'கரூருக்கு செல்ல முடிவெடுத்த முதல்வர் விஜய்?' - முழு விவரம் என்ன?
ஜெர்மன் உளவுத்துறையில் இந்திய வம்சாவளி கவிஞர்! | உளவன் - 03
பிரிட்டிஷ் உளவுத்துறை ஏன் இவ்வளவு மந்தமாக இருக்கிறது? எப்படித்தான் அவர்களை வழிக்கு கொண்டு வருவது? எந்தத் தகவலை அனுப்பினால் நம்புவார்கள்? ஆனால், ஜெர்மன் உளவுத்துறை அப்வேர் அதிகாரிகள் எதை அனுப்பினாலும் நம்பி விடுகிறார்களே.
எட்டு மாதங்களாகி விட்டது. இன்னும் எத்தனை மாதத்துக்கு ஜெர்மன் உளவுத்துறை அப்வேரை (Abwehr) ஏமாற்றிக் கொண்டிருப்பது? அராபெல்லுக்கு (Arabel) வெறுப்பாக இருந்தது. பிரிட்டன் உளவுத்துறையிடம் தன்னை நிரூபிப்பது எப்படி? அங்கலாய்ப்போடு யோசித்தார்.
நாளிதழ்கள், வார-மாத இதழ்கள், புத்தகங்களை நூலகத்தில் எந்நேரமும் படித்துக் கொண்டிருக்க வேண்டும். பிரிட்டன் தொடர்பான தகவல்களை அதிலிருந்து திரட்ட வேண்டும். இடையிடையே உணவு இடைவேளை. மாலையில் நடைப்பயிற்சி. இரவில் நல்ல உறக்கம். சாப்பாடு, லைப்ரரி, வாக்கிங், தூக்கம். ரிப்பீட்டு. எட்டு மாதங்கள் இப்படியே ஓடிவிட்டது. அராபெல்லுக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல.

வெறுமனே பொய்யை மட்டும் அனுப்பவில்லை. கொஞ்சம் உண்மையும் இருக்கத்தானே செய்கிறது. அதனால் அப்வேர் அதிகாரிகள் நம்பிவிடுகின்றனர். பிரிட்டன் உளவுத்துறை அதிகாரிகளை இந்தத் தடவை வழிக்கு கொண்டு வந்துவிட வேண்டும். அதற்கேற்ற தகவல்களைக் ‘கண்டுபிடிக்க’ வேண்டும்.
கைச் செலவுக்கும் பணம் அதிகம் தேவைப்படுகிறது. மாட்ரிட்டில் இருக்கும் குடும்பத்துக்கும் பணம் அனுப்ப வேண்டும். இதுவரை நான்கு ஏஜெண்ட்டுகளுக்கான பணம் கூடுதலாக வருகிறது. இருந்தாலும் போதவில்லை. ஐந்தாவதாக புதிதாக ஒரு ஏஜெண்ட்டை அறிமுகப்படுத்திட வேண்டியதுதான். அராபெல் திட்டமிட்டார்.
நூலகத்தில், நாளிதழ்களை கவனமாகப் படித்தார். ஒரு செய்தி அராபெல்லின் கவனத்தை ஈர்த்தது. ஆரிய இனப் பெருமை பேசும் இந்திய இளைஞர்கள் சிலர் பிரிட்டனில் ரகசியமாக செயல்படுகிறார்கள். அவர்கள் போரில் ஜெர்மனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் - இதுதான் அந்தச் செய்தி. மேலும் சில செய்தித்தாள்களை ஆய்வு செய்தார். போரில் ஜெர்மனியை ஆதரிக்கும் குழுவினர் இந்தியாவிலும் இருப்பதை தெரிந்து கொண்டார்.
இந்திய செய்தித்தாள்கள் சிலவற்றை வாசித்தார். போரில் பிரிட்டன் தோற்க வெண்டுமென்று விரும்பும் ஒரு குழு இந்தியாவில் இருப்பதை அறிந்தார். பிரிட்டனுக்கு எதிராக, இந்தியாவில் சுதந்திரப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தது. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் தோற்க வேண்டுமென்று, சுதந்திரப் போரில் பங்கேற்றவர்களில் ஒரு பிரிவினர் விரும்பினர்; இன்னொரு பிரிவினர் ஜெர்மன் வெற்றி பெற வேண்டுமென விரும்பினர்.
