செய்திகள் :

`சின்ன பாப்பா எங்கள் செல்ல பாப்பா!’ - 100வது அகவையில் 'வண்ணக்கிளி' பி.எஸ்.சரோஜா

post image

பழம்பெரும் நடிகை பி.எஸ். சரோஜா, தன்னுடைய நூறாவது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளார்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி கணேசன் என்னும் இருபெரும் ஆளுமைகள் இணைந்து நடித்த ஒரே படமான 'கூண்டுக் கிளி' படத்தில் எம்.ஜி.ஆருக்கு மனைவியாகவும் சிவாஜிக்கு காதலியாகவும் நடித்தவர்.

இவரைக் குறிப்பிட இந்த ஒரு அறிமுகமே போதுமென்றாலும், எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்துக்கு முன்பே தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் உச்ச நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்தவர், கருப்பு வெள்ளை காலத்தில் பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்தவர். நடிப்புக்காக விருதுகளை வாங்கிக் குவித்தவர் என மேலும் பல ஹைலைட்டுகள் அணி வகுக்கின்றன.

நூறாண்டு காணும் நாயகி குறித்துப் பார்க்கலாமா?

கூண்டுக்கிளி

சரோஜாவின் பூர்வீகம் சேலம். ஆனால் இவர் பிறக்கும் போது இவரின் பெற்றோர் வசித்தது திருவனந்தபுரம். பதினைந்து வயதில் குரூப் டான்சராக சினிமாவுக்குள் பிரவேசித்துவிட்டார். ஜெமினி, ஜூபிடர் உள்ளிட்ட பல பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் பணிபுரிந்தவர், அடுத்த சில வருடங்களிலேயே இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் பார்வையில் பட்டார். அவர் 'விகட யோகி' படத்தின் கதாநாயகி ஆக்கினார் இவரை.

அப்போது முதல் சரோஜாவின் திரைப் பயணத்தில் ஏறுமுகம்தான்.

தொடர்ந்து கே.சுப்ரமணியம் இயக்கிய 'விசித்திர வனிதா', 'கீத காந்தி' ஆகிய படங்களிலும் நடிக்க ஒருகட்டத்தில் அவரது ஆஸ்தான கதாநாயகி என்றே அப்போது அழைக்கத் தொடங்கினர்

'கீத காந்தி'யில் நடித்த போது அதே படத்தில் பணிபுரிந்த நடனக் கலைஞர் போலோநாத் ஷர்மாவுடன் காதல் மலர இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே விதி விளையாட, விபத்து ஒன்றில் சிக்கினர் இருவரும். காயங்களுடன் சரோஜா உயிர் பிழைக்க போலோநாத் மரணமடைந்தார்.

அன்புக் கணவரின் மறைவால் மனமுடைந்து போன சரோஜா சில காலம் நடிப்பிலும் ஆர்வம் காட்டாதவரகவே இருந்தார்.

b s saroja

இந்தச் சமயத்தில் இவருக்கு ஆறுதல் வார்த்தைகள் தந்து மீண்டும் சினிமாவுக்குத் திரும்பும்படி வலியுறுத்தினார், கே.சுப்ரமணியத்தின் படங்களில் ஒலிப்பதிவாளராகப் பணியாற்றியவரும் நடிகை டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரருமான டி.ஆர். ராமண்ணா.

ராமண்ணாவின் தொடர் வலியுறுத்தல் காரணமாக விரைவில் துயரத்திலிருந்து மீண்ட சரோஜா அதன்பிறகு மலையாளத் திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கினார்

மலையாள சினிமாவின் அன்றைய சூப்பர் ஸ்டார் திக்குறிச்சி சுகுமாரன் நாயருடன் இவர் நடித்த 'ஜீவித நவுகா பெரும் வெற்றி பெற்றுப் பின் 'பிச்சைக்காரி' என்ற பெயரில் தமிழிலும் வெளியானது.

பின்னர் தான் மீண்டும் சினிமாப் பக்கம் திரும்பக் காரணமாக இருந்த ராமண்ணாவையே மறுமணமும் செய்து கொண்டார்.

