Women's Blind T20 World Cup: உலகக்கோப்பை வென்ற பார்வைசவால் கொண்ட இந்தியப் பெண்கள...
சிதம்பரம்: தரிசனம் செய்தாலே முக்தி அருளும் திருத்தலம்; சிதம்பர ரகசியம் என்ன தெரியுமா?
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம். முற்காலத்தில் தில்லை மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்ததால் இத்தலத்துக்குத் தில்லை என்றே பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஈசன் நடராஜராகக் கோயில்கொண்டு அருள்கிறார்.
சைவர்களின் தலைமைப்பீடமாகத் திகழும் இத்தலத்தின் மகிமைகள் அநேகம். வாருங்கள் சிதம்பரம் தலம் குறித்துத் தெரிந்துகொள்வோம்.
இத்தலத்தின் மூத்த சுவாமி திருமூலநாதர். இவர் தனிக்கோயிலில் அருள்பாலிக்கிறார். இத்தலத்திலேயே ஈசன் ஆடல்வல்லானாகவும் கோயில்கொண்டார். இத்தல இறைவனுக்கு சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிண மேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன் போன்ற பெயர்களில் போற்றுகின்றனர் பக்தர்கள்.
அம்பிகையின் திருநாமம் உமையாம்பிகை எனப்படும் சிவகாமசுந்தரி. இத்தலத்தின் சிறப்புகளைப் பற்றிச் சொல்லும் புராணங்கள், பூவுலகில் உள்ள எல்லா சிவமூர்த்தங்களின் சாந்நித்தியமும் நள்ளிரவில் ஒடுங்கும் திருத்தலம் தில்லைச் சிதம்பரம்.

ஒருமுறை மகாவிஷ்ணு சயனக் கோலத்தில் இருக்கும்போது அவர் உடல் எடை கூடுவதைப் போன்று உணர்ந்தாராம் ஆதிசேஷன். அதன் காரணம் என்ன என்று பெருமாளிடம் அவர் கேட்க, ஈசன் ஆடும் ஆனந்த நடனம் கண்டதாகவும் அந்த மகிழ்ச்சியில் தன் உடல் எடை கூடியதாகவும் தெரிவித்தார்.
அப்படிப்பட்ட ஆனந்த நடனத்தைத் தானும் காணவேண்டும் என்று ஆவல் கொண்டார் ஆதிசேஷன். அதற்கு வரமளித்த விஷ்ணு, சிதம்பரம் தலம் சென்று தவம் செய்யப் பணித்தார். ஆதிசேஷனின் தவத்துக்கு மகிழ்ந்த ஈசன், திருமால், நந்தி, பிரம்மன் ஆகியோர் இசைக்க, ஈசன் ஆதிசேஷனுக்காகத் திருநடனம் புரிந்த க்ஷேத்திரம் இது.
ஈசன் நடம் புரிந்த தலங்கள் ஐந்து. அவற்றில் இது இரண்டாவது சபை. இதை பொற்சபை என்று போற்றுகிறார்கள். சுமார் 43 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான சிதம்பரம் ஆலயத்தில், `நால்வர் கோயில்’ ஒன்று உள்ளது.
இதுவே தேவார மூவர்களின் ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்த இடம். இங்கிருந்தே திருமுறைகள் உருவாயின என்பது வரலாறு.
இங்கே ஒரு மகிமை வாய்ந்த ஸ்படிகலிங்கம் உள்ளது. அதற்கு தினமும் ஆறு காலம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
சிதம்பரம் கோயிலுக்குச் செல்பவர்கள் சிதம்பர ரகசியம் தரிசனம் செய்ய வேண்டும் என்பார்கள். அது என்ன சிதம்பர ரகசியம்? நடராஜரின் கருவறைக்கு வலது பக்கத்தில் திரை ஒன்று உள்ளது. அந்தத் திரைக்குப் பின்னே உள்ள சுவரில், தங்கத்தாலான வில்வ மாலைகள் காணப்படும்.
அவை, சிவா என்கிற சம்மேளனச் சக்கரங்கள் ஆகும்; இந்தத் தரிசனம் மோட்சம் தரும் ஒன்று என்கிறார்கள். ஞானம் எனும் சக்கரத்தை மாயை மூடியிருக்கிறது. இறைவன் அருளால் மனம் ஒருமுகப்பட்டு, மாயை விலகினால், ஞானமாகிய சக்கரத்தை உணரலாம் என்பதே சிதம்பர ரகசியம்.

