``4 ஆண்டுகளாக இதைத்தான் சொல்லி வருகிறார்; வாய்ப்பில்லை" - ஓபிஎஸ்-க்கு பதில் சொன்...
'டீல்' பேசும் வேலுமணி முதல் காத்திருக்கும் நயினார் நாகேந்திரன் வரை! | கழுகார் அப்டேட்ஸ்
அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டவர்களையும், விலகிச் சென்ற சிலரையும் தேர்தலுக்கு முன்பாக கட்சிக்குள் கொண்டுவரும் பணியை, வேலுமணி கையில் எடுத்திருக்கிறாராம். அ.தி.மு.க தலைமை மீதான அதிருப்தியில் ஒதுங்கியிருப்பவர்களுக்கு அவரே நேரடியாக போன் செய்து, 'மீண்டும் கட்சிப் பணிக்கு வாங்க... உரிய மரியாதைக்கும் சீட்டுக்கும் நான் பொறுப்பு...' என்று டீல் பேசுகிறாராம். வேலுமணியின் வாக்குறுதியை நம்பி சிலர் தலையசைத்திருப்பதாகத் தகவல்.

எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயண நிறைவு விழாவை, பிப்ரவரி மாத இறுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் பிரதமர் கலந்து கொள்ளவும் அவரிடம் தேதி கேட்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவுக்கான இடம் சேலமா, கோவையா என்பது மட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்குள்ளாக, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் மேடையேறும் வகையில் இரண்டு பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தே.ஜ கூட்டணியில் ஏற்பாடுகள் மும்முரமாகின்றன.
கடந்த சட்டமன்ற தேர்தலில், கடைக்கோடி தொகுதியில் போட்டியிட்ட ஆளும்கட்சியின் 'ஆஸ்'தானமான தலைமைக் கழகப் பிரமுகர் தோல்வியைத் தழுவினார். அவருடைய தோல்விக்கு, அதே தொகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி ' பூ கவிஞர்' பிரமுகரின் உள்ளடி வேலைதான் காரணம் என்று தொகுதி முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது. தேர்தலுக்குப் பின் தலைநகரில் செட்டிலான தலைமைக் கழக பிரமுகர், மீண்டும் இம்முறை கடைக்கோடி தொகுதியில் களமிறங்க காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அதே தொகுதியைக் குறிவைத்து 'கவிஞர்' பிரமுகரும் முட்டி மோதுவதால், ஆளுங்கட்சியில் அனல் பறக்கிறது. ''எனக்கு சீட் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அந்த 'கவிஞர்' பிரமுகருக்கு மட்டும் கிடைக்கக் கூடாது'' என்று தலைமைக்கழக பிரமுகர் கச்சைக் கட்டிக்கொண்டு களமாடுவது, அறிவாலயத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
பனையூர் கட்சியின் 'உப்பு' மாவட்டச் செயலாளர் பதவி, இனிஷியல் பிரமுகருக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது. அந்தப் பதவியை எதிர்பார்த்திருந்த பெண் பிரமுகர், பனையூர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம், போராட்டமெல்லாம் நடத்தி, கடைசியில் ஏதேதோ செய்துகொண்ட சம்பவமெல்லாம் பரபரப்பைக் கிளப்பின. இந்தச் சூழலில், கட்சியில் புதிதாக இணைந்த கொங்கு சீனியரை நேரில் சந்தித்து, கண்ணீர்விட்டு கதறியிருக்கிறாராம் பெண் பிரமுகர். ''என்னுடைய சொந்த நிதியிலிருந்து நிறைய பணிகளைச் செய்திருக்கிறேன். அந்த இனிஷியல் பிரமுகருக்கு பதவி வழங்கப்பட்ட பிறகு, மாவட்டத்தில் கட்சியே சோர்ந்துவிட்டது. நீங்களே விசாரித்து நடவடிக்கை எடுங்கள்..'' என்று கண்ணீர் சிந்தினாராம். இந்த தகவலையெல்லாம், கொங்கு சீனியரும் தலைமையிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். விரைவிலேயே, அந்தப் பெண் பிரமுகருக்கு புதிய வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள் பனையூர் வட்டாரத்தினர்.
தலைநகரில், பவர்புல் பதவியிலிருக்கும் 'ஐஸ்க்ரீம்' காக்கியை தேர்தல் ஆணையம் மாற்றுவதற்கு முன்பாக, நமக்கு வேண்டிய இடத்துக்கு மாற்றுவது சரியாக இருக்கும் என்று ஆலோசனை செய்திருக்கிறதாம் ஆளும் தரப்பு. அவர் இடத்துக்கு யாரைக் கொண்டு வருவது என்ற ஆலோசனையில், இயக்குநர் பெயர் கொண்டவர் மற்றும் 'பாச' அதிகாரியின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விஷயமறிந்த இயக்குநர் பெயர்கொண்ட அதிகாரி, 'எனக்கு அந்த பொறுப்பே வேண்டாம்' என்று நழுவியிருக்கிறார். அதனால், 'பாச' அதிகாரியையே பவர்புல் பதவியில் நியமிக்கலாமா, அல்லது வேறு யாரையாவது கொண்டு வரலாமா என்று தீவிரமாக ஆலோசிக்கிறாதாம் ஆளும் கட்சி தரப்பு.
பா.ஜ.க மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார். வரும் தேர்தலில், சாத்தூர் அல்லது நாங்குநேரி தொகுதிக்கு அவர் மாறவிருப்பதாக பேச்சுகள் எழுந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் புதிய தமிழகத்தின் வருகைக்காகக் காத்திருக்கிறாராம் நயினார். 'இந்தக் கூட்டணிக்குள் புதிய தமிழகம் வந்தால், திருநெல்வேலி தொகுதிக்குள்ளிருக்கும் தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் நயினாருக்குச் சாதகமாகலாம்.

அதனால்தான், தொகுதி மாறும் திட்டத்தில் குழம்பிப் போயிருக்கிறார் நயினார்...' என்கிறார்கள் கமலாலய சீனியர்கள். இதற்கிடையே, 'இந்தக் கட்சியோட மாநிலத் தலைவராக இருந்துகொண்டு, சிட்டிங் தொகுதியை மாற்றினால் அது விமர்சனத்தைக் கிளப்பாதா... அ.தி.மு.க., அ.ம.மு.க கூட்டணியில் இருக்கும் நிலையில், தைரியமாக திருநெல்வேலியிலேயே போட்டியிட வேண்டியதுதானே...' என்று நயினாருக்கு நெருக்கமான சிலரும் குழப்பிவிடுவதால், தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறாராம் நயினார்.!














