T20 World Cup: "இந்தியாவுடன் விளையாடுகிறோம்; ஆனால்" - ஐசிசிக்கு பாகிஸ்தானின் நிப...
'திமுக கூட்டணியில் ராமதாஸ்?' - செல்வபெருந்தகை கருத்துக்கு விசிக கண்டனம்!
தி.மு.க கூட்டணியில் ராமதாஸ் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு செல்வபெருந்தகை அளித்த பதில் வி.சி.க முகாமை கொதிப்படையச் செய்திருக்கிறது.
தந்தை மகன் மோதலால் பா.ம.க பிளவடைந்திருக்கும் நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் ஐக்கியமாகியிருக்கிறார் அன்புமணி. பெரியவர் ராமதாஸ் தி.மு.க கூட்டணிக்கு செல்லலாம் எனப் பேசப்பட்ட சூழலில் 'பா.ம.க, பா.ஜ.க இடம்பெறும் கூட்டணியில் வி.சி.க இருக்காது' என உடைத்துப் பேசியிருந்தார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.
இச்சூழலில், 'தி.மு.க கூட்டணியில் ராமதாஸ் இணைவாரா?' என்ற கேள்விக்கு செல்வபெருந்தகை, ``தி.மு.க கூட்டணிக்குள் வருவதை தி.மு.க தலைவர் தான் முடிவு செய்யவேண்டும். அதேநேரம் ராமதாஸும், வி.சி.க தலைவர் திருமாவளவனும் நெருக்கமாக இருந்தவர்கள்தான். இருவருக்கும் இடையே இடைவெளி இல்லை. இவருக்கு ஒன்று என்றால் அவர் பேசுவார். விசிக கொடியை ராமதாஸ் ஏற்றியிருக்கிறார். வன்னியர் சங்க கொடியை திருமாவளவன் ஏற்றியிருக்கிறார். இவ்வாறு இணக்கமாக இருந்தவர்கள் தான் இருவரும். எனவே தேவை என்றால் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி சரி செய்துகொள்வார்கள். அதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும்' என பதிலளித்தார்.
செல்வபெருந்தகையின் கருத்துக்கு ரியாக்ட் செய்த வி.சி.க திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பாலாஜி, "கூட்டணியில் யார் யார் என்பதை தி.மு.க முடிவெடுக்கும் என்பதைதான் நாங்களும் சொல்லி விட்டோமே.

சாதியவாத மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை விசிக மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை" என கண்டித்தார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய வி.சி.க நிர்வாகிகள், "ராமதாஸ் இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்பதை 14 ஆண்டுகளாக சொல்லிவருகிறது வி.சி.க. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் ராமதாஸ் கூட்டணிக்கு வரலாம் என பேச்சுகள் எழுந்தவுடனேயே வி.சி.க எம்.எல்.ஏ-க்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
அதன்பிறகு, எங்கள் தலைவருமே எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிவிட்டார். வி.சி.க ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்ட பிறகு 'அவர்களுக்குள் எந்த பிரச்னையுமில்லை.. சந்தித்து பேசினால் சரியாகிவிடும்.. முதல்வர் முடிவெடுப்பார்' எனப் பேசியது சரியல்ல" என்றனர்.


















