செய்திகள் :

கோபத்தின் நாள் - சிறுகதை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

கல்லூரணி எனும் சிற்றூரின் கடைத்தெருவில் இருக்கும் அந்தக் காரை வீட்டிற்குள் தனியாகப் படுத்திருந்த ஜான்சி மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். அவளுக்கு வயிறு பசிப்பது போல் இருந்தது.

மெதுவாக எழுந்து முன்பக்க வாசல் கதவைத் திறந்த ஜான்சி மேல் வாசல் படியில் இருந்த சாப்பாட்டுக் கேரியரை எடுத்துக் கொண்டு கதவைப் பூட்டினாள். 

அவள் சாப்பிடும் போது சிந்திக் கிடக்கும் சோத்துப் பருக்கைகளைத்  தின்னுவதற்காகத் தினமும் வரும் பெரிய பெருச்சாளி ஒன்று தட்டட்டியில் இருந்து சத்தமில்லாமல் இறங்கி வந்து கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தவாறு அவளையே உற்றுப் பார்த்தது. 

பெருச்சாளிக்கும் இன்று பசி அதிகமாக இருந்தது. பாதிச் சோறைத் திங்க முடியாமல் அதைக் குப்பைக் கூடையில் கொட்டி விடுவது நித்தியம் நடக்கும் பழக்கம். ஆனாலும் அந்தப் பெருச்சாளி ஜான்சி சாப்பிடும் போது வட்டிலைச் சுற்றிலும் சிந்திக் கிடக்கும் சோறை முதலில் ருசி பார்த்த பிறகு தான் அந்தக் குப்பைக் கூடைக்குள் தன் குட்டிகளை இறக்கிச் சாப்பிடச் சொல்லும்.

குப்பைக்குள் இறங்கும் பெருச்சாளிக் குட்டிகள் எவ்வளவு பசி இருந்தாலும் சாப்பிடாது. அம்மா வந்து தங்களோடு சாப்பிட்டால் தான் சாப்பிடும். அது அம்மா பெருச்சாளி குட்டிகளுக்குச் சொல்லிக் கொடுத்த பாடம்.  உணவில் தனக்கான பங்கை அம்மா பெருச்சாளியும் சாப்பிட்டுவிடும். 

சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய மயக்கத்தில் அம்மா பெருச்சாளி மீண்டும் தட்டட்டியில் மெதுவாக ஏறித் தூங்க ஆரம்பித்து விடும். குட்டிகள் அம்மாவின் மீது உருண்டு புரண்டு அடித்துப் பிடித்து விளையாடும். அவ்வப்போது விழிகளைத் திறந்து குட்டிகளுக்கு எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவும் உலகில் சாமர்த்தியமாக வாழும் வழி முறைகளையும் சொல்லிக் கொடுக்கும்.

ஜான்ஸிக்குச் சாப்பாட்டுக் கேரியரை எடுக்கப் போகும் போது இருந்த பசி அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்ததும் காணாமல்  போய் விட்டது. சாயுங்காலம் கடைசி மகள் வருவதாகச் சொல்லி இருந்ததால் எப்படியாவது அவளைச் சமாதானப் படுத்தி அவளுடன் அவள் வீட்டுக்கு நிரந்தரமாகப் போய்விட வேண்டும் என்ற யோசனையில் மீண்டும் விரித்துக் கிடந்த படுக்கையில் படுத்து விட்டாள். 

அவள் கழுத்திலும் கைகளிலும் கிடந்த தங்க நகைகள் கூட இப்போது அவளுக்குப் பாரமாகவே இருந்தது. கழட்டி வைத்தால் பிள்ளைகள் புதிய நகைகளை வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். அதற்குப் பயந்து அவைகளையும் சுமந்தபடியே இருந்தாள். தலையைச் சுமக்கவே கஷ்டப்பட்ட கழுத்து தனது மக்களுக்காக நகையையும் சுமந்தே கஷ்டப்பட்டது.