தில்லையில் ஈசனின் நடனக் கோலத்தைத் தரிசனம் செய்வதே முக்தியைக் கொடுக்கும் சாதனம். அதைவிட உயர்வானது எதுவும் இல்லை என்பார்கள். ஒருமுறை, பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, சிதம்பரம் தீக்ஷிதர்களை சத்தியலோகத்துக்கு அழைத்தார்.
தில்லையில் ஈசனின் திருநடனத்தைக் காண்பதை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது எனக் கூறி இந்திரனின் அழைப்பை மறுத்தனர். அப்போது, அசரீரியாக நடராஜர் யாகத்திற்குச் செல்லும்படியும், யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுவதாகவும் வாக்களித்தார்.
அவ்வாறு தோன்றிய அந்தத் திருக்கோலத்தை ரத்னசபாபதி என்று போற்றினர். நடராஜர் திருமேனியின் கீழே அமைந்திருக்கும் ரத்னசபாபதி மூர்த்திக்கு தினமும் காலையில் பூஜை நடக்கும். சிலையின் முன்புறமும், பின்புறமுமாக தீபாராதனை செய்வது கண்கொளாக் காட்சியாக விளங்கும்.
ராஜேந்திர சோழனின் ஆட்சியில், சிதம்பரம் கோயிலின் பெருமைகளைக் கேட்ட கம்போடிய அரசன் ஒருவன் நடராஜப்பெருமானுக்கு தங்கம் மற்றும் கம்போடிய மாணிக்கக்கற்களைக் கொண்ட நகைகளை தூதுவர்கள் மூலம் கொடுத்து அனுப்பியதாகவும் வரலாறு கூறுகிறது!
1962-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப்போரின் போது, இந்திய ராணுவத்துக்கு பெருமளவில் நிதி தேவைப்பட்டது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து பெருமளவு தங்கமும் தொகையும் கொடுக்கப்பட்டன.
போர் முடிந்ததும், நமது அரசு இந்தக் கோயிலில் இருந்து அனுப்பப்பட்ட தங்கம் - பணத்தை, வட்டியும் முதலுமாகத் திருப்பிக்கொடுத்தது. அந்தத் தங்கம் ஆதிமூலநாத சுவாமிக்குத் தங்கக் கவசம் செய்ய சமர்ப்பிக்கப்பட்டது.

திருவாதிரை உற்சவம் இத்தலத்தில் மிக விசேசமாக நடக்கும். திருவிழாவின் பத்து நாள்களிலும் சாயங்கால தீபாராதனையின் போது மாணிக்கவாசகரை சுவாமியின் சந்நிதிக்கு எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாட்டுகள் பாடிச் சுவாமிக்குத் தீபாராதனை நடைபெறும்.
நாள்தோறும் காலை விழாவில் மாணிக்கவாசகரையும் எழுந்தருளச் செய்வதுடன் 10 ஆம் நாள் தரிசனம் முடிந்தவுடன் மாணிக்கவாசகருக்கும் தீபாரதனை நடைபெறும். சுவாமிக்கு விடையாத்தித் திருவிழா முடிந்த மறுநாள் மாணிக்கவாசகருக்கும் விடையாத்தித் திருவிழா நடைபெறும் தலம் இது.
சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் வந்து வழிபட்ட தலம் இது. இவர்கள் நால்வரும் நால் திசைகளில் உள்ள கோபுரத்தின் வழியாக ஆலயத்துக்குள்ளே வந்து வழிபட்டனர் என்கிறது ஆலயவரலாறு.
இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட சிதம்பரம் திருத்தலத்தில் ஈசனை தரிசனம் செய்து புண்ணிய பலன்களை அடையலாம்.



















