திருநங்கைகள் மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடை: கையெழுத்திடுகிறார் டிரம்ப்
திருநங்கைகளாக மாறியவர்கள் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிறப்பால் ஆணாக இருந்து, திருநங்கைகளாக மாறியவர்கள், பெண்கள் அல்லது சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வீராங்கனைகளாக பங்கேற்பதைத் தடை செய்யும் நிர்வாக உத்தரவில் இன்று கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துவரும் நிலையில், ஏற்கனவே மாற்றுப் பாலினத்தவர்களுக்கான பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது திருநங்கைகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்ற முதல் நாளில் பல முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமானது என்ற உத்தரவும் அடங்கும்.
இந்த நிலையில்தான், தேர்தல் பிரசாரத்தின்போதே, டொனால்ட் டிரம்ப், ஆண்களை பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற பிரசாரமும் இடம்பெற்றிருந்த நிலையில், அதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.