அந்தப் பெருச்சாளிக்குப் பசி அதிகமாக இருந்ததால் ஜான்சியின் மீது கோபப்பட்டது. கீச் கீச்சென  கூச்சலிட்டபடி வந்த வழியே மேலே ஏறிப் போய்த் தன் குட்டிகளைச் சமாதானப் படுத்தி சோறு குப்பைக்கு வரும் வரையிலும் காத்திருக்கச் சொன்னது. இது எதையும் தெரிந்து கொள்ளாத ஜான்சி தனது மக்களைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தாள்.

இரண்டு இன்ஜினியர் மகன்களும் வெளிநாட்டில் உயர் பதவியில் இருக்கின்றனர். அம்மாவிற்குப் பணம் அனுப்புவதிலும் கைபேசியில் பேசுவதிலும் அவர்கள் எந்தக் குறையும் வைக்கவில்லை. இந்தியாவின் பெரிய நிறுவனத்தில் சீஃப் எக்ஸிக்கியூட்டிவ் ஆஃபீஸராக இருக்கும் பெரிய மகளுக்கு அம்மாவை வந்து எட்டிப் பார்க்கவும் நேரமும் இல்லை. 

கல்லூரணி அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் கடைசி மகள் மட்டும் சாப்பாட்டுக் கேரியரை பள்ளிக்கூடம் போகும் போது வாசல் படியில் வைத்து விட்டுப் போய் விடுவாள். மாலை பள்ளிக் கூடத்தில் இருந்து வீட்டுக்குப் போகும் போது வாசல் படியில் அம்மா வைத்திருக்கும் காலியான கேரியரை எடுத்துப் போய் விடுவாள். அவளுக்கும் அம்மாவிடம் நின்று பேச நேரமில்லை.

போன வாரத்தில் ஒரு நாள் "சில விஷயங்களைப் பேச வேண்டுமென ஒட்டும் தாளில் எழுதி சாப்பாட்டு கேரியரின் மேல் ஒட்டி வைத்து விட்டாள் ஜான்சி. இன்று மாலை கணவருடன் வந்து பேசுவதாக கைபேசியில் கூப்பிட்டுச் சொல்லி இருந்தாள் கடைசி மகள்.

தன் பிள்ளைகளை இவ்வளவு உயரத்தில் கொண்டு வந்து நிறுத்த அவள் பட்ட பாடுகள் மனக்கண்ணில் படமாக ஓடத் தொடங்கியது.

நடுத்தர வகுப்புக் குடும்பத்தில் திருமணமாகி வந்த ஜான்சி நான்கு குழந்தைகளைப் பெற்றாள். படிப்பு மட்டுமே தான் பெற்ற மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் என்று மனக்கணக்குப் போட்டு அக் கணக்கிலிருந்து சற்றும் விலகாமல் பிள்ளைகளை வளர்த்தாள் அவள்.

மனசை அலைபாய விடக்கூடாது. படிப்பிலும் ஆங்கிலம் பேசுவதிலும் திறமையாக இருக்க வேண்டும். அத்தோடு பொது அறிவிலும் வல்லமையுடன் இருக்க வேண்டுமென சொல்லி சொல்லி நான்கு பிள்ளைகளயும் ஊரே வியக்கும் வண்ணம் வளர்த்தாள்.

நடுத்தர உயரமும் நறுவிசாக அவள் சேலை கட்டியிருக்கும் பாங்கும் பார்ப்பவரை வணங்கச் சொல்லும். அவள் செவிகளை அலங்கரித்த இருபத்தோரு மாணிக்கக்கல் வைத்த தோடு ஜான்சிக்குக் கம்பீரத்தைக் கொடுத்தது. 

படித்தால் ஜான்ஸியின் பிள்ளைகளைப் போல் படித்து வாழ்க்கையில் உயர வேண்டும் என ஊர் அவள் குடும்பத்தைக் கொண்டாடியது. ஒன்றாம் வகுப்பில் இருந்து இப்போது வேலை பார்க்கும் இடம் வரை ஜான்சியின் பிள்ளைகள் முதல் இடத்தில் இருக்கின்றனர்.

