செய்திகள் :

திருச்சி, திருவாசி: தங்கம் சேரும் யோகம் தரும் மாற்றுரைவரதர் கோயில்; நோய் தீர்க்கும் சர்ப்ப நடராஜர்!

post image

பிரபஞ்ச வடிவான ஈசன் உருவமற்றவர். அவரை உருவத்தோடு வழிபடுவதும் உண்டு. அதேபோல அவரை அருவுருவமாகவும் வழிபடுவோம். பெரும்பாலும் ஆலயங்களில் சிவபெருமான் லிங்க ரூபமாக அருவுருவமாகவே அருள்பாலிக்கிறார். அப்படி எழுந்தருளும் லிங்கங்களிலும் பல்வேறு விதமான திருமேனிகள் உண்டு. அவற்றில் மிகவும் சிறப்பான சகஸ்ர லிங்கம்.

ஒரு லிங்கத்துனுள் ஆயிரம் லிங்கங்கள் உள்ளது போன்ற அமைப்பு. பல ஆலயங்களில் நம்மால் சகஸ்ர லிங்கங்களை தரிசிக்க முடியும் என்றாலும் முதன் முதலில் சகஸ்ர லிங்கம் உருவான தலம் ஒன்று உண்டு. அதன் பின்னணியில் உணர்வு பூர்வமான சம்பவம் ஒன்றும் உண்டு.

அந்தத் தலம் திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள திருவாசி திருக்கோயில். இங்குதான் ஈசன், மாற்றுரைவரதர் என்று போற்றப்படுகிறார். அவருக்கு பிரம்மபுரீஸ்வரர், சமீவனேஸ்வரர் என்கிற திருநாமங்களும் உண்டு.

திருவாசி மாற்றுரைவரதர் கோயில் சர்ப்ப நடராஜர்

முன்னொரு காலத்தில் ஆயிரம் ரிஷிகள் ஈசனை எண்ணி இத்தலத்தில் தவமிருந்தனர். அவர்களின் கடும் தவத்துக்கு மகிழ்ந்த ஈசன் அவர்களுக்குக் காட்சி கொடுத்து வேண்டும் வரம் யாது என்று கேட்டார்.

அதற்கு அந்த முனிவர்கள், ஈசனைக் கண்டபின் இந்த உலகில் அடையவேண்டியது ஒன்றும் இல்லை. தம்மை அவரோடு சேர்த்துகொள்ளுமாறு வேண்டினர். ஈசனும் மனம் குளிர்ந்து அவர்கள் அனைவரையும் தன்னோடு சேர்த்துக்கொண்டார்.

லிங்க ரூபமான ஈசனின் திருமேனியில் ஆயிரம் ரிஷிகளும் லிங்கங்களாக மாறி சேர்ந்தனர். அதுவே உலகின் முதல் சகஸ்ரலிங்கம்.

இத்தலத்துக்கு திருப்பாச்சிலாச்சிராமம் என்ற திருநாமமும் உண்டு. தேவாரத் தலங்களுள் 62-வது தலம் இது. இங்கு வேதங்களின் பொருளை உணர்ந்துகொள்ள அம்பிகை அன்னமாக மாறிவந்து ஈசனை வழிபட்டாள்.

ஈசனும் அம்மையின் தவத்தில் மகிழ்ந்து காட்சி கொடுத்து வேதப் பொருளை எடுத்துரைத்தார். அன்னை, அன்னப்பறவையாக இங்கு வந்து அமர்ந்த பொய்கையே ‘அன்னமாம் பொய்கை’ என்கிறது தல வரலாறு.

இங்கு அருளும் அம்பிகைக்கு பாலாம்பிகை என்பது திருநாமம். சுவாமி கிழக்கு நோக்கியிருக்க, அம்பாள் அவருடைய வலக்கை பாகத்தில், சந்நிதி கொண்டிருக்கிறாள். இருவரும் ஒருவரையொருவர் நோக்கியதைப் போல அமைந்திருப்பது சிறப்பம்சம்.

ஈசன் கருணாமூர்த்தியாக அருளும் தலம் இது. ருத்திராட்சப் பந்தலின் கீழே அருளும் இந்த சிவனை வழிபட்டால் செல்வம் சேரும். தங்க நகைகள் சேரும் யோகம் வாய்க்கும். இதற்கு சாட்சியாக சுந்தரமூர்த்தி நாயனாரின் சரிதம் ஒன்று உண்டு.

