செய்திகள் :

“கோர்ட்ல கூட குழந்தையை திரும்பிப் பார்க்காத அம்மா… மகளுக்காக வாழும் அப்பா”

post image

"வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் சவாலாகத்தான் இருக்கு. உடல் அளவுலேயும், மனசளவுலேயும் சோர்ந்து போயிட்டேன். ஆனா, என் பொண்ணுக்காக நான் வாழணும். வாழ்ந்தே ஆகணும். அவளுக்கு அப்பாங்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமானு எனக்குத் தெரியல. ஆனா, என் குரலை கேட்டா அவ முகத்துல சிரிப்பு வரும். அந்த சிரிப்புதான் என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷத்தையும் நகர்த்துற சக்தியாக இருக்கு" மகளை மடியில் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார் அகமது பாஷா. அவர் குரல் கேட்கும் ஒவ்வொரு முறையும், அந்த குழந்தையின் முகத்தில் சின்ன சிரிப்பு தோன்றி மறைந்தது.

அப்பா - மகள்

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் அகமது பாஷா. வீட்டின் ஒரு பகுதியிலேயே சிறிய தையல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஆட்டிசம் மற்றும் பலதிறன் குறைபாடு கொண்ட தன் மகளை, சிங்கிள் ஃபாதராக இருந்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். குழந்தை வளர்ப்பில் உள்ள சவாலகளையும், கடந்து வந்த போராட்டங்களையும் பற்றிப் பேச ஆரம்பித்தார் அகமது பாஷா.

"சொந்த ஊரு சென்னை. சின்ன வயசிலேயே அம்மா, அப்பாவை இழந்துட்டு ஒரு ஹோம்ல தான் வளர்ந்தேன். அன்புக்காக ஏங்குனவன் நான். பத்தாம் வகுப்பு வரை படிச்சேன். அப்புறம் ஹோம்ல இருந்து வெளியே வந்து கிடைச்ச வேலைகளை செஞ்சு சம்பாதிக்க ஆரம்பிச்சேன். 25 வயசுல கல்யாணம் ஆச்சு. என் வாழ்க்கையில புது உறவு கிடைச்சுது. இதுவரை நான் ஏங்குன அன்பு கிடைக்கப்போகுது ஆசையாக வாழ்க்கையை தொடங்குனேன். தையல் தொழில் செஞ்சு குடும்பத்தை பார்த்துக்கிட்டேன்.

அகமது

என் வாழ்க்கையில நான் கொண்டாடித் தீர்த்த நாள்னா அது என் மக பொறந்த நாள் தான். அவளை கையில வாங்குனப்போ உலகத்தையே என் கையயில கொடுத்த மாதிரி இருந்துச்சு. ஆனா, என் மனைவிக்கு ஆண் குழந்தை பொறக்கலனு சின்ன வருத்தம் இருந்துச்சு. 'ஆம்பளப் புள்ள பொறந்திருக்கலாம்'னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. பாப்பா பொறந்த ஆறாவது மாசத்துல இருந்தே அவகிட்ட சின்னச்சின்ன வித்தியாசங்கள் தெரிஞ்சுது. தவழல, முட்டி போடல, நடக்கல, சிரிப்பதே வித்தியாசமா இருந்துச்சு.

டாக்டர்கிட்ட போனோம். டாக்டர்கள், குழந்தைக்கு ஆட்டிசமும், பலதிறன் குறைபாடும் இருக்குனு சொன்னாங்க. அவளால் நடக்க முடியாமலும் போகலாம்னு சொன்னாங்க. அந்த நிமிஷம், வாழ்க்கையே கையிலிருந்து நழுவிப்போன மாதிரி இருந்துச்சு. ஒரு நாள் முழுக்க அழுதுட்டே இருந்தேன். அடுத்தநாள் அவ முகத்தை பார்க்கும் போது, எந்த தப்புமே பண்ணாத இவளுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய தண்டனைனு தோணுச்சு. அம்மா - அப்பானு ரெண்டு பேர் இருக்கோம். குழந்தையோட குறையை நிறையா மாத்தணும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் பொண்ணை பெரிய இடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தணும்னு நினைச்சேன். என் மனைவிக்கும் ஆறுதல் சொன்னேன். ஆனா, இதுக்கு முன்னாடி குழந்தை சார்ந்து அவங்களுக்கு இருந்த வருத்தம் வெறுப்பா மாற ஆரம்பிச்சுருந்துச்சு.

girl child

ஏதோ ஆற்றாமையால பண்றாங்க. சரி ஆகிருவாங்கனு நினைச்சேன். ஆனா, ஒரு நாள் என்கிட்ட சண்டை போட்டுட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க. திரும்ப வரவே இல்ல. குழந்தை இப்படி பொறந்ததே தண்டனைதான். கூடுதலா அம்மாவும் இல்லங்கிறது எவ்வளவு பெரிய சுமை. தன்னைச் சுற்றி என்ன நடக்குதுனு தெரியாத அந்த பிஞ்சு மனசுக்கு நான் எப்படி புரிய வைக்கிறது. அம்மா இல்லாத குழந்தைக்கு நானே எல்லாமுமாக மாறுனேன்" சில நிமிடங்கள் அமைதியாகி மீண்டும் தொடர்ந்தார் அகமது.