வேலையில் சேர்ந்த பிறகும் தத்தமது துறையில் முதலிடத்தைத் தக்க வைக்கவும் பாடுபட வேண்டும் என்பதையும் மனம் சுளிக்காமல் போராடி முன்னேறும் கலையையும் அவளே தன் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தாள்.

ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு துறையைத் தேர்ந்தெடுத்து அதில் வல்லுனராகி ஆளுமை செலுத்தும் திறமை பெற்றனர். ஆசிரியர் தொழிலை வேலையாக நினைக்காமல் தன் உயிர் மூச்சாக எண்ணி தன்னைக் கல்விக்காக அர்ப்பணித்துக் கொண்ட கடைசி மகள் இந்தியாவின் சிறந்த ஆசிரியர் என்ற பெருமைக்குரிய பட்டத்தை ஜனாதிபதி கைகளால் வாங்கியதை எண்ணிய ஜான்சியின் மனம் பெருமிதத்தில் விம்மியது.

அவள் படுத்திருக்கும் அறைக்குள் அவளது பிள்ளைகளைப் பற்றி செய்தித்தாள்களில் வந்த செய்திகள் அனைத்தையும் வெட்டி ஒட்டி அலங்கரித்து வைத்திருந்தாள். ஜான்சியின் கணவர் இறந்த பிறகு தனிமை அவளைச் சூழ்ந்தது.

பசியில் வந்த கோபத்தோடு ஜான்சியை வெறித்துப் பார்த்த பெருச்சாளிக்குத் தனது குட்டிகள் பசியில் வாடுவது நினைவில் வந்து வாட்டியது. இவளை நம்பி வேறு எங்கும் சாப்பாடு தேடப் போகாமல் இருந்தது தப்பெனப் புரிந்த பெருச்சாளி தன் குட்டிகளை அமைதிப் படுத்தியது. பெருச்சாளியின் குட்டிகள் "அம்மா எப்போது நம்மைச் சாப்பிடச் சொல்லுவாள்" என அம்மாவின் கண்களையே அகோரப் பசியுடன் பார்த்தவாறு செவிகளை நட்டமாக நீட்டிக் கொண்டிருந்தது.

"இவள் எப்போது சாப்பிட்டு நாம எப்போது சாப்பிடுவது?" என்ற கவலையில் டம்மெனக் குதித்து சாப்பாட்டுக் கேரியரைத் தட்டி விட்டது பெருச்சாளி. கேரியர் விழுந்த சத்தத்தில் தன் மகளிடம் வைத்திருந்த மனதை வயிற்றை நோக்கித் திருப்பினாள் ஜான்சி.

அப்போது கதவைத் தட்டும் சத்தம் கேட்கவும் மீண்டும் பசியை மறந்த ஜான்சி வேகமாகப் போய்க் கதவைத் திறந்து கணவருடன் வந்த மகள் கையைச் சந்தோசமாக இறுக்கமாகப் பிடித்தவாறு வீட்டுக்குள் அழைத்து வந்து நாற்காலியில் உட்காரச் சொன்னாள்.

"எதுக்கு ம்மா எங்களை இங்கே வரச் சொல்லிக் கூப்பிட்டீங்க? ஃபோனில் சொல்ல முடியாத விஷயம் எனச் சொன்னதால் தான் அவசரமாக வந்தேன் ம்மா. எனக்காக வீட்டில் மாணவர்கள் படிக்கக் காத்திருக்காங்க! வருஷ வருஷம் என்னிடம் படிக்கிறவங்க தான் முதல் இடத்தில் இருக்காங்க. எனக்கான ஒவ்வொரு கணமும் ரெம்ப முக்கியம் அம்மா" என்ற மகளிடம் கேட்க வந்ததை மறந்து அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் ஜான்சி.