சுந்தரமூர்த்தி நாயனார் ஒவ்வோர் சிவாலயமாகச் சென்று தரிசனம் செய்துவந்தார். அவருடன் அடியார் பெருமக்கள் பலரும் சேர்ந்து பயணித்தனர்.

அவர்களுக்கு உணவு வழங்க வேண்டியதன் பொருட்டு சுந்தரர் ஈசனிடம் ஒவ்வொரு தலத்திலும் பொன் கேட்பார். அவர் அதைக் கொடுத்ததும் அதைக்கொண்டு அடியார்களுக்கு அன்னம்பாலிப்பார்.

ஒருமுறை திருவானைக்கா தலத்தில் சிவனை தரிசித்துவிட்டு இத்தலம் வந்தபோது கைவசம் இருந்த பொன் தீர்ந்துபோனது. வழக்கம்போல் சுந்தரர் சிவனை நினைத்துப் பாடினார். ஆனால் பொன் கிடைக்கவில்லை. சுந்தரர் கோபம் கொண்டார். சிவனை இகழ்ந்து பாடுவதுபோல் பாடினார்.

திருவாசி மாற்றுரைவரதர் கோயில்

உடனே சிவனும் ஒரு பொன் முடிப்பைக் கொடுத்தார். இம்முறை சுந்தரருக்கு ஈசன் கொடுத்தபொன் தரமானதுதானா என்கிற சந்தேகம் வந்தது. அதையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஈசன் ஒரு சாமானியராக வந்து அந்தத் தங்கத்தை வாங்கி உரசிக் காட்டி, "சுத்தத் தங்கம்தான். போதுமா" என்று கேட்டுவிட்டு உடனே மறைந்துவிட்டார்.

இக்காட்சியைக் கண்டு வியந்துப்போன வந்தது ஈசனே என்று புரிந்துகொண்டார். ஈசனை எண்ணி மீண்டும் ஒரு பதிகம் பாடித் துதித்தார். இந்த நிகழ்வை சிவனை மறுபடியும் தான் இகழ்ந்து பாடவில்லை என்ற அர்த்தத்தில் பதிகம் பாடினார். தங்கத்தின் தரத்தை உரைத்ததனாலேயே இந்த ஈசனுக்கு 'மாற்றுரைவரதர்' என்ற திருநாமம் உண்டானது.

‘துணி வளர் திங்கள் துலங்கி விளங்க’ என்ற திருஞானசம்பந்தர் பதிகம் பாடப்பெற்ற இடம் இதுவே. வலிப்பு நோயையும் குழந்தைகளுக்கு வரும் நோய்களையும் தீர்த்துவைக்கும் திருத்தலம் இது.

கொல்லிமழவன் எனும் அரசனின் மகளுக்குப் பிடித்திருந்த வலிப்பு நோயை இங்குதான் சம்பந்த பெருமான் நீக்கினார். இங்குள்ள ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில் கொல்லி மழவன் மகளுக்குச் சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

திருவாசியில் அருளும் நடராஜர் விசேஷமானவர். இவரின் திருவடியில் முயலகனுக்குப் பதில் சர்ப்பம் உள்ளது. இந்தத் திருக்கோலம் மிகவும் அபூர்வமானது. வேறு எங்கும் தரிசிக்க முடியாதது. நோய்களை நாகமாக்கி அதை ஈசன் மிதித்து ஆடுவதாக ஐதிகம்.

இந்த சர்ப்ப நடராஜருக்கு அர்ச்சனை செய்து, அந்த விபூதியை 48 நாள்கள் தொடர்ந்து பூசிவர நரம்புப் பிரச்னைகள், வாதநோய், வலிப்புநோய், வயிற்றுவலி, சர்ப்ப தோஷம், மாதவிடாய்ப் பிரச்னைகள் முதலியன விலகும் என்கிறார்கள் பக்தர்கள்.

அம்பிகை கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகிகளின் முன் தொட்டில் கட்டி வழிபட்டால் பிள்ளை வரம் கிட்டும் என்பதும் நம்பிக்கை. திருவாசி ஆலயத்தில், கிரக மூர்த்தியர் சூரியனை நோக்கியே அமைந்துள்ளனர். சூரியதேஷம் உள்ளவர்கள் இத்தல நவகிரகங்களை வழிபடுவது சிறப்பு.

