செய்திகள் :

`திமுக, காங்கிரஸ் கூட்டணி இறுதியாகிறதா?’ முந்தி அறிவித்த ப.சி; `திடீர்’ குழு அமைப்பின் பின்னணி!

post image

2021-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் தி.மு.க, காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே வார்த்தை மோதல் தீவிரமானது. குறிப்பாகத் தி.மு.க மாணவரணி ராஜீவ் காந்தி, "கல்விக்கண் திறந்த காமராஜர் சொந்த காசில் பள்ளிக்கூடங்களைத் திறக்கவில்லை" என்றார்.

காமராஜர்
காமராஜர்

இதேபோல் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, "முன்னாள் முதல்வர் காமராஜருக்கு ஏசி இல்லாமல் தூக்கம் வராது. அதனால், அவர் தங்கும் அனைத்துப் பயணியர் விடுதிகளிலும் ஏசி வசதி செய்யச் சொல்லி அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி உத்தரவிட்டார்" என்றார். இதற்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க சர்ச்சையானது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து இருவர் விலகிய நிலையில் அவர்கள் தி.மு.க-வில் இணைக்கப்பட்டனர்.

பதிலுக்கு 'வரும் தேர்தலில் தி.மு.க கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க வேண்டும்' என ராஜேஷ்குமார், கே.எஸ்.அழகிரி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். மேலும் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் சிலர் தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறித் த.வெ.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாமெனக் காங்கிரஸின் டெல்லி தலைமையிடம் கோரிக்கை வைத்ததாகத் தகவல் வெளியானது.

இப்படியான சூழலில்தான் பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில்தான் வெற்றிபெற்றது. இதனால் அகில இந்திய தலைமை தி.மு.க-வுடனேயே தொடர்ந்து பயணிக்கலாமென முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது.

ராகுல் காந்தி

இதற்கிடையில், 'திராவிடம் 2.0 ஏன்? எதற்கு?' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "இந்த நிகழ்ச்சியில் அழைப்பிதலில் என் பெயர், அமைச்சர் அன்பில் மகேஷ் பெயர், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைப் பெயர் எல்லாம் குறிப்பிட்டிருந்தார்கள். அண்ணன் செல்வப் பெருந்தகை நிகழ்ச்சிக்கு முன்னமே வந்துவிட்டார். நான் தாமதமாக வந்தேன். அவருக்கு அவசர அழைப்பு வந்ததால் அவர் நான் வருவதற்கு முன்பே 'வருகிறேன்' எனச் சென்றுவிட்டார். ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கிவிட்டோம். அப்போதும் அவர் வரவில்லை என்றதும் அவர் வருவாரா? மாட்டாரா? எனச் சந்தேகத்திலேயே இருந்தார்கள்.

பத்திரிக்கையாளர்களும் 'உதயநிதி அப்சட்; செல்வப் பெருந்தகை ஆப்செண்ட்' எனத் தலைப்பெல்லாம் வைத்துவிட்டார்கள். ஆனால், அண்ணன் செல்வப் பெருந்தகையும், அவரின் இயக்கமும் சரியான நேரத்துக்கு, சரியான இடத்துக்கு வந்துவிட்டார். சென்றால்தானே வர முடியும்... ஒரு கொள்கை 100 வருடங்களுக்குப் பிறகும் நிலைத்து நிற்கிறது என்றால் அந்தக் கொள்கை உறுதியை நினைத்து நாம் பெருமைப் பட வேண்டும். எப்படி இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அப்படியான ஆற்றல் மிக்க இந்த இரும்புக்கோட்டையில் விரிசல் வந்துவிடாதா எனச் சங்கிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் வந்திருப்பதுதான் செந்தில்வேலின் இந்தப் புத்தகம். சங்கிகளை மேலும் மேலும் பதறவைக்கும் விதமாகதான் இந்தப் புத்தகம் எழுதியிருக்கிறார். " என உரையாற்றினார்.

Udhayanidhi

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, "கடந்த இரண்டு மாதங்களாகச் சில சலசலப்புகள் நிலவின. கூட்டணியின் எதிர்காலம் என்ன, அது எந்தத் திசையில் செல்லும்? இந்த ஊகத்தைப் பயன்படுத்தி பலரும் ஆதாயம் தேட முயன்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு அறிவிப்பு வெளியாகும்" எனத் தெரிவித்தார்.

ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைக் கருதி தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ஐந்து உறுப்பினர் குழுவை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு சிதம்பரம் தெரிவித்து பல மணிநேரம் கடந்தபிறகும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருத்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் தொண்டர்கள் குழப்பமடைந்தனர். ஒரு வழியாக வெளியான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்திக்குறிப்பில், '2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அமைத்திருக்கிறார்கள்.

அதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்

இதன் பின்னணி குறித்து பேசும் சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள் சிலர், "தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டும் எனச் செல்வப்பெருந்தகை தலைமையில் ஒரு குழுவும், த.வெ.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாமென மாணிக்கம் தாகூர் தலைமையில் ஒரு பிரிவும் வேலை செய்து வருகிறது. இதில் பீகார் தேர்தல் முடிவுக்குப் பிறகு செல்வப்பெருந்தகை தரப்பின் கை ஓங்கியிருக்கிறது. எனவேதான் அவர்கள் கடந்த சில நாட்களாகத் தி.மு.க-வுடன்தான் கூட்டணியெனப் பேசி வருகிறார்கள். ஆனால் தி.மு.க, த.வெ.க என யாருடன் கூட்டணிக்குச் செல்வது என எந்த அதிகாரப்பூர்வ முடிவையும் டெல்லி தலைமை எடுக்கவில்லை. தற்போதைக்கு தேவையில்லாத சலசலப்புகளை தவிர்க்கும் விதமாக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணிகுறித்த இறுதி முடிவை டெல்லி எடுக்கும். இந்தமுறை தொகுதிகளின் எண்ணிக்கையையும் டெல்லி தலைமைதான் இறுதி செய்யும்" என்றனர்.

மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பேசுகையில், "த.வெ.க-வுடன் கூட்டணி வைக்கப்போகிறது காங்கிரஸ் எனச் சில நாட்களாகப் பேசி வருகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் ராகுல்காந்தி என்றும் செய்திகளை வெளியிடுகிறார்கள். ஆனால் த.வெ.க-வுடன் கூட்டணிக்குச் செல்லலாமெனக் கே.சி வேணுகோபால், மாணிக்கம் தாகூர், சசிகாந்த் செந்தில், ஜோதிமணி போன்றவர்கள் முயற்சி எடுத்தனர். கட்சியை வளர்ப்பதற்காக அவர்கள் இந்தக் கோரிக்கையை வைக்கவில்லை. கட்சியை வளர்க்க வேண்டும் என்றால் கூட்டணியில் இருந்தாலும் தி.மு.க-வை எதிர்க்க வேண்டும். மக்களின் பிரச்னைகளுக்குக் குரல் எழுப்ப வேண்டும். இதையெல்லாம் த.வெ.க-வுடன் செல்லலாமென சொல்லும் தலைவர்கள் செய்திருக்கிறார்களா?

குபேந்திரன்

கேரளா, பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிக்கலாம். தமிழகத்தில் கணிசமான எம்எல்ஏ-க்களை பெறலாம் என மனக்கோட்டை கட்டினார்கள். ஆனால் பீகாரில் காங்கிரஸுக்கு மரண அடி விழுந்தது. பார்ட்டைம் அரசியல் செய்யும் ராகுல் காந்திக்கும், கட்சியை வளர்க்கலாம் பதவியை மட்டும் அனுபவிக்கும் மூத்த தலைவர்களுக்கு மக்கள் நல்ல பாடத்தை கற்பித்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் விரைவில் அறிவிப்பு வரும் என செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.

மேலும் தி.மு.க கூட்டணியுடன் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக குழு அமைக்கப்பட்டிருப்பதாக சிதம்பரம் தெரிவித்திருந்தார். அதன்பிறகுதான் குழு அறிவிக்கப்ப அறிக்கை வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் த.வெ.க-வுடன் கூட்டணி இல்லை என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருக்கிறது என்றுதான் தெரிகிறது" என்றார்.

சேலம் திமுக நிர்வாகி கொலை: ``ரூ. 5000-க்கு துப்பாக்கிகள் கிடைக்கின்றன" - அன்புமணி குற்றச்சாட்டு

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளரும், விவசாயியுமான ராஜேந்திரன் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ... மேலும் பார்க்க

`வேட்புமனு வாபஸ் அச்சம்’ - கூட்டணியில் இருந்தும் வேட்பாளர்களை ஹோட்டலில் தங்கவைத்த பாஜக, சிவசேனா

மகாராஷ்டிராவில் வரும் டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிந்து, மனுவை வாபஸ் பெறும் நாள் நேற்றோடு முடிந்தது. வேட்பு மனுவை திரும்ப பெறும் கடைசி நாளி... மேலும் பார்க்க

`ராஜ் தாக்கரே வேண்டும்’ உத்தவ் உறுதி; காங்கிரஸ் முட்டுக்கட்டை - சரத் பவார் சமாதானம் கைகொடுக்குமா?

மகாராஷ்டிராவில் தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ம் தேதி நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தல் முடிந்த பிறகு அடுத்த கட்டமாக ஜனவரி மாதம் மும்பை உட்பட மாநிலம் முழுவத... மேலும் பார்க்க

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங். குழு; "அரசல் புரசல் செய்திகளுக்கு முடிவு" -ப.சிதம்பரம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் மெல்ல பரப்புரைகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் கிராமங்கள் தோறும் பரப்புரை நிகழ்த்தி வருகின... மேலும் பார்க்க

`மேக்கேதாட்டு அணை - மெட்ரோ - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு’ - எடப்பாடி பழனிசாமி விரிவான பேட்டி

சேலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, ``கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் பேட்டியில், மேக்கேதாட்டு அணை ... மேலும் பார்க்க

`அதிமுக ஆட்சியில்தான் மதுரைக்கு மெட்ரோ ரயில் வர மீனாட்சி விரும்புகிறார்' - சொல்கிறார் செல்லூர் ராஜூ

"மெட்ரோ ரயிலை மத்திய அரசு தடுத்து விட்டது என்று பரப்புவது திமுகவின் நாடகம். மத்திய அரசு அனுப்பிய கடிதம் வழக்கமான நடைமுறைதான்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மெட்ரோமதுரைய... மேலும் பார்க்க