 16 வயது பூர்த்தியானவர்கள்தானா என்பதை உறுதிப்படுத்த, அரசு அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்கும் வேலையைத் தொடங்கியுள்ளன.

இப்பிரச்னையை, பிராக்டிக்கலாக அணுக வேண்டிய சிக்கல் இருப்பதும் உண்மையே. கொரோனா பெருந்தொற்று காரணமாக, ஆன்லைன் வகுப்புகள் அறிமுகமாகின. இன்று பள்ளி, டியூஷன், இசை, செஸ் உள்ளிட்ட பிற பயிற்சி வகுப்புகள் என, எல்லாமே ஆன்லைனில் நடக்கின்றன. எனவே, குழந்தைகளின் கைகளில் கேட்ஜெட்ஸ் கொடுப்பது கற்றலின் ஒரு வழியாகியுள்ளது.

அதேசமயம், அதிக ஸ்கிரீன் டைம் காரணத்தால் வழக்கமான அன்றாட பணிகளில் பாதிப்பு, தூக்கம் பறிபோவது, படிப்பு பாழாவது, சைபர்புல்லியிங்கில் சிக்குவது, உளவியல் பாதிப்பு, சைபர் குற்றவாளிகளுக்கு இரையாவது, பாலியல் கன்டன்ட்களை பார்க்க நேரிடுவது என... மொத்தத்தில் குழந்தைகளின் குழந்தைமையை சோஷியல் மீடியா பறித்துக் கொள்கிறது என்பதில் துளியும் மாற்றுக்கருத்தில்லை.

‘அன்னப்பறவை போல அதை நீ பாசிட்டிவ்வாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்று குழந்தைகளிடமும் சொல்லிவிட முடியாது. ஆம், வளர்ந்த குழந்தைகளாகிய நம்மில் பெரும்பாலானோருக்கே அது சாத்தியமற்றதாக இருக்கும் இன்றைய சமூக ஊடக உலகில், குழந்தைகள் என்ன செய்வார்கள்?

எனவே, சமூக வலைதளங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும், காப்பாற்றும் சட்ட நடவடிக்கைகளை அரசுகளை நோக்கி அழுத்தமாக வலியுறுத்துவோம். அது நடைமுறைக்கு வரும் வரை, நம் கண்காணிப்புதான் அவர்களுக்கான அரண் என்பதை உணர்ந்து, சமூக ஊடகங்களில் பாதுகாப்புடன் இயங்குவது குறித்து வீடுகளிலும், பள்ளிகளிலும் குழந்தைகளிடமே உரையாடுவோம் தோழிகளே!

கடுமை காட்டினால், பிள்ளைகள் மறைக்கவே பார்ப்பார்கள்... கவனம்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

‘மழை… டீ… மியூசிக்’ என உருகுபவர்களே, பாதுகாப்பு + முன்னெச்சரிக்கைக்கு முதல் மரியாதை செய்யுங்கள்!

வெயிலில் இருந்து ஓர் இளைப்பாறல் கொடுப்பதால், பலரும் இங்கு மழை விரும்பிகளே. மனங்களைக் கிளர்த்தும் மண்வாசம், மண்ணில் பரவும் புது பசுமை, காற்றில் தங்கும் ஈரம் என மழைக்காலம் என்பது பூமிக்கு ஒரு சூரிய விடு... மேலும் பார்க்க