செஸ் உலகின் இளம் ராஜா! - புதிய அத்தியாயத்தை எழுதும் பிரக்ஞானந்தா!
தஞ்சை மாவட்டம் மருங்கப்பள்ளம் மருந்தீஸ்வரர் கோயில்: மனச் சோர்வுகள் விலகும்; தீராத நோய்களும் தீரும்!
ஈசனே உலகின் சிறந்த மருத்துவர். இந்தப் பிறப்பில் உண்டாகும் உடல் பிணியாக இருந்தாலும் உள்ளப்பிணியாக இருந்தாலும் தீர்த்து அருளும் கருணை உடையவர். கூடவே பிறவிப் பிணியையை நீக்கும் சக்தி படைத்தவர்.
அப்படிப்பட்ட ஈசன் இந்த மண்ணுலகில் வைத்தியநாதராக மருந்தீஸ்வரராகக் கோயில் கொண்ட தலங்கள் அநேகம். அப்படி ஒருதலம்தான் மருங்கப்பள்ளம். பேராவூரணி - பட்டுக்கோட்டைச் சாலையில், பேராவூரணியில் இருந்து கிழக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஊர். இங்குதான் ஈசன் மருந்தீஸ்வரராக அருள்பாலிக்கிறார்.
சித்த மருத்துவத்தில், மூலிகைகளை `கலுவம்’ எனும் சிறு கல்லுரலில் இட்டுக் குழவியால் மூலிகையின் தன்மை மாறாமல் அரைத்துக் கொடுப்பது வழக்கம். அப்படியான கலுவமும் உரலுமே சிவலிங்கமாக மாறிய அதிசய கோயில் இது. இங்கே சிவபெருமான் தாமே மருந்தாகித் திகழ்வதாக ஐதிகம்.

சூரிய பகவான் - சரண்யு தம்பதிக்குப் பிள்ளைகளான அஸ்வினி குமாரர்கள், ஈசன் தங்களுக்கு எப்போதும் துணையாக இருக்க வேண்டும் என்றும் அதன்பொருட்டு தாங்கள் மருந்து அரைக்கப்பயன்படுத்தும் கலுவம்-குழவியில் எழுந்தருள வேண்டும் என்றும் பரமேஸ்வரரைப் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.
சிவபெருமானும் உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் நன்மை அடையும் பொருட்டு, தனது அம்சம் நிறைந்த கலுவம்-குழவியை இவர்களுக்கு வழங்கினார். அவற்றையே சிவலிங்கமாகப் பிரதிஷ்டை செய்து, அஸ்வினி தேவர்கள் வழிபட்ட தலமே மருங்கப்பள்ளம் ஆகும். இறைவனுக்கு மருந்தீஸ்வரர் என்று பெயர். ஆதியில் `மருத்துவப்பள்ளம்' என வழங்கப்பட்ட இவ்வூரின் பெயர், பிற்காலத்தில் `மருங்கப் பள்ளம்' என்றானதாம்.
அனுமன் சஞ்ஜீவி மலையைக் கொண்டுவந்தபோது அதிலிருந்து ஒருகல் இவ்வூரில் விழுந்து பள்ளம் ஏற்பட்டது. அதுவே `மருந்து தீர்த்தம்’ எனப்படும் தீர்த்தக்குளமாக உருவானதாம். இந்தச் சம்பவத்தை முன்னிட்டும் இவ்வூருக்கு மருத்தவப்பள்ளம் எனும் பெயர் ஏற்பட்டதாக ஒரு தகவல் உண்டு. வேறொரு செவிவழிக் கதையும் சொல்லப்படுகிறது.
10-ம் நூற்றாண்டிலிருந்து புகழ்பெற்று விளங்கிய இந்தக் கோயில், மராட்டியர் காலத்திலும் சிறப்புப் பெற்று விளங்கியது.

தஞ்சாவூர் மராட்டிய மன்னர் 2-ம் சரபோஜிக்கு வெண்குஷ்டம் வந்தது. அவர் இங்கு வந்து நீராடி இறைவனை வணங்கி நிவாரணம் பெற்றார். அதற்கு நன்றிக் கடனாக இந்தக் கோயிலை விரிவாகச் சீரமைப்பு செய்தாராம்.
இக்கோயிலுக்கு அவர் நிவந்தங்கள் வழங்கியது பற்றிய குறிப்புகள், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகப் பதிவுகளில் உள்ளனவாம்.
கருவறை மூலவர் மருந்தீசர் எனும் ஔஷதபுரீஸ்வர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். `இவரைத் தரிசித்தாலே போதும் - இந்த இறைவனின் பார்வை நம்மீது ஒருமுறை படிந்தாலே போதும் நோய்கள் குணமாகின்றன’ என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்கள் பக்தர்கள்.
அம்பாள் பெரியநாயகியாய்... நம் உடற்பிணிகள் மற்றும் உள்ளப் பிணிகளைத் தீர்க்கும் மருத்துவ நாயகியாய் அருள்பாலிக்கிறாள். அக்கமாலை, தாமரை ஏந்தியும் அபயம், வரத முத்திரைகளைக் காட்டிபடியும் நான்கு திருக்கரங்களுடன் நின்றகோலத்தில் அருளும் இந்த அம்மனை வழிபட, அனைத்து நோய்களும் முற்றிலும் அழிந்து போகும் என்கிறார்கள். மேலும் குடும்பத்தில் நிம்மதி, ஆரோக்கியம், ஒற்றுமை வேண்டியும் இந்தத் தாயை வழிபடுகின்றனர்.
திருக்கோயிலின் முன்புறம் மூன்று படித் துறைகளுடன் திருக்குளம் அமைந்துள்ளது. இதில் நீராடி, சுவாமியையும் அம்மையையும் வழிபட்டால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்பது ஐதிகம்.

கோயிலின் மேற்கில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானும், கிழக்குப் பகுதியில் - சனீஸ்வரர், பைரவர், லட்சுமி நாராயணர் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர். சூரியதேவனும் இங்கு வழிபட்டுள்ளார்.
இதை மெய்ப்பிக்கும் விதமாக ஆருத்ரா புண்ணிய தினத்தில் காலை வேளையில், தன் கிரணங்களால் இறைவனின் திருவடியைத் தொழுது வணங்குகிறார் சூரியன். இந்தக் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.
அதேநாளில் இங்கு அஸ்வினி தேவர்களுக்குக் குதிரை பூஜை செய்யப்படும். இங்குள்ள அனுகிரக சனியை வழிபட்டால், எவ்வகை சனிதோஷம் இருந்தாலும் விலகும். அஸ்வினி, ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டுப் பூஜை செய்தால், அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்கிறார்கள் இங்குள்ள பக்தர்கள்.
மகிமைகள் வாய்ந்த இந்தத் தலத்துக்கு வாய்ப்பிருப்பவர்கள் சென்று வாருங்கள். உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.



















