குவைத், பஹ்ரைனைத் தாக்கிய ஈரான்; தடுத்து நிறுத்திய ஈரானின் தீவு மீது அமெரிக்கா த...
சாலையோரம் நிறுத்தியிருந்த காரை இரும்பு வியாபாரிக்கு விற்ற இளைஞர்; அதிர்ச்சியடைந்த உரிமையாளர்!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வட்டம்குளம் பகுதியைச் சேர்ந்த சித்திக் என்பவருக்குச் சொந்தமான கார் பழுதடைந்த காரணத்தால், பல ஆண்டுகளாக அவரது வீட்டின் முன்புறம் சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தார்.
ஆண்டுகணக்கில் நின்றதால் கார்மீது தூசி படிந்து, துருபிடித்த நிலையில் மிகவும் மோசமாக காட்சி அளித்தது. அந்தக் காரை பாலக்காடு மாவட்டம் படிஞ்ஞாறங்ஙாடி பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் (21) என்ற இளைஞர் நீண்ட நாள்களாகத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.
பின்னர், அது தனது கார் என்று பொய் கூறி, பட்டாம்பியில் உள்ள பழைய இரும்புக்கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவரிடம் விலைக்குப் பேசி முன்பணத்தையும் வாங்கியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை சுமார் 6:30 மணியளவில் பழைய இரும்பு வியாபாரி லாரி மற்றும் ஜே.சி.பி இயந்திரத்துடன் காரை ஏற்றிச் செல்ல அங்கு சென்றார். சாலையோரம் நின்ற காரை லாரியில் ஏற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது சித்திக் வீட்டில் இல்லை.
காரை சிலர் ஜே.சி.பி மூலம் லாரியில் ஏற்ற முயன்றதைக் கண்ட சித்திக்கின் மனைவி, அவர்களிடம், "காரை எதற்காக லாரியில் ஏற்றுகிறீர்கள்" என விசாரித்தார். அதற்கு இரும்பு வியாபாரி, இந்தக் காரை அதன் உரிமையாளரிடம் பேசி முடித்து, அதற்குரிய தொகையைக் கொடுத்துவிட்டதாகக் கூறினார்.

சித்திக்குக்கு போன் செய்த அவரது மனைவி, 'காரை ஏன் பழைய இரும்புக் கடையில் விற்பனை செய்தீர்கள்' எனக் கேட்டுள்ளார். 'நான் காரை யாருக்கும் விற்கவில்லை' எனக்கூறியபடி விரைந்து அங்கு சென்றார் காரின் உண்மையான உரிமையாளர் சித்திக்.
"இது எங்களது கார், நாங்கள் இதை யாருக்கும் விற்கவில்லை" என்று கூறி சத்தம் போட்டார். இதையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டனர். நிலைமை விபரீதமானதை அடுத்து, உடனடியாக சங்ஙரங்குளம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், காரை ஏற்றிச் செல்ல வந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில் இளைஞர் ரிஸ்வான் செய்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து, இரும்பு வியாபாரியையும் அழைத்துக்கொண்டு படிஞ்ஞாறங்ஙாடிக்குச் சென்ற போலீஸார் ரிஸ்வானை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், கார் நீண்ட நாள்களாக சாலை ஓரத்தில் சும்மா கிடந்ததால் யாரும் கேட்கமாட்டார்கள் என நினைத்து, பணத்துக்கு ஆசைப்பட்டு தவறு செய்துவிட்டதாக ரிஸ்வான் கூறியுள்ளார்.
மேலும், பழைய இரும்பு வியாபாரியிடம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும், காரை லாரியில் ஏற்ற முயன்றபோது ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்து தருவதாகவும் வாலிபர் ரிஸ்வான் தெரிவித்துள்ளார். அதற்கு உரிமையாளர் ஒத்துக்கொள்ளவில்லை.
அதைத்தொடர்ந்து சங்ஙரங்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரிஸ்வானைக் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பொன்னாணி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் மீது இதற்கு முன்பு வேறு எந்தக் குற்ற வழக்குகளும் பதிவாகவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.














