AVM Saravanan: "அவரோட நியாபகமாதான் சூர்யாவுக்கு சரவணன்னு பேர் வச்சேன்"- கண்ணீரில...
திருப்பரங்குன்றம்: `தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?’ - நீதிபதிகள் கேள்வி
முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான நேற்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் வழக்கமான தீபத்தூணில் தீபம் ஏற்றியதால், அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் பெரும் பரபரப்பான, பதட்டமான சூழல் காணப்படுகிறது.

மனுதாரருக்கு ஆதரவாக சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் சென்று தீபமேற்ற உத்தரவிட்டார் நீதிபதி. அதையும் தமிழ்நாடு காவல்துறை உறுதியாக மறுத்துவிட்டது. 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது,
இந்த விவகாரங்களெல்லாம் பேசுபொருளான நிலையில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ``மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும்.

பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே சி.ஐ.எஸ்.எஃப்-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே. அதைத்தாண்டி மனுதாரருக்கு பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையதல்ல. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது முதலில் முடிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும்." என்றது.
அதைத் தொடர்ந்து, ``தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அரசு தரப்பு,``தீபத்தூண் பழமையானதா என்றெல்லாம் தெரியவில்லை. 100 ஆண்டுகளாக அந்த தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை. 1862-ல் இருந்தே இந்த தூண் பயன்பாட்டில் இல்லை. அதை நீதிபதி சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் 100 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகேதான் எந்த சச்சரவுமின்றி தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

100 ஆண்டுகள் வழக்கத்தை ஒரு நொடியில் மாற்ற சொல்லி இருக்கிறார் நீதிபதி. இதை உடனடியாக மாற்ற இயலுமா? ஒரு இடத்தில் ஒரு தீபம் தான் ஏற்ற வேண்டும் பல தீபங்கள் ஏற்ற இயலுமா?. வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை உடனே நடைமுறைப்படுத்த உத்தரவிட என்ன அவசியம் என்பதும் தெரியவில்லை. தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை.
30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில் விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது.
அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திருப்புரங்குன்றம் தீப விவகாரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மதப்பிரச்சினை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது." என வாதிடப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது....
