பொறி தட்டியது. இந்திய இளைஞன் ஒருவனை புதிய ஏஜென்ட்டாக நியமித்தால் என்ன? ஜெர்மனியின் ஆரிய மேலாதிக்கத்துக்கு ஆதரவாக, பிரிட்டனில் உளவு பார்க்கும் ஓர் இந்தியர். இந்தக் கற்பனையே அட்டகாசமாக இருந்தது. இப்படிச் செய்தால், ஜெர்மன் அப்வேர் அதிகாரிகளே குதூகலத்தில் குதிப்பார்கள். நாட்டு நடப்போடு இயைந்த வகையில் உளவு தகவல் அனுப்புவதாக பிரிட்டன் உளவு அதிகாரிகள் கவனத்தையும் ஈர்த்துவிடலாம்.
அறைக்கு வந்த அராபெல், கவனமாக கதாபாத்திரத்தை வடிவமைத்தார். ஒரு நல்ல உளவாளிகளுக்கு கற்பனைத் திறன் கூர்மையாக இருக்க வேண்டும். அதே சமயம் உண்மையின் அடிப்படையில்தான் கட்டுக்கதையை கட்டியெழுப்ப வேண்டும். ஒரு நல்ல பொய், உண்மையைவிட நம்பத்தகுந்ததாக இருக்க வேண்டும்.

Agent 5: இந்திய கவிஞர் (எழுத்தாளர்)
தேசியம்: வெனிசுலா
தற்போது வசிப்பது: ஒட்டாவா, கனடா
வெனிசுலா கடவுச்சீட்டு வைத்திருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் Agent 5. அவருக்கு அராபெல் சூட்டிய குறியீட்டுப் பெயர் Moonbeam. உளவாளி தயார். அடுத்து தகவலை ‘உருவாக்க’ வேண்டும். அடுத்த நாள் நூலகத்துக்குச் சென்றார். நாளிதழ்களைப் புரட்டினார். ஒட்டாவா நகருக்கு அருகே ராணுவ முக்கியத்துவம் வாயந்த இடங்கள் ஏதும் இருக்கிறதா? சுற்றுலா வழிகாட்டி கையேடுகள், ரயில்வே அட்டவணைகளை ஆய்வு செய்தார்.
ஹாலுபாக்ஸ் (Halifax). கடற்கரை நகரம். முக்கியமான துறைமுகம் இருக்கிறது. இந்தக் கடற்கரையைப் பற்றி செய்தி எதுவும் வந்திருக்கிறதா? கனடா செய்தித் தாள்களை அலசினார். அமெரிக்க - பிரிட்டன் கப்பற்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட செய்தியொன்று இருந்தது. இது போதுமே. கதையை உருவாக்கினார்.
போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் நகரில் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார் அராபெல். உளவாளியாக தலைமறைவு வாழ்க்கை இல்லை. உளவாளி ஆக தலைமறைவு வாழ்க்கை.
இவருடைய உண்மையான பெயர் ஹுவான் புஜோல் கார்சியா (Juan Pujol García). ஸ்பெயினில் பார்சிலோனா நகரில் 1912-ம் ஆண்டு காதலர் தினத்தில் பிறந்தவர். கார்சியாவின் இளமைக் காலம் அவ்வளவு இனிமையாக இருக்கவில்லை. 1936-1939 காலக் கட்டங்களில் ஸ்பெயினில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர் மொத்த நாட்டையும் பாதித்தது. கார்சியாவின் குடும்பத்தையும்.
ஸ்பெயினின் வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்குமான போர், இரண்டாம் உலகப் போருக்கான முன்னோட்டம். வரலாறு அப்படித்தான் சொல்கிறது. மாற்றத்தை விரும்பிய சோசலிஸ்ட்டுகள் ஆட்சியில் இருந்தனர். வலதுசாரி ஜெனரல்களின் கீழ் இருந்த ராணுவம் இதனை விரும்பவில்லை.
ராணுவம் கிளர்ச்சியில் இறங்கியது. நாஜி ஜெர்மனி, ஃபாசிஸ இத்தாலி அரசுகள் ராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உதவின. போரில் இரத்த ஆறு ஓடியது. போரை வெறுத்த லட்சக் கணக்கான ஸ்பானிய இளைஞர்களில் கார்சியாவும் ஒருவர்.
இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் உலகம் இரண்டரை அணியாக பிரிந்து மோதிக் கொண்டது. ஜெர்மனியின் ஃபியூரர் ஹிட்லர் தலைமையில் ஒரு கூட்டணி. அதுக்கு பெயர் ‘அச்சு நாடுகள்’ (Axis) . இதில் இத்தாலி, ஜப்பான் முக்கிய கூட்டாளிகள். இந்த அணிக்கு எதிரானவர்கள் இன்னொரு கூட்டணி. அதுக்கு பெயர் ‘நேச நாடுகள்’ (Allied). அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் ஆகியோர் நேசமான கூட்டாளிகள். அரை அணி எது? நடுநிலை வகிப்பதாக காட்டிக் கொண்டு தங்களுக்கு வேண்டிய நாடுகளை மறைமுகமாக ஆதரித்த நாடுகள்.