"அம்மா" என்று ஓங்கிக் குரல் கொடுத்து அம்மாவை உலுக்கினாள் புத்திசாலியான மகள்.

தலையைச் சிலுப்பிக் கொண்டு மகளின் கைகளைப் பிடித்துக் கொண்ட  ஜான்சி "எனக்குத் தனியாக இருப்பது கஷ்டமாக இருக்குது ம்மா. நான் உன் வீட்டிலேயே வந்து இருந்து விடுகிறேன். என்னாலான உதவியை உனக்குச் செய்கிறேன் ம்மா. என்னைக் கையோடு கூட்டிட்டுப் போ ம்மா" என்று சொன்னவள் மகளின் முகத்தையே ஆவலோடு பார்த்தாள்.

"அத்தை நீங்க பெரியவங்க, உங்க பிள்ளைகள் உச்சத்துக்குப் போக வழி காட்டினவங்க. ஆரோக்கியமாக இருக்கிற நீங்க உங்க பக்கத்துல இருக்குற எத்தனையோ பேருக்கு வழிகாட்டலாம். இங்கேயே இருங்க!" என்ற மருமகனின் அழுத்தமான குரலில் மகளின் கையைப் பிடித்திருந்த ஜான்சியின் கரங்கள் ஏமாற்றத்தில் நழுவியது.

"ஆமாம் ம்மா, உங்க பலம் உங்களுக்குத் தெரியலை. சந்தோசமாக இருங்க" என்று எழுந்த மகளைப் பதிலே சொல்லாமல் வெறித்துப் பார்த்தபடி அசையாமல் இருந்தாள் ஜான்சி.

கீழே கிடந்த சாப்பாட்டுக் கேரியரை எடுத்த மகள் அது கனமாக இருக்கவும் அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தாள். "என்னோட பேச நினைத்துச் சாப்பிட மறந்துட்டீங்களா ம்மா? வீட்டுக்குப் போனதும் சூடான சாப்பாடு செய்து அனுப்பி வைக்கிறேன் ம்மா." அம்மா சாப்பிடவில்லை எனக் கவலைப் படாத மகளின் சிரித்த முகத்தையே ஜான்சி விழிகள் கசியப் பார்த்தாள்.

"நாளன்னைக்குக் காலையில் என்னிடம் படித்த மாணவன் உலக அளவில் நடந்த வேர்ல்ட் குவிஸிங் சேம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி வாகை சூடியிருக்கான் ம்மா. அவனைப் பாராட்டி அறிவியல் தமிழ் மன்றம் நடத்தும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.  அம்மாணவனுடன் சிறந்த முறையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியராக எனக்கும் பாராட்டு விழா நடக்கிறது அம்மா. உன் பிள்ளைகள் இவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்க நீங்க மட்டும் தான் காரணம்" என்ற மகள் அம்மாவின் அறையில் ஒட்டப் பட்டிருந்த செய்திகளில் தங்களின் புகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் தடவிப் பார்த்து விட்டுக் கிளம்பினாள்.

கதவைப் பூட்டி விட்டு தான் வழக்கமாகப் படுக்கும் இடத்தில் வந்து உட்கார்ந்த ஜான்சியை முறைத்துப் பார்த்தது அம்மா பெருச்சாளி. எனது பனிரெண்டு குட்டிகளும் நானும் பசியோடு இருக்க இவளல்லவா காரணம் என்ற கோபத்தில் சரசரவெனக் கீழே இறங்கியது. ஜான்சி வெற்று மனதுடன் பசியறியா மயக்கத்தில் படுக்கையில் படுத்து மனம் நிறைந்த துக்கத்தில் தூக்கத்தில் ஆழ்ந்தாள். 

சாப்பாட்டுக் கேரியரில் இருந்து கசிந்து ஒழுகிக் கிடந்த குழம்புகளை நக்கியது அம்மா பெருச்சாளி. கெட்டுப்போன அந்த குழம்பு பிடிக்காததால் வெறுப்பு நிறைந்த கோபத்தில் ஜான்சியை நோக்கித் தன் பசி நிறைந்த கனத்த உடம்பைத் தூக்கியவாறு அம்மா பெருச்சாளி ஓடியது.

