'10 வயதில் சதம்' - அண்ணன் வைபவ் வழியில் மிரட்ட வரும் அடுத்த சூறாவளி ஆசீர்வாத் சூ...
"சாண்ட்ரா இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா எங்கிட்ட டைவர்ஸ் வாங்கியிருப்பாங்க" - பிரஜின் பேட்டி
''தமிழில் இதுவரை 16 படங்கள் வந்திடுச்சு. நாலு படம் ரிலீஸ்க்கு வெயிட்டிங். மலையாளத்துல 4. கன்னடம், தெலுங்கில் தலா 1. ஆனாலும் எனக்குப் பிறகு டிவியில இருந்து சினிமாவுக்குப் போன விஜய் சேதுபதி, சிவ கார்த்திகேயன், சந்தானத்துக்குக் கிடைச்சது மாதிரியான் அங்கீகாரம் கிடைக்கலை.
காரணம் என்னவா இருக்கும்னு பலமுறை யோசிச்சதுல என் பக்கம் தப்பு இல்லைனு தோணுது. ஒரு வேளை நான் நினைக்கிறதுதான் தப்பான்னும் தெரியலை. ஆனாலும் சினிமாவை நான் விடறதா இல்லை''
ஆங்கராக டிவியில் அறிமுகமாகி சீரியல், சினிமா என விடாது போராடிக் கொண்டிருக்கும் பிரஜின் வார்த்தைகளில் வலியை உணர முடிகிறது.

டிவியில் ஆங்கராக இருக்கும் போதே உங்களுக்கு ரசிகைகள் அதிகம். அந்த டிவி எண்ட்ரி பத்தி?
அப்பா போலீஸ்ங்கிறதால ஸ்கூல் நாள்கள்ல போலீஸ் படங்கள் மீது ஆர்வம் அதிகமா இருந்தது. விஜயகாந்த், அர்ஜுன் சார் படங்களை நிறைய பார்ப்பேன்.
அது மூலமா நடிப்பு மீது ஆர்வம் வந்ததுனு நினைக்கிறேன் காலேஜ் முடிச்ச புதுசுல எல்.ஐ.சி-யில ஒரு விளம்பரத்துக்கு மாடல் வேணும்னு சொல்லி போட்டோ கேட்டாங்க, நண்பர்கள் சிலர் சொன்னாங்கனு நானும் போய் லைன்ல நின்னு கொடுத்துட்டு வந்தேன்.
கொஞ்ச நாளில் தி இந்து பேப்பர்ல என் போட்டோவோட அந்த விளம்பரம் வந்தது, அது ஒரு நம்பிக்கையைத் தந்தது,
அடுத்து கொஞ்ச நாள்ல சன் மியூசிக் சேனல்ல ஆங்கரிங் பண்ண ஆடிஷன்னு கேள்விப்பட்டு அங்க போனேன். அப்ப சக்ஸேனா அங்க முக்கிய பொறுப்புல இருந்தார். வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போய் நின்னவன் அவர் கண்ணுல பட்டுட்டேன்.
என்னைப் பார்த்து என்ன தோணுச்சோ நேரா உள்ள கூப்பிட்டுப் போய் ஆடிஷன் அட்டெண்ட் பண்ண வச்சார். அடுத்த சில தினங்களிலேயே வந்து சேரச் சொல்லிட்டாங்க. இதெல்லாம், பார்க்குறப்ப நமக்கே ஒரு கான்ஃபிடெண்ட் வருமில்லையா, அப்படிதான் ஸ்கிரீன் பக்கம் வந்தேன், .
பிறகு சேனல்ல என் நிகழ்ச்சிகளுக்குக் கிடைச்ச வரவேற்பு வேற லெவல் என்னுடைய ஷோ மூலம்தான் சாண்ட்ராவே எனக்கு கிடைச்சாங்க. ஆங்கரா இருந்த நாள்களை என் வாழ்வின் வசந்த காலம்னு சொல்வேன்.

