"அடுத்த 6 மாதம் பிரதமருக்கு தமிழ்நாடு சாப்பாடும், கலாசாரமும்தான் பிடிக்கும்" - க...
Gout: மூட்டு வாதம் வரக் காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் & தீர்வுகள்
“சிலர் ‘காலில் வீக்கம், எரிச்சல்... நடக்க முடியவில்லை’ என்று வருகின்றனர். இந்த கால் வீக்கத்தை உற்றுப் பார்த்தால், ஏதோ நீர் கோத்துக் கொண்டது போல இருக்கும். சப்பாத்திக் கள்ளியை காலில் கட்டி வைத்தால் எப்படி குத்துமோ, வலிக்குமோ அதே வலியை உணர்வார்கள்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு கவுட் பிரச்னை இருக்க வாய்ப்பு அதிகம்” என்கிற ஹோமியோபதி மருத்துவர் ராமகிருஷ்ணன், ‘கவுட்’ பற்றிய டவுட்களைக் களைகிறார்.

கவுட்(Gout) என்பது ஒரு வகை மூட்டுவாதம். ரத்தத்தில் யூரிக் அமிலம் (Uric acid) அளவு அதிகரிக்கும்போது கவுட் ஏற்படும். சராசரியாக ஒரு மனிதனுக்கு 6-7 மி.லி கிராம் அளவுக்கு யூரிக் அமிலம் உடலில் இருப்பது இயல்புநிலை. இதற்கு மேல் சென்றால் கவுட் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பெருவிரலில் வீக்கம், நீர் கோத்து வலியுடன் கூடிய எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். பெரும்பாலும் கால் பெருவிரலில் கவுட் வரும். சிலருக்கு கைவிரல், முழங்கால் முட்டி, முழுங்கை முட்டி போன்ற எந்த மூட்டுகளில் வேண்டுமானாலும் வலியும், வீக்கமும் வரலாம். இந்த வீக்கத்தில் நீர் கோத்துக் கொண்டு தாளாத வலி ஏற்படும். முள் குத்துவது போன்ற எரிச்சலையும், நெருப்பின் மேல் நடப்பது போன்ற எரிச்சலையும் சிலர் உணர்வதாகச் சொல்கின்றனர்.

பெரும்பாலும் ஆண்களுக்கு கவுட் அதிகமாக வரும். ஆனால், இப்போது பெண்களுக்கும் கூட வருகிறது. 35 வயதுக்கு மேற்பட்ட நபருக்கு கவுட் பிரச்னை வரலாம். குறிப்பாக ஒயின், பீர் அருந்து பவர்களுக்கு கவுட் வர வாய்ப்புகள் அதிகம். மற்றபடி மரபியல், உணவுப் பழக்கங்கள் போன்ற காரணங்களால் கவுட் வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது.
கவுட் பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் விட்டால் அது சிறுநீரகத்தையும் பாதிக்கலாம். ஆறு மாதங்களாக கவுட் பிரச்னை இருக்கிறது என்றால், நோய் குணமாக 3-4 மாதங்களாவது தேவைப்படும்.
ஐந்து ஆண்டுகளாக கவுட் பிரச்னை பாதித்திருந்தால், குணமாக குறைந்தது ஒர் ஆண்டு பிடிக்கும். இது அவரவர் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பொறுத்தது. ரத்தத்தில் யூரிக் அமிலம் கலந்திருந்தால், இதற்கு மட்டும் மருந்து கொடுத்து சரி செய்ய முடியாது. இப்படி செய்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியாது.
உடல் முழுவதற்கும் தேவைப்படுகிற ஆற்றலை தந்து, நோய் எதிர்ப்பு திறனை கூட்டி யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தி சிகிச்சை செய்வதே சரியான முறை.
இந்த பிரச்னைக்கு ஹோமியோபதி சிகிச்சை முறையில் தீர்வு இருக்கிறது. தகுதியான மருத்துவரைச் சந்திந்து, சிகிச்சை பெறுவதன் மூலம் நிரந்தரத் தீர்வை காணலாம்.
* குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட திரவ உணவுகளைத் தவிர்த்து இயற்கையாகக் கிடைக்கக் கூடிய திரவ உணவுகளை உண்பதால் கவுட் பிரச்னையின் தாக்கம் குறையும்.
* பீர், ஒயின் மட்டுமல்ல, மதுவை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.
* கொழுப்பு குறைந்த பால் பொருட்களைச் சாப்பிடலாம். காலை உணவில் அவசியம் புரதச் சத்துக்கள் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளவும்.
* அசைவ உணவுகளால் கவுட் பிரச்னை வருகிறது என்று உறுதியாக சொல்ல முடியாது. எனினும் அசைவ உணவுகளை அளவாக உண்ணலாம். குறிப்பாக ஈரல், மண்ணீரல், குடல் போன்ற உறுப்புகள் சார்ந்த அசைவ உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.
* உடல் எடை கூடாமல் பார்த்துக் கொண்டால் யூரிக் அமிலங்களின் அளவு உடலில் அதிகரிக்காமல் இருக்கும். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
* இயற்கை முறையில் விளையும் ஆர்கானிக் உணவுகளையே பிரதான உணவாக மாற்றிக் கொள்வதன் மூலம் யூரிக் அமிலங்களின் அளவு உடலில் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.


















