கார்த்திகையில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்; ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒலித்த சரண...
"`சாவா' பிரசார படம்னு தெரியும்; அதான் நடிக்கல" - 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை விமர்சித்த கிஷோர்
ஹீரோ, வில்லன், நேர்மறையான விஷயங்களை நிகழ்த்தக்கூடிய குணச்சித்திர கதாபாத்திரங்கள் என அனைத்திற்கும் சரியாகப் பொருந்திப்போகக்கூடியவர் நடிகர் கிஷோர்.
தனக்குக் கொடுக்கப்படும் அத்தனை கதாபாத்திரங்களையும் பக்குவமாய் கையாண்டு தொடர்ந்து பல்வேறு மொழி சினிமாக்களுக்கு சுற்றி வருகிறார்.
நடிப்பில் மட்டுமல்ல பேச்சிலும் நிதானமாகவும் தெளிவாகவும் அனைத்தையும் எடுத்துரைக்கிறார்.
கதையின் நாயகனாக அவர் நடித்திருக்கும் 'ஐ.பி.எல்' திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரைக்கு வருகிறது. அப்படத்திற்காக அவரைச் சந்தித்துப் பேட்டிக் கண்டோம்.
நம்மிடையே கிஷோர் பேசுகையில், " 'ஐ.பி.எல்' படத்துல இப்போ நடிச்சிருக்கேன். நான் இன்னும் இந்தப் படத்தைப் பார்க்கல. படம் பார்த்தால்தான் எப்படி வந்திருக்குனு சொல்ல முடியும்.
ஆனா, டிரெய்லர் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எதிர்பார்ப்பையும் இந்த டிரெய்லர் உருவாக்குதுனு சொல்லலாம். நான் ஒவ்வொரு முறையும் எனக்கு கொடுக்கப்படுகிற கேரக்டர் மற்றும் அந்தப் படத்தின் கதையை வெச்சுதான் நடிக்கிறதுக்கு முடிவு பண்ணுவேன்.

அப்படி நாம் நம்புற விஷயங்களைதான் இந்த 'ஐ.பி.எல்' படமும் பேசுது. பணபலமும், அதிகார பலமும் இருப்பவர்கள் எப்படி அதனை தவறான வழியில் பயன்படுத்துறாங்கங்கிற முக்கியமான விஷயத்தையும் இந்தப் படம் பேசுது. இந்த உரையாடல் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வையும் தரும். கேள்விகளை தொடர்ந்து கேட்கணும்னு நினைவூட்டலாகவும் இருக்கும்." என்றார்.
சினிமாவில் அவருடைய முதல் ஷாட், முதல் சீன் நினைவிருக்கிறதா? அது குறித்து பகிர்ந்துகொள்ள முடியுமா எனக் கேட்டோம். அதற்கு பதில் தந்த அவர், " தமிழில், 'பொல்லாதவன்' திரைப்படத்திற்காக நான் இங்க ரெடி ஆகிட்டு இருந்தேன். சென்னை ஸ்லாங் தொடங்கி பல விஷயங்களுக்கேற்ப நான் மாறணும்னு என்னை அங்க ஒருத்தர் கூட அனுப்பிடுவாங்க. பிறகு என்னுடைய முதல் சீனுக்காக நான் ரெடி ஆகிட்டு இருந்தேன்.
திடீர்னு, வெற்றி என்கிட்ட 'கிஷோர், பேக்கப்! அடுத்த ஷெட்யூல்ல படம் பிடிச்சுக்கலாம்'னு சொல்லிட்டாரு. ஏன்னா, எங்களுடைய தயாரிப்பாளர்கிட்ட அவருடைய நண்பரொருவர், 'வில்லன் இப்படி இருக்கக்கூடாது. பெரிய வீடு, நாய், நீச்சல் குளம்னு நிறைய விஷயங்கள் இருக்கணும். இது படமே கிடையாது. இது ஓடாது'னு சொல்லிட்டாரு. அதனாலதான் அப்படி ஒரு விஷயம் அப்போ நடந்தது." என்றார்.
தொடர்ந்து பேசியவர், " 'பொல்லாதவன்' படத்துல எனக்கு வெற்றிமாறன்தான் டப் பண்ண வேண்டியது. எனக்கு அந்த சமயத்துல தமிழும் சரியாக தெரியாது. கிட்டத்தட்ட 11 நாட்கள் நான் 'பொல்லாதவன்' படத்திற்காக டப் பண்ணினேன்.
டீம் ஷூட் முடிச்சிட்டு நைட் டப்பிங்கிற்கு வருவாங்க. விடியும் வரை நான் டப்பிங் செய்வேன். பிறகு மறுபடியும் அவங்க ஷூட்டிங் கிளம்பிடுவாங்க. அப்படிதான் நான் செல்வம் கேரக்டருக்கு டப் பண்ணினேன்.