இயல்பாகவே ஃபாசிஸ கூட்டாளிகளை வெறுத்த கார்சியா, ஸ்பெயின் உள்நாட்டு யுத்தத்துக்கு பழிதீர்க்க விரும்பினார். இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த காலக்கட்டம்.
1941 புத்தாண்டு. பிறந்த நாளுக்குள் பிரிட்டன் உளவுத்துறையில் இணைந்து விடவேண்டும். போரில் ஜெர்மனியை தோற்கடிப்பதற்காக உளவு வேலை பார்க்க வேண்டும். விருப்பத்தை நிறைவேற்ற தலைநகர் மாட்ரிட்டில் உள்ள பிரிட்டன் தூதரகத்தை அணுகினார். ஜெர்மனிக்கு எதிராக உளவு வேலை பார்க்க ஆர்வமாக இருப்பதாகக் கூறினார். இவர் ஜெர்மன் உளவாளியாக இருப்பாரோ என்ற சந்தேகம். உடனடியாக மறுத்துவிட்டனர்.
இரண்டாம் உலகப் போரில் ஸ்பெயின் நடுநிலை வகித்ததால் உள்ளூர்க்காரரை உளவாளியாக்க, பிரிட்டன் உளவுத்துறை MI5 தயங்கியது. ஜெர்மனிக்கு எதிராக உளவு வேலை பார்ப்பதில் விடாப்பிடியாக இருந்தார் கார்சியா. மனம் தளரவில்லை. மாட்ரிட்டில் உள்ள ஜெர்மன் தூதரகத்தை அணுகினார். ஜெர்மன் உளவுத்துறை அப்வேர் அதிகாரியைச் சந்தித்தார். தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
ஆம். எதிரியிடம் நல்ல பேரு வாங்கி, உன்னிடம் வருகிறேன். அப்போது என்னை நிராகரிக்க முடியாமல் ஏற்றுக் கொள்வாய். MI5-யில் சேருவதற்கு இந்த உத்தியைத்தான் கார்சியா தேர்ந்தெடுத்தார். அப்வேர் அதிகாரியும் உடனே அவரை பணியில் சேர்க்கவில்லை. ஃபாசிஸ ஆதரவாளர்தானா என சோதித்தார். தேர்ச்சி அடைந்தார். 1941 ஜனவரி இறுதிவாக்கில் அதிகாரப்பூர்வமாக அப்வேர் உளவாளியாக கார்சியா பணியமர்த்தப்பட்டார். அவருக்கு அப்வேர் இட்ட பெயர்தான் ‘அராபெல்’.
உடனடியாக பிரிட்டனுக்குச் செல்ல உத்தரவு. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த கார்சியா, இல்லை அராபெல் தனியாக போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனுக்கு புறப்பட்டார். 3000 அமெரிக்க டாலரும், பிரிட்டனில் இறங்கியவுடன் செலவுக்கு பயன்படுத்த கொஞ்சம் பவுண்டும் அப்வேர் கொடுத்தனுப்பியது. போர் காலம் என்பதால் நேரடியாக பிரிட்டன் செல்ல விசா கிடைப்பதில்லை. லிஸ்பன் சென்று அங்கிருந்துதான் பிரிட்டனுக்கு போக முடியும். லிஸ்பன் சென்று இறங்கிய அராபெல், அப்வேருக்கு உடனே தகவல் அனுப்பினார்.
“மனைவி குழந்தைகளுடன் பிரிட்டன் வந்து சேர்ந்துவிட்டேன். பணியைத் தொடங்குகிறேன்.”

ஆமாம். லிஸ்பனில் இருந்து கொண்டேதான், பிரிட்டனில் இருப்பதாக நடித்தார் அராபெல். அதற்கு மாட்டிரிட்டிலேயே இருந்திருக்கலாமே. கொஞ்சம் உண்மை, நிறைய பொய். இதுதான் கார்சியாவின் உளவு கொள்கை. நான் மட்டும் வந்துவிட்டேன் என்று சொன்னால்கூட சந்தேகம் வந்துவிடும். அதனால்தான் குடும்பத்துடன் பிரிட்டன் வந்துவிட்டதாக சொன்னார்.