"அவங்க குழந்தையை விட்டுட்டு போகும் போது அவளுக்கு ஒரு வயசு. கொரோனா நேரம். தையல் தொழில் எல்லாம் முடங்கிருச்சு. பாப்பாவுக்கு டயப்பர் வாங்கவும், பால் வாங்கவும் தினமும் நூறு ரூபாய் வேணும். எனக்கும் சப்போர்ட் பண்ண யாரும் இல்ல. நல்லா இருக்கும் குழந்தைகளையே அக்கம் - பக்கத்துல பார்த்துக்க யோசிப்பாங்க. சிறப்புக் குழந்தைங்கிற பட்சத்துல உதவி கேட்கவே தயக்கமா இருக்கும். என்னால வேலைக்கும் போக முடியல. சம்பாத்தியமும் இல்ல. குழந்தையை சமாளிக்கவும் சிரமமா இருந்துச்சு. உண்மையைச் சொல்லணுமா கைக்குழந்தையை வெச்சுக்கிட்டு நான் படாத கஷ்டம் இல்ல."

அந்த நாட்களை நினைவுகூரும் போது, அகமது சில நொடிகள் பேசாமல் அமைதியாக இருந்தார்.

Single Father Autism Child

"வேற வழியே இல்லாம குழந்தையை தூங்க வெச்சுட்டு, வீட்டை பூட்டிட்டு அதிகாலை மூணு மணிக்கு பால் பாக்கெட் போடுற வேலைக்குப் போவேன். படபடப்பாகவே இருக்கும். ஏழு மணிக்கு அவ எழுந்திரிப்பா. அதுக்குள்ள அடிச்சு புடிச்சு வீட்டுக்கு ஓடி வருவேன். ஒரு நாள் சைக்கிள் பஞ்சர் ஆகி, நான் வீட்டுக்கு வர லேட் ஆகிருச்சு. குழந்தை தூங்கி எந்திரிச்சு, அழுது, ஆர்பாட்டம் பண்ணிட்டா. அதைப் பார்த்து அக்கம் - பக்கத்துல இருந்தவங்க எல்லாம் ஒரு மாதிரி பேசிட்டாங்க. அதனால அந்த வேலையை விட்டுட்டு வீட்ல இருந்தே தைக்க ஆரம்பிச்சேன்" என்ற அகமதுவின் கண்கள் ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றது. நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார்.

"பாப்பாவுக்கு நாலு வயசா இருக்கும் போது எங்களுக்கு விவாகரத்து ஆச்சு. கோர்ட்ல வெச்சு அவங்க என் குழந்தையை திரும்பி கூட பார்க்கல. நல்ல வேலை அவளுக்கு தன்னைச் சுத்தி என்ன நடக்குதுனு தெரியல. தெரிஞ்சுருந்தா இவ்வளவு பெரிய நிராகரிப்பை அவ எப்படி தாங்கியிருப்பா. இப்போ வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஆனா, எனக்கு இன்னொரு வாழ்க்கையை தேட மனசு வரல. என் மக தான் உலகம்னு வாழ ஆரம்பிச்சுட்டேன்" என்றவர் குழந்தை வளர்ப்பில் உள்ள சவால்கள் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

ahamed

"சராசரி பெண் குழந்தையை வளர்க்கிறதே கஷ்டம். சிறப்புக் குழந்தைங்கிற பட்சத்துல இன்னும் சவாலாக இருக்கு. பெண் குழந்தைகளுக்கு நடக்குற வன்முறைகளையெல்லாம் கேட்கும்போது ஒரு நிமிஷம் கூட அவளை தனியா விட்டுட்டு போக மனசு வர மாட்டிக்குது. 24 மணி நேரம் அவ கூடவே தான் இருக்கேன். சமைக்கிறது, அவளோட காலைக் கடமைகளுக்கு உதவுறது, சாப்பாடு ஊட்டுறதுனு எல்லாமே நான் தான். நான் ஒரு நிமிசம் நான் பக்கதுல இல்லேனா என்னைத் தேடி அழ ஆரம்பிச்சிருவா. அவ பேசுற ஓரே வார்த்தை, 'அப்பா'. அவளுக்கு தெரிஞ்ச ஒரே விஷயம் அப்பா....ஆனா, இந்த அப்பாவால அவளோட ஆயுசுக்கும் வர முடியுமாங்கிற கேள்வி மட்டும் மனசை அழுத்திட்டே இருக்கு" குரல் உடைந்து அமைதியாகிறார் அகமது.