பிறகு அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் 'ஓர் இரவு', , எம்.கே.டி தியாகராஜ பாகவதருடன் 'அமரகவி' என மீண்டும் ஒரு ரவுண்ட் வந்தார்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். கொலை வழக்கு ஒன்றில் சிக்கிய பின் தியாகராஜ பாகவதருடன் நடிக்க அப்போதைய கதாநாயகிகள் பலரும் தயங்க துணிந்து நடிக்க முன் வந்தார் சரோஜா.

சரோஜாவின் கரியரில் ஹைலைட் என்றால் 'கூண்டுக் கிளி'தான். ராமண்ணாவே இயக்க எம்.ஜி.ஆர் சிவாஜி என்னும் இரு பெரும் ஆளுமைகளுடன் ஜோடி சேர்ந்தார் சரோஜா.

தொடர்ந்து கணவர் இயக்கத்தில் கலைஞரின் வசனத்தில் 'புதுமைப்பித்த'னிலும் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்தார்.

இன்னொருபுறம் கணவருடன் தயாரித்த படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்தார். 'பெரிய இடத்துப் பெண்’, பாசம், புதுமைப்பெண், அருணகிரிநாதன் உள்ளிட்ட சில படங்கள் கணவனும் மனைவியுமாக இவர்கள் தயாரித்த படங்களே.

தியாகராஜ பாகவதர்

பி.எஸ்.வீரப்பா, நம்பியார், டி.எஸ்.பாலையா, எம்.ரா. ராதா,, ஆர்.எஸ். மனோகர் என அந்தக் கால முக்கிய நடிகர்கள் அத்தனை பேருடனும் நடித்து விட்டடார். மனோகருடன் இவர் நடித்த வண்ணக்கிளி பெரிய ஹிட்.. 'அடிக்கிற கைதான் அணைக்கும்', `சின்னப் பாப்பா எங்கள் செல்ல பாப்பா’ பாடல்கள் இந்தப் படத்தில் இடம் பிடித்தவையே.

நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்துப் புகழ் பெற்ற சரோஜா தற்போது சென்னையில் மகன் கணேஷ் ராமண்ணாவுடன் வசித்து வருகிறார்.

வண்ணக்கிளி

கடந்த வாரம் 100 வது வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் சரோஜாவின் மகன் கணேஷிடம் பேசினோம்.

''அம்மா ஆரம்பத்துல இருந்தே தீவிரமான சாய் பாபா பக்தை. பாபா ஆசிர்வாதத்துடன் நூறாவது வயது தொடங்குது. அங்களுடைய இப்போதை பொழுது முக்கால்வாசி நேரம் சாய் பாபா கீர்த்தனைகளைக் கேட்கறதுலதான் கழியுது. மத்தபடி நல்ல ஆரோக்கியத்துடனேயே இருக்காங்க. நடிப்பை நிறுத்தின பிறகு சில ஆண்டுகள் சினிமா பத்தி விசாரிச்சாங்க. இப்பெல்லாம் எதுவும் கேக்கறதில்ல. நாங்களுமே அவங்களை அவங்க இஷ்டப்படியே இருக்க விட்டுட்டோம்' என்கிறார் இவர்.

Mask: 'இளையராஜாவின் ஆசி; பாட்டுக்கு NOC; அடமானத்தில் ஆண்ட்ரியா வீடு' - நடிகர் கவின் ஷேரிங்ஸ்

இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில், அறிமுக இயக்குநர் விகர்ணன் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்க். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படத்தில், நடிகர்கள் கவின், ருஹானி சர்மா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடி... மேலும் பார்க்க

தீயவர் குலை நடுங்க விமர்சனம்: துப்பறியும் டெம்ப்ளேட் ஓகே; ஆனால் இத்தகைய காட்சிகளில் கவனம் வேண்டாமா?

ஜெபநேசன் என்ற எழுத்தாளரின் கொலை வழக்கை விசாரிக்கக் களமிறங்குகிறார் இன்ஸ்பெக்டர் மகுடபதி (அர்ஜுன்). அவர் ஏற்கெனவே ஒரு புத்தகத்தை எழுதி வைத்திருப்பதும், அதன் பெயர் ‘காவேரி கரை’ என்றும் தெரிகிறது. தீயவர்... மேலும் பார்க்க