``கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா `இதில்' உதவும்'' - புதின் அறிவிப்பு
சபரிமலை: `தங்கம் கொள்ளை வழக்கில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா?' - அமலாக்கத்துறை விசாரணை
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தங்கம் கொள்ளை வழக்கில் உபயதாரர் என அறியப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆபீசர் முராரி பாபு, சபரிமலை முன்னாள் எக்ஸ்கியூட்டிவ் ஆபீசர் சுதீஸ், திருவாபரணம் கமிஷனர் கே.எஸ்.பைஜூ, திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் ஆணையரும், தேவசம்போர்டு முன்னாள் தலைவருமான என்.வாசு மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உள்ள தேவசம்போர்டு முன்னாள் செயலாளர் ஜெயஸ்ரீ மற்றும் முன்னாள் நிர்வாக அதிகாரி எஸ்.ஸ்ரீகுமார் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துள்ளது சிறப்பு விசாரணைக்குழு.

அவர்கள் முன் ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில் மனு அளித்தனர். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் ஜெயஸ்ரீ மற்றும் ஸ்ரீகுமார் ஆகியோர் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை சன்னிதானத்தில் உள்ள விலைமதிப்பற்ற பொருட்களிலிருந்து தங்கம் திருடப்பட்டதற்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருப்பதாகவும், உன்னிகிருஷ்ணன் போற்றியுடன் தொடர்புடைய இன்னும் பலர் வெளிச்சத்திற்கு வரவில்லை என்றும் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ்.பைஜூவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க சபரிமலை தங்கக் கொள்ளையின் பின்னணியில் கருப்புப்பணம் வெள்ளையாக்கப்பட்டதா என்பதை விசாரிக்க தடையில்லை என கேரளா ஐகோர்ட் தேவசம் பெஞ்ச் கூறியிருந்தது.
இதையடுத்து விசாரணைக்கு களம் இறங்கிய அமலாக்கத்துறை, இந்த வழக்கின் ஆவணங்களைக் கோரி கொல்லம் விஜிலென்ஸ் நீதிமன்றத்தில் மனு அளித்து உள்ளது.
வழக்கில் எஃப்.ஐ.ஆர் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் அறிக்கையின் நகல் வேண்டும் எனவும் அமலாக்கத்துறை கோரியுள்ளது.

தங்கம் கொள்ளை வழக்கில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குற்றச்சாட்டு உள்ளதால் அது குறித்து விசாரணை நடத்தவும், இந்த வழக்கில் எவ்வளவு பணம் கைமாறப்பட்டுள்ளது என்பது பற்றி விசாரிக்க உள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறையின் மனு குறித்து டிசம்பர் 10-ம் தேதி விஜிலென்ஸ் நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது.



