சினிமா தேடலில் முழுமையாக இறங்கலையா? அல்லது டிவியிலயே இருந்திருந்தா அங்கயாவது நிரந்தரமான இடம் கிடைச்சிருக்கும். சீரியலா சினிமாவாங்கிற குழப்பம் இருந்ததா?
ஆங்கரா இருந்தப்ப தான் விஜய் டிவி சீரியல்ல நடிக்க கூப்பிட்டாங்க. அங்க நடிச்ச சீரியல்லாம் ஹிட்தான். முதல் சீரியலை டைரக்ட் செய்தது சமுத்திரக்கனி சார். சீரியல்ல பார்த்துட்டுதான் சசி சார் ‘டிஷ்யூம் டிஷ்யூம்’ படத்துல சின்ன ரோல் தந்தார். அதுதான் என் முதல் படம். சீரியலா சினிமாவாங்கிற குழப்பம் இல்ல. ஆனா ஹீரோவா நான் நடித்த முதல் ரெண்டு படங்கள் சரியா போகலை.
’தீ குளிக்கும் பச்சை மரம்’ நல்ல விமர்சனத்தைப் பெற்றது. ஆனா வணிக ரீதியா போகலை. ரெண்டாவது படமான ‘பழைய வண்ணாரப்பேட்டை’ வெளியான அன்னைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்துட்டாங்க.
அந்தச் சூழல் படத்தைக் கவனிக்கச் செய்யல. அடுத்தடுத்த என் படங்களுமே விளம்பரம் இல்லாமதான் கவனிக்கப்படலை. விளம்பரப்படுத்துவது தயாரிப்பாளரின் வேலைங்கிறதால் என்னால என்ன செய்ய முடியும்? இப்படியேதான் இப்ப வரை போயிட்டிருக்கு.

இடையில திரும்பவும் டிவிக்கு வந்தீங்க. அதனால்தான் குழப்பமாங்கிற கேள்வி வருது..
டிவி சினிமா ரெண்டும் வேற வேற இல்ல. அதனால குழம்ப வேண்டியதில்ல. சினிமாவுல தீவிர முயற்சியில இருப்பேன். அந்தச் சமயத்துல திடீர்னு சர்வைவலுக்குப் பிரச்னை அதாவது பணத்துக்குச் சிக்கல் வந்தா சீரியலுக்கு வர்றது அவசியமாகிடும்.
திரும்ப நிலைமை கொஞ்சம் சரியானதும் மீண்டும் சினிமா பக்கம் போவேன். எனக்கு வேற வழி தெரியலை. அதனால இப்படியே ட்ராவல் செய்துட்டிருக்கேன்.

உங்களுடைய இந்தப் பயணத்துல சாண்ட்ராவின் சப்போர்ட் எப்படி?
எங்களோடது லவ் கம் அரேஞ்ச்டு திருமணம். வெறும் அரேஞ்ச்டு மேரேஜா வேற யாரையாச்சும் கல்யாணம் செய்திருந்தா நிச்சயமா சொல்வேன் அது டைவர்ஸ்லதான் முடிஞ்சிருக்கும். ஆனா சாண்ட்ரா எனக்கு முழு சப்போர்ட். நான் சினிமா முயற்சியில இருந்தப்ப அவங்க நடிச்சு ஃபேமிலியை பார்த்துகிட்டாங்க. கல்யாணமாகி 19 வருசம் ஆச்சு.
இன்னைக்கும் அதே சப்போர்ட்டை தர்றாங்க. இந்த இடத்துல கடவுளுக்கு நான் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கேன்.
பிக்பாஸ் உங்களுக்கு நல்ல அனுபவம் தந்ததா?
பிக்பாஸ்க்குப் பிறகு எங்க வாழ்க்கை பாசிடிவாதான் போயிட்டிருக்கு. அதனால அந்த ஷோவைப் பத்தி நான் தவறா எதுவும் சொல்ல மாட்டேன்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்றோம். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கலை. ஷூட் போயிட்டிருக்கு. அந்தப் படம் சாண்ட்ராவுக்கு நல்ல பேர் வாங்கித் தரும்.




