சிலர்கூட வெற்றிகிட்ட, 'செல்வத்துக்குதான் உண்மையான சென்னை தமிழ் வருது'னு சொல்லியிருக்காங்க. பிறகு, 'ஆடுகளம்' படத்திற்கு எனக்கு கனி டப்பிங் பண்ணினாரு. சொல்லப்போனால், நான் 'ஆடுகளம்' படத்தினுடைய டப்பிங்கிற்கு முயற்சிகூட பண்ணிப் பார்க்கல.
நேரம் காரணமாக கனி பேசியிருப்பார்னு நினைக்கிறேன்." என்றவரிடம் "பாலிவுட்டில் குறைவாகவே கதைகள் தேர்வு செய்து நடிப்பதற்கான காரணம் என்ன?" எனக் கேட்டேன்.
" பாலிவுட்ல நான் ரெண்டு சீரிஸ்கள்ல நடிச்சிருந்தேன். பிறகு, முருகதாஸ் சாரோட 'சிகந்தர்' படத்துல நடிச்சிருந்தேன். அதிலும் முழுமையாக தமிழ் டீம்தான் இருந்தாங்க.
இதைத் தாண்டி சுவாரஸ்யமான வாய்ப்புகள் எதுவும் வரல. சில வாய்ப்புகள் வந்துச்சு. அனா, அதெல்லாம் எனக்கு செட் ஆகல. 'சாவா' படத்திலும் என்னை நடிக்கக் கேட்டாங்க. அது பிரச்சார படம்னு தெரியும்.
அதனாலதான் நடிக்கல. சினிமாவை, மக்களைப் பிரிக்கிறதுக்காகவும் இப்போ பயன்படுத்திட்டு இருக்காங்க.

அரசியல் ஆதரவிற்காக 'காஷ்மீர் ஃபைல்ஸ்' மாதிரியான படங்களை எடுத்துட்டு இருக்காங்க. தவறான தாக்கம் தரக்கூடிய படங்களை நம்ம பண்ணனுமா?" என்றவர், " 'அரசன்' படத்தைப் பார்க்கிறதுக்கு நான் ஆவலோடு காத்திருக்கேன்.
நிச்சயமாக நல்ல படமாக இருக்கும். 'வடச்சென்னை' படத்துல ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவ்வளவு விஷயங்கள் அமைத்திருப்பாரு. அவர் எடுத்து படத்தில் சேர்க்காத காட்சிகளை வெச்சு தனியாக ஒரு சீரிஸே பண்ணலாம்.
வெற்றிமாறன் எப்போதும் எனக்கு கதை சொல்லிடுவாரு. அவர் சொல்லலைனாலும் நான் நடிப்பேன். அவருடைய ஐடியாஸ் சுவாரஸ்யமாக இருக்கும். நிச்சயமாக நான் அதுல நடிப்பேன்!" என்றபடி முடித்துக்கொண்டார்.













