தரவு, திரை, மனநிலை - நவீன தேர்தல் யுக்தியின் மூன்று முகங்கள் செயல்படுவது எப்படி?
"திமுகவில் உள்ள 16 அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து போனவர்கள்தானே" - ஆர்.பி.உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் 8-ல் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் கொங்கபட்டியில் நடந்த உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது,
"எஸ்.ஐ.ஆர் மூலம் நடைபெறும் வாக்காளர் திருத்தப் பணிகளில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு அரணாக இருக்கவேண்டும். உசிலம்பட்டி என்றாலே அது அதிமுகவின் கோட்டை, திமுகவினர் வேட்பாளரை நிறுத்தி நிறுத்தி சோர்ந்து போய்விட்டனர். ஆனாலும் அப்படி நினைத்து அலட்சியமாக இருக்கக்கூடாது.
திமுக தோற்றுவிடும் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளதால், அப்படித் தோற்றுவிட்டால் கட்சி நிர்வாகிகள் பதிவியில் இருக்க முடியாது எனக் கட்டளையிடும் ஸ்டாலின் ஒரு பதற்றத்தில் இருக்கிறார்.
அதனால் தேர்தலை நேரடியாகச் சந்திக்க முடியாது என்பதற்காக தற்போது எஸ்ஐஆர்-ஐ எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சென்றிருக்கிறார். வரும் 11 ஆம் தேதி திமுக போராட்டம் நடத்துகிறது, இன்னொரு பக்கம் மாவட்டச் செயலாளர்கள் எல்லோரும் வாக்குசாவடியில் நிற்கின்றனர்.
வலிமையோடு, எளிமையாக வெற்றிகரமாக இரட்டை இலையின் ஆட்சி மலரப்போகிறது. அதே நேரம், அதிமுக பிரிந்து கிடக்கிறது, அவர் போய்விட்டார், இவர் போய்விட்டார் எனப் புரளி கிளப்பி விடப்படுகிறது.

எவர் போனால் என்ன? இரட்டை இலை இருக்கும் வரை, உண்மைத் தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுக ஆட்சி மலரும், 1972 முதல் சேர்ந்தவர்களா அதிமுகவில் இருக்கிறார்கள்? திமுகவில் இருக்கும் 16 அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து போனவர்கள்தானே, அதிமுக சோர்ந்து போனதா? திமுகவை எதிர்ப்பதுதான் அதிமுகவின் லட்சியம்.
கே.கே.எஸ்.ஆர், எ.வ.வேலு, செந்தல் பாலாஜி என யார் போனாலும் பின்வாங்கியுள்ளதாக அதிமுக? அதிமுகவிலிருந்து திமுகவிற்கு யார் போனாலும் தோற்றுவிடவில்லை.
அதனால்தான் அதிமுக பிரிந்து கிடக்கிறது என்கிற மாய தோற்றத்தை உருவாக்கி செய்திகளைப் பரப்புகிறார்கள். இனி 5 ஆயிரம் கொடுப்போம் என திமுகவினர் ஒரு புரளியைக் கிளப்புவார்கள், 50 ஆயிரம் கொடுத்தாலும் இரட்டை இலைதான் மலரும்.
எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. மீதியுள்ள 2 தொகுதிகளை வெல்ல எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்துக் கொடுப்பார், அதன் மூலம் வெற்றி பெறுவோம்.
திமுகவை அழிக்க நினைக்கிறார்கள் என்று ஸ்டாலின் பரிதாபமாகப் பேசுகிறார், ஒப்பாரி வைக்கிறார், தேர்தல் அறிவிக்கவே இல்லை. அதற்குள் திமுகவின் நிலவரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது" என்றார்.
