"அவ பெரிய மனுஷி அகுறதயெல்லாம் எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியல. அரசாங்கத்துல இருந்து அவளுக்கு மாசம் ரெண்டாயிரம் ரூபா தர்றாங்க. அது டயப்பர் செலவுக்கே பத்தமாட்டிக்குது. அவளுக்கு ஸ்பீச் தெரபி கொடுக்கணும். நடக்க பயிற்சி கொடுக்கணும். தனியார் மருத்துவமனைக்கு போனா, ஒரு முறை சிகிச்சை வழங்க 600 ரூபா கேட்குறாங்க. ஒரு குறிப்பிட்ட அரசு மருத்துவமனையில தான் இந்த வசதி இருக்கு. அதுக்கு கூட்டிட்டுப் போக நிறைய செலவுகள் ஆகுது. அவளை நிக்க வைக்க பெல்ட் வேணும்...அதுவே 45,000 ரூபா சொல்றாங்க. என்னால வாங்க முடியல. துணியை கட்டி நிக்க வெச்சுட்டு இருக்கேன். உதவினு கேட்டா, 'நீ ஆம்பளதான சம்பாதிச்சு பிள்ளைய பாரு'னு சொல்றாங்க. ஆனா, சம்பாதிக்க போக முடியாத இடத்துல நான் இருக்கேன். யாராவது உதவுனா, நல்லா இருக்கும்னுதான் தினமும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். உண்மையைச் சொல்லணும்னா சிங்கிள் மதர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் சிங்கிள் ஃபாதர்களுக்கு கிடைக்கிறது இல்ல. அதை அரசாங்கம் முன்னெடுக்கணும். அனுதாபத்தைவிட ஆதரவு தேவையா இருக்கு...

girl child

எனக்கு பிறகு அவளை யார் பாத்துக்கப்போறாங்கன்னு தினமும் பயமா இருக்கும். ஆனா, அந்த பயத்தோடவே வாழ பழகிட்டேன். அவ என் குரலை கேட்டா இன்னும் சிரிக்கிறா. அந்த சிரிப்பு இருக்குற வரைக்கும், நான் சோர்ந்து போகக்கூடாதுனு தினமும் என்னையே நானே சமாதானப்படுத்திக்கிறேன்” என்று சொல்லும்போது, அருகில் இருந்த மகள் அவரின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டிருந்தாள்.

கைமாறாக வாங்கிய பணம்; ரூ.1500-ஐ திருப்பிக் கொடுக்க நண்பரைத் தேடி அலையும் 84 வயது முதியவர்!

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் பரமசிவன். 84 வயதான இந்த முதியவர், கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்துள்ளார். கோவையைச் சேர்ந்த இவரின் நண்பரான பால்சாமி என்பவர், கோவில்பட்டி கருவ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: ஒரே மகனை விபத்தில் பறிகொடுத்த தாய் - உடல் உறுப்புகளையும் தானமாகக் கொடுத்த நெகிழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டம், காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் இலங்கேஸ்வரன். இவர், கடந்த 2018-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவரின் மனைவி கோமளேஸ்வரி (வயது 57). இவர்களின் மகன் தினேஷ் குமார் (வயது 28). டிப்ளமோ படித்திரு... மேலும் பார்க்க

புதுக்கோட்டை ஆசிரியர் பொன்.சக்திவேல்; பார்வையற்றோரின் இருள் விலக்கும் `டிஜிட்டல் ஏகலைவன்!'

சக்திவேலின் டிஜிட்டல் புரட்சி"கண் பார்வை இல்லாதவர்களுக்கு ஒரு புத்தகத்தை வாசித்துக் காட்ட ஆள் கிடைப்பது வரம். ஆனால், பிறர் உதவியை எதிர்பார்க்காமல் அவர்களே அந்தப் புத்தகங்களை வாசிக்கும் சூழலை உருவாக்கி... மேலும் பார்க்க

அமெரிக்கா: 176 பட்டதாரிகளின் கல்விக் கடன்களைத் திருப்பி செலுத்திய இந்திய வம்சாவளி அனில் கோச்சர்!

அமெரிக்காவில் நடைபெற்ற வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழகத்தின் வில்சன் காலேஜ் ஆஃப் டெக்ஸ்டைல்ஸ் பட்டமளிப்பு விழாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் கோச்சர் மற்றும் அவரது மனைவி மரிலின் மாணவர்களுக்கு... மேலும் பார்க்க

`இதோ என் சகோதரி' - கல்லறையைத் தோண்டிய தம்பி; ஒடிசாவில் 19,300 ரூபாய்க்காக எலும்புக்கூடாக வந்த சகோதரி

ஒடிசா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம், மனிதனின் வறுமையும் மாற்றவே முடியாத சில விதிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதற்கான ஒரு அதிர்ச்சிகரமான சாட்சியாக அமைந்தது. க... மேலும் பார்க்க

65 வயதில் BMWR1200GSA; உலகம் சுற்றும் வாலிபனாக பல நாடுகளைச் சுற்றிச் வரும் கதிரவன்

மலேசியத் தமிழரான கதிரவன் தனியார் கம்பெனி ஒன்றில் மேனேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது ஓய்வு காலத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கும் விதமாக 65 வயதில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்... மேலும் பார்க்க