SIR : பீகாரிலும் Vote TN -லும் Vote - ECI -ன் அதிர்ச்சி விதி! | DMK EPS ADMK BJP...
டெல்லி குண்டுவெடிப்பு: அமலாக்கத் துறை சோதனையில் அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது
டெல்லியில் கடந்த வாரம் நடந்த கார் குண்டு தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலை நடத்திய டாக்டர் உமர் மற்றும் அதற்கு திட்டமிட்ட டாக்டர் முஜாமில் சகீல் உட்பட இக்குண்டு வெடிப்பு தொடர்பாக 8 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டாக்டர் உமர் ஹரியானா மாநிலம் அம்பாலா பல்கலைக்கழகத்தில் வேலை செய்து வந்தவர் ஆவார். இதேபோல் டாக்டர் முஜாமில் சகீலும் அதே பல்கலைக்கழகத்தில்தான் வேலை செய்து வந்தார். இதையடுத்து இப்பல்கலைக்கழகத்தில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

இப்பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஜாவத் அகமது சித்திக் மற்றும் பல்கலைக்கழகத்தோடு தொடர்புடைய நிர்வாகிகள் வீடு, அலுவலகம் என 25 இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
அந்த ரெய்டின் அடிப்படையில் டெல்லி போலீஸார் பணமோசடி மற்றும் விதிமுறை மீறல்கள் தொடர்பாக இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர்.
ரெய்டில் ரூ.48 லட்சம் பணம், டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் முழுமையான விசாரணைக்கு பிறகு அல் பலா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஜாவத் அகமது சித்திக் ஆகியவரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஏமாற்றுவதற்காக NAAC அங்கீகாரம் பெற்றதாக மோசடியான மற்றும் தவறான தகவல்களை வெளியிட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 1956 ஆம் ஆண்டு UGC சட்டத்தின் பிரிவு 12(B) இன் கீழ், பல்கலைக்கழகம் UGC அங்கீகாரம் பெற்றதாக தவறான தகவல்களை கூறி மாணவர்களை ஏமாற்றி இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி முறைகேடு, ஒன்பது போலி கம்பெனிகள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அந்த ஒன்பது போலி கம்பெனிகளின் முகவரி, இமெயில், மொபைல் நம்பர் போன்றவை ஒரே மாதிரியாக இருந்தது.
அந்த கம்பெனிகளின் செயல்பாடுகள் குறித்து எந்த தகவலும் இல்லை. அதோடு, வங்கிகள் மூலம் ஊழியர்களுக்கு மிகவும் குறைவான சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஊழியர்களின் வருகை பதிவேட்டை கண்காணிக்க எச்.ஆர் எனப்படும் மனித வள மேம்பாட்டுத் துறை பல்கலைக்கழகத்தில் செயல்பாட்டில் இல்லை.
பல்கலைக்கழகத்தின் நிதி இந்த போலி கம்பெனிகளுக்கு மாற்றப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள், கேண்டீன் ஒப்பந்தம் போன்றவை பல்கலைக்கழக நிறுவனரின் மனைவி, பிள்ளைகள் பெயரில் கொடுக்கப்பட்டிருந்தது.
அல்பலா கல்வி அறக்கட்டளை 1995ம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறக்கட்டளையே அல்பலா குரூப் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தி வந்தது. அந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக ஜாவத் அகமது சித்திக் இருந்து வந்துள்ளார்.

அறக்கட்டளையில் இருந்து பல கோடி ரூபாய் ஜாவத் அகமது சித்திக்கின் குடும்ப நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டிலிருந்து அல்பலா குரூப் வேகமாக வளர்ந்துள்ளது. ஆனால் அதன் வளர்ச்சிக்குப் போதிய நிதி இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
அதோடு, சந்தேகத்திற்கு இடமான பல்வேறு பண பரிவர்த்தனைகளையும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கல்வி நிறுவனத்தில் பணியாற்றிய டாக்டர்களின் செயல்பாடுகளை சரியாக கண்காணிக்க தவறியதால் ஜாவத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.




