இங்கு தனிச்சந்நிதியில் அமைந்துள்ள சண்டிகேஸ்வரிக்கு உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அபிஷேகம் செய்து வழிபட தம்பதிகள் ஒற்றுமை கூடும் எனவும் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள் என்பதும் நம்பிக்கை.

இங்கு வள்ளி, தெய்வனை சமேத முருகன், கஜலட்சுமித் தாயாருக்கும் இங்கு தனிச் சந்நிதி உண்டு.

பழைமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயத்தின் சிற்ப சிறப்புகள் அலாதியானவை. மகிமை வாய்ந்த இந்தத் திருக்கோயிலுக்கு வாய்ப்பிருப்பவர்கள் சென்று தரிசனம் செய்து வாருங்கள். ஈசன் அருளால் நோய் நொடி நீங்கி ஆரோக்கிய வாழ்வும் ஐஸ்வர்யமும் ஸித்திக்கும்.

திருப்போரூர் அருகே உள்ள தையூர்: அழகீஸ்வரராய் அருளும் ஈசன், வழக்குகளில் வெற்றி தரும் முருகன்!

திருச்செந்தூரில் முருகப்பெருமான் சிவபெருமானை யுத்தம் முடிந்தபின் வழிபட்டார். அவரே யுத்தம் தொடங்கும் முன் வழிபட்ட தலம் தையூர். முருகப்பெருமான், திருப்போருரிலே தாரகாசுரனுடன் வான் மார்க்கமாக போரிடுவதற்கு... மேலும் பார்க்க

கும்பகோணம் ஜுரஹரவிநாயகர்: மிளகுரசம் பருப்பு துவையல் நிவேதனம்; யம பயம் நீக்கும் பிரளயகால ருத்ரர்!

ராகு ஸ்தலம் நாகேஸ்வரன் கோயில்நோய்கள் பரவும் பருவநிலை காலம் இது. ஒவ்வோர் ஆண்டும் புதிய புதிய நோய்கள் வந்து மக்களை வாட்டுகின்றன. அதற்கான மருத்துவம் வளர்ந்துவந்து உதவினாலும் மனதளவிலும் உடலளவிலும் நமக்குத... மேலும் பார்க்க

விழுப்புரம், எசாலம் ஸ்ரீராமநாதேஸ்வரர் : அரசியலில் வெற்றி, பதவியோகம் அருளும் ஈசன்!

சோழர்கள் கலைப்பொக்கிஷங்களாகத் திகழ்பவை அவர்கள் எழுப்பிய ஆலயங்கள். தஞ்சைப் பெரியகோயிலும் கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயிலும் அதற்குப் பெரும் எடுத்துக்காட்டுகள். ஆனால் கோயில்கள் கலைப்படைப்புகள் மட்டுமல்ல... மேலும் பார்க்க

குற்றாலம், இலஞ்சி முருகன் கோயில்: வேண்டும் வரம்தரும் மாதுளை முத்துகளால் ஆன வேல் காணிக்கை!

தமிழ்க்கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான் அடியார்களின் குரலுக்கு ஓடி வருபவர். அப்படி அவர் ஓடி வந்து அருள் செய்த தலங்களில் ஒன்று இலஞ்சி. தமிழகத்தின் எல்லைப்புற ஊர்களில் ஒன்று செங்கோட்டை. இயற்கை ... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: உண்டியலில் முருக பக்தர் செலுத்திய `வெள்ளிக்காசு மாலை' - சிறப்பு என்ன?

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா, கடந்த மாதம் 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 27-ம் தேதி சூரசம்ஹாரமும், 28-ம் தேதி தி... மேலும் பார்க்க

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் : பிரச்னைகள் தீர்க்கும் பிரதோஷ தேங்காய் மாலை!

பிரதோஷ காலத்தில் வழிபாடுகள் சிவாலயங்களில் சிறப்பாக நடைபெறும். வைணவ ஆலயங்களில் நரசிம்ம மூர்த்திக்கு விசேஷ வழிபாடுகள் உண்டு. ஆனால் விநாயகருக்குப் பிரதோஷ வழிபாடுகள் விசேஷமாக நடைபெறும் தலம் ஒன்று உண்டு. அ... மேலும் பார்க்க