Mrunal Thakur: `பிப்.14 ஆம் தேதி எனக்கு திருமணமா?' - மிருணாள் தாகூர் விளக்கம்
சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 வயது மாணவி காவியா யாதவ்
சமீபத்தில் உத்திரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி சுமார் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி சார்பில் நெல்லை மாவட்டம் பாரத் ரைபிள் கிளப்பிலிருந்து 12 வயதிற்கு உட்பட்ட ஏர் பிஸ்டல் பிரிவில் ஏழு வயதையுடைய காவ்யா யாதவ் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.
பதக்கம் வென்ற மாணவி காவ்யா யாதவ் வருகின்ற மே மாதம் பூடானில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி பெற்றுள்ளார்.
மாணவி காவ்யா யாதவ் அவர்களை லிட்டில் பிளவர் சிபிஎஸ்இ பள்ளியில் உற்சாகத்தோடு சந்தித்தோம், மகிழ்ச்சியோடு அவர் நம்மோடு உரையாடிய போது,
" நான் காசியாபாத்தில் நிகழ்ந்த தேசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தேன். வருகின்ற மே மாதம் பூடானில் நடைபெற உள்ள சர்வதேசப் போட்டிக்கும் தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய அப்பா ஆவின் பால் வியாபாரம் செய்து வருகிறார். எனக்கு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியை முழுவதுமாக வழங்குவது என் அப்பா தான். தினமும் ஒரு மணி நேரம் அப்பா எனக்கு பயிற்சி அளிப்பார். நான் தற்போது மே மாதம் பூடானில் நடக்க உள்ள சர்வதேச போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன்" என்று தன் மழலை பேச்சின் உற்சாகத்தோடு பேசி முடித்தார் .
பிறகு மாணவியின் தந்தை காந்திமதிநாதன் அவர்களிடம் பேசியபோது, "பாரத் ரைபிள் கிளப் என்ற பெயரில் நான் மாணவர்களுக்கு துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டை கற்றுத் தருகிறேன். தற்போது என்னிடம் ஏழு மாணவர்கள் துப்பாக்கி சுடுதல் கற்று வருகிறார்கள். என் மகள் திறமைசாலி எதையும் எளிதில் கையாள்வார். கற்றுக் கொடுப்பதை சுலபமாக கற்றுக் கொள்வார். எனது மகள் தினமும் இரவு 8 மணியிலிருந்து10 மணி வரை இரண்டு மணி நேரம் பயிற்சி மேற்கொள்வார். இதுவரை நடைபெற்ற எல்லா போட்டிகளிலும் நானும், என் மனைவியும் உடனிருந்து ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.
மேலும் காவ்யா யாதவின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி கூறுகையில் ,"நம் இந்திய திருநாட்டிற்கு பல பதக்கங்களைப் பெற்று சாதனை படைக்கவும், எனது மகளின் எதிர்கால கனவாக இருக்கக்கூடிய ஐபிஎஸ் அல்லது இந்திய ராணுவத்தில் ஏதேனும் ஒன்றில் எனது மகள் மிகப்பெரும் உயரத்திற்குச் செல்ல என் மகளுக்கு உறுதுணையாய் நிற்பேன்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

















