``2005 உலகக் கோப்பைல 2-ம் இடம் வந்தப்போ ரூ. 1,000 கொடுத்தாங்க" - வைரலாகும் மிதால...
கேரள திரைப்பட விருதுகள்: "குழந்தைகளுக்கான படங்கள் எங்கே?" - ஆதங்கப்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்
கேரள மாநிலத்தின் 55-வது திரைப்பட விருது நிகழ்வு நேற்று நடைபெற்றது. விருதாளர்கள் தேர்வுக் குழுவில் பிரகாஷ் ராஜ் தலைமையிலான விருதுகளுக்கான நடிகர்களைத் தேர்வு செய்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ், ``128 படங்கள் விருது தேர்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் சிறந்த குழந்தைகள் படம் மற்றும் குழந்தை நட்சத்திரங்களுக்கான விருதுக்கு யாரையும் தேர்வு செய்யவே இல்லை.
ஏனெனில் குழந்தைகள் படத்தையோ, குழந்தைகள் படத்தை எடுக்க வேண்டும் என்ற முயற்சியைக் கூட நாங்கள் கண்டுபிடிக்கவில்லை.

ஆனால், திரைத்துறைக்கு மிகுந்த மரியாதையுடன் நாங்கள் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், குழந்தைகள் படம் உருவாக்குவது பற்றி சிந்தியுங்கள்.
திரையுலகமும், இயக்குநர்களும், எழுத்தாளர்களும் ஒன்றை உணர வேண்டும். இந்தச் சமூகம் முதியவர்கள், இளைஞர்களுக்கானது மட்டுமல்ல. குழந்தைகளும் இந்தச் சமூகத்தின் அங்கமே.
குழந்தைகள் என்ன யோசிப்பார்கள், புரிந்து கொள்வார்கள், அவர்களின் உலகம் என்ன என்பதும் சினிமாவாக்கப்பட வேண்டும்.
சில குழந்தைகளை சினிமாவில் நடிக்க வைப்பதன் மூலமோ, குழந்தை கதாபாத்திரங்களுக்குப் பெற்றோராக ஹீரோவோ அல்லது ஹீரோயினோ நடிப்பதாலோ அது குழந்தைகள் சினிமா ஆகிவிடாது.
அது அறவே குழந்தைகள் சினிமா அல்ல. இந்தச் சமூகத்தில் குழந்தைகள் என்ன சிந்திக்கிறார்கள் என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எந்தப் படமும் குழந்தைகளின் பார்வை பற்றிப் பேசவில்லை.
குழந்தை நட்சத்திரங்கள் யாரும் அவர்கள் வயதுக்கு ஏற்பவும் காட்டப்படவில்லை. அவர்கள் வெறுமனே உபகரணங்கள் போல் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

பெண்கள் பற்றிய படங்கள் ஏன் வருவதில்லை எனப் போராடினோம். அது நடக்க பெரிய காலம் தேவைப்பட்டது. இப்போது குழந்தைகள் பற்றி புரிந்து கொள்ளவும், அவர்கள் உலகத்தை அறிவது முக்கியம் எனவும் நாம் உணர வேண்டும்.
இந்த நடுவர் குழு திரையுலகத்திடம், குழந்தைகளுக்கான படம் மற்றும் அவர்களுக்கான வேடங்களை எழுதும்படி அழுத்தமாக கோரிக்கை வைக்கிறது" என்றார்.





















