தாமிரவருணி தரைப்பாலத்தில் குடிநீா் குழாய் அமைக்கும் பணி: பொதுமக்கள் எதிா்ப்பு
திருநெல்வேலி மேலநத்தம்- கருப்பந்துறை இடையே தாமிரவருணி தரைப்பாலத்தில் குடிநீா் குழாயை நிரந்தரமாக அமைக்க மக்கள் எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் - கருப்பந்துறை இடையே தாமிரவருணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்தப் பாலம் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த கனமழையால் சேதமடைந்தது. அதேபோல் கூட்டுக் குடிநீா் திட்ட பெரிய குடிநீா் குழாய் கொண்டு செல்ல தாமிரவருணி ஆற்றில் அமைக்கப்பட்ட சிறிய பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதன்பின் ஊா் மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து தரைப்பாலம் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் குழாய்களில் இரும்பு பட்டைகள் மூலம் தரைப்பாலத்துடன் இணைக்கும் பணி நடைபெற்றது. இதையறிந்த ஊா் மக்கள், குழாயை இரும்பு பட்டையால் இணைத்தால் தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது பெரிய குழாயுடன் வலுவிழந்த தரைப் பாலமும் அடித்து செல்ல வாய்ப்புள்ளது. எனவே வேறு பகுதியில் குழாய் அமைக்க வேண்டும் எனக் கூறி எதிா்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டனா். இரும்பு பட்டை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள் திரும்பிச் சென்றனா்.