நூலகங்களில் பிரிட்டன் தொடர்பான தகவல்களைத் திரட்டுவது. அதை உளவு தகவல்களாக மாற்றி அப்வேருக்கு அனுப்புவது. அந்தத் தகவல்களிலும் கொஞ்சம் உண்மை, நிறைய பொய். அந்தத் தகவல்களை லிஸ்பனில் உள்ள பிரிட்டன் தூதரக அதிகாரி டக்ளஸ் பிரிஸ்டோவின் (Douglas Bristow) காதுகளிலும் அவ்வப்போது போட்டு வந்தார். இப்படித்தான் லிஸ்பனில் கழிந்தது கார்சியாவின் தலைமறைவு வாழ்க்கை.
தவறான தகவல்களை அனுப்பி சிக்கிக் கொண்டால்…? சிக்கிக் கொள்ளக்கூடாது. பொய் சொல்லி, கற்பனையாக உளவு வேலை பார்ப்பதாக நானே கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போது, இன்னும் சிலரையும் அதேபோல துணைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் என்ன? அப்போது உதித்த சிந்தனைதான் போலி துணை ஏஜெண்ட்டுகள்.
Agent 1
பெயர்: Carvalho
இருப்பிடம்: கிளாஸ்கோ
போர்ச்சுகலைச் சேர்ந்த வணிகர்
Agent 2
பெயர்: William Gerbers
இருப்பிடம்: லிவர்பூல்
துறைமுக தொழிலாளி
Agent 3
பெயர்: Pedro
இருப்பிடம்: கிளாஸ்கோ
வணிகர்
Agent 4
பெயர்: Alaric
இருப்பிடம்: லண்டன்
விமானி
இப்போது, துணை ஏஜெண்ட்டுகள் தருவதாகச் சொல்லி தகவல்களை அனுப்பத் தொடங்கினார். தவறு ஏற்பட்டால், ஏஜெண்ட் மீது பழியை போட்டு விடலாம். இந்த ஏஜெண்ட்டுகளுக்கும் மாதந்தோறும் ஆளுக்கு 200-300 டாலர்கள் வரை ஊதியமாகப் பெற்றார். இதுதவிர தனக்கு மாதந்தோறும் 600 டாலர் சம்பளம். இதில் 2வது ஏஜெண்ட்டை திடீரென சாகடித்தார். அவர் இறப்புக்கு நம்பகமான கதையையும் கட்டினார்.
அப்வேருக்கு ‘கொஞ்சம்’ நம்பகமான தகவலை அனுப்புவார். அங்கு அனுப்பிய தகவலின் நிஜ ‘உண்மை’ தகவலை லிஸ்பனில் உள்ள பிரிட்டன் தூதரக அதிகாரி டக்ளஸ் பிரிஸ்டோவிடம் தெரிவிப்பார். எப்படியாவது மோப்பம் பிடித்து, தன்னுடைய திறமையைப் பயன்படுத்திக் கொள்ள MI5 விரும்பும். MI5 உளவுப் படையில் இணைந்துவிடும் ஆர்வத்தில், தொடர்ந்து தகவல்களை அனுப்பிக் கொண்டே இருந்தார் கார்சியா. பிப்ரவரி 1942 காலக்கட்டம் இது.
Agent 5
பெயர்: Moonbeam
இருப்பிடம்: ஒட்டாவா
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவிஞர்

ஹாலுபாக்ஸ் கடற்கரையில் அமெரிக்காவும் பிரிட்டனும் போர்க் கப்பல்களை நிறுத்தியுள்ள தகவல்களை Agent 5 அனுப்பியுள்ளார் - இது அப்வேருக்கு அனுப்பிய செய்தி.
ஹாலுபாக்ஸ் கடற்கரையில் அமெரிக்காவும் பிரிட்டனும் போர்க் கப்பல்களை நிறுத்தியுள்ளதாக அப்வேருக்கு செய்தி அனுப்பியுள்ளேன். இது காலம் கடந்த தகவல். - இது டக்ளஸ் பிரிஸ்டோவிடம் தெரிவித்த செய்தி.
அப்வேருக்கு அனுப்பியது காலாவதியான ‘உண்மை’ செய்தி. திசைதிருப்பும் செய்தியை ஜெர்மனிக்கு அனுப்பிய தகவலை MI5 அதிகாரியிடமும் உடனே பகிர்ந்து கொண்டார். இந்த முறை MI5 உளவுத்துறையில் இணைந்துவிடலாம். நம்பிக்கையுடன் காத்திருந்தார் அராபெல்.
அழைப்பும் வந்தது.




