அம்மா தங்களுக்கான உணவைக் காட்டியதாகப் புரிந்து கொண்ட பனிரெண்டு குட்டிகளும் அம்மாவின் பின்னால் ஓடியது.

மறுநாள் காலையில் மறக்காமல் சாப்பாட்டுக் கேரியரை அம்மா வசிக்கும் வீட்டின் மேல் படியில் வைத்து விட்டு விழாவிற்குக் கிளம்பிப் போய் விட்டாள் ஆசிரியை மகள்.

எப்போதும் வாசலில் சாப்பாட்டுக் கேரியர் நிற்கும் என்பதால் சாப்பாட்டுக் கேரியரை எடுக்க ஜான்சி வெளியே வராததை அருகில் இருந்த வீட்டினரும் கடைத்தெருவும் கண்டு கொள்ளவில்லை. 

ஊரில் இருந்து வந்த மகள் பள்ளிக்கூடம் போகும் வழியில் தன்னைப் பாராட்டி எழுதியிருந்த செய்தித்தாள் சொருகிய சாப்பாட்டுக் கேரியரை அம்மா வீட்டு வாசல் படியில் வைக்கும் போது அங்கே உள்ளே இருந்து கட்டெறும்புகள் சாரை சாரையாக படையெடுத்து இறங்குவதைப் பார்த்தாள்.

லேசான துர்நாற்றமும் உள்ளிருந்து வருவதைக் கண்டவள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

ஜான்சியின் முகம் முழுவதும் கடித்துக் குதறப்பட்டு இருந்தது. கண்கள், நாசி, செவி எதுவுமே இல்லாமல் அவளின் முகம் தன் அடையாளத்தை இழந்து இருந்தது. அவள் உடல் முழுமையும் கட்டெறும்புகள் இடைவெளி இல்லாமல் மொய்த்துக் கொண்டிருந்தது. அறையின் வலது மூலையில் ஒரு கம்மலும் உடலுக்குப் பக்கத்தில் ஒரு கம்மலும் மின்னிக் கொண்டிருந்தது.

அம்மா பெருச்சாளி தன் குட்டிகளை அழைத்துக் கொண்டு வேறு இடத்தில் குடி புகுந்து விட்டது. 

- கலைமதி சுப்பையா 

பேரையூர் 

இராமநாதபுரம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

செம்பன் - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சிங்கக்கிழவி செங்கம்மா - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இலக்கிய வட்டத்தில் சிறகடிக்கும் 11-ம் வகுப்பு மாணவி; ஏழாவது புத்தக வெளியீட்டை எதிர்நோக்கும் சூடாமணி!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளரான மு.சூடாமணி தன் குழந்தைப் பருவத்திலேயே புத்தகங்களை எழுதத் தொடங்கியவர். தற்போது ஆறு புத்தகங்கள் வரை எழுதியிருக்கும் இவருக்கு, தமிழக அரசின் சார்பில் 202... மேலும் பார்க்க

`மொழிபெயர்ப்பின் நிறம் ஆர்.சிவக்குமார்' - ஆகுதி பதிப்பகத்தின் ஒரு நாள் கருத்தரங்கு

எழுத்தாளர் அகரமுதல்வனின் ஆகுதி பதிப்பகம் வருடந்தோறும் படைப்பாளர்களையும், அவர்களுடைய படைப்புகளையும் கொண்டாடுவதற்கான நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும். அப்படி இந்தாண்டிற்கான ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்வில் மொழி... மேலும் பார்க்க

முட்டாள் என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! - முரண்பாடும் விளக்கமும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கோபுரங்கள் சாய்வதில்லை! - ஒரு தாயின் பாடம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் /விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தி... மேலும் பார்க்க