What To Watch: 'TTT' முதல் 'மை லார்ட் வரை' - இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ்...
`சொன்ன சொல்லை மீறிவிட்டீர்கள்'- ரன்வீர்சிங், ரோஹித் ஷெட்டிக்கு மீண்டும் பிஷ்னோய் கேங்க் மிரட்டல்!
மும்பையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்த நபர் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தி இருந்தார். ரன்வீர் சிங் செயலாளரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் இந்த மிரட்டல் வந்திருந்தது. அதற்கு முன்பு இதே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இயக்குநர் ரோஹித் ஷெட்டி வீட்டின்மீது அதிகாலை நேரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இது தொடர்பாக 5 பேரை மும்பை போலீஸார் கைதுசெய்துள்ளனர். இரண்டு மிரட்டல் சம்பவங்கள் குறித்தும் தொடர்ந்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், திடீரென அதேகும்பல் இரண்டு பேருக்கும் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.
லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்த ஹர்ரி பாக்ஸர் என்பவர் இரண்டு பேருக்கும் வாய்ஸ் மெசேஜ் மூலம் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். இதில் ரன்வீர் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

சொன்ன சொல்லை மீறிவிட்டதாக ரன்வீர் சிங்கை பாக்ஸர் எச்சரித்துள்ளார். இதே போன்று இயக்குநர் ரோஹித் ஷெட்டிக்கு அனுப்பியுள்ள வாய்ஸ் மெசேஜில், `நீங்களும், பாலிவுட்டும் நாங்கள் சொல்கின்றபடி நடக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் காமெடி நடிகர் கபில் சர்மாவின் கஃபே மீது துப்பாக்கிச்சூடு நடந்தபோது, அதில் இதே பாக்ஸர் பெயர் அடிபட்டது. புதிதாக வந்துள்ள மிரட்டல் குறித்து விசாரித்து வரும் போலீஸார், வந்திருக்கும் வாய்ஸ் மெசேஜ் உண்மையிலேயே பாக்ஸருக்குறியதா அல்லது ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
அதேசமயம் பாக்ஸரின் வாய்ஸ் மும்பை போலீஸாரிடம் இல்லை. எனவே அண்டை நாடுகளில் பாக்ஸரின் வாய்ஸ் இருந்தால் அதனோடு தற்போது வந்திருக்கும் வாய்ஸ் மெசேஜை ஒத்துப்பார்க்கும் நடவடிக்கையில் மும்பை போலீஸார் ஈடுபட்டுள்ளனர். பாக்ஸர் கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவிலிருந்து கனடாவிற்கு தப்பிச்சென்றுவிட்டார். தற்போது புதிதாக கொலைமிரட்டல் வந்திருப்பதால் ரோஹித் ஷெட்டியும், ரன்வீர் சிங்கும் தங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி மும்பை போலீஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ரன்வீர் சிங் மற்றும் ரோஹித் ஷெட்டிக்கு பாக்ஸர் அனுப்பியுள்ள வாய்ஸ் மெசெஜில், ``ரன்வீர் சிங், நீங்கள் ஏதோ சொல்லிவிட்டு பின்வாங்கினீர்கள், இல்லையா? பரவாயில்லை - ஒன்று நீங்கள் சொன்னதை செய்யுங்கள், இல்லையெனில் பின்வாங்குவதற்கான தண்டனை என்ன என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம். அதனால்தான் உங்களுக்காக இந்த குரல் குறிப்பை விட்டுச் செல்கிறோம். ரோஹித் ஷெட்டி நீங்களும் எங்கள் சொல்படி கேட்க வேண்டும்.
மேலும் நாங்கள் முழு பாலிவுட்டிற்கும் சொல்வது என்னவென்றால் போர்ச்சுகலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு - மெரினா கிராண்ட் மற்றும் சுக்தேவின் கடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு நானும் என் சகோதரர்களும் பொறுப்பேற்கிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.




















