அமெரிக்காவின் கண்ணை உறுத்தும் இந்தியா - EU ஒப்பந்தம்; ஐரோப்பிய நாடுகளைக் கடுமையா...
திருமணம் மீறிய உறவைக் கண்டித்த கணவர்; டீசல் ஊற்றி எரித்துக் கொலை; மனைவி சிக்கியது எப்படி?
கரூர் அருகே உள்ள புலியூர் வடக்குப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது: 47). இவர், கரூரில் உள்ள தனியார் டெக்ஸ் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்குத் திருமணமாகி பாண்டீஸ்வரி (வயது: 49) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், கரூர் தொழிற்பேட்டையில் சமையல் மாஸ்டராகப் பணிபுரிந்து வரும், நாமக்கல் ஒருவாந்தூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவருடன் கடந்த 8 மாதங்களாக திருமணம் மீறிய உறவில் பாண்டீஸ்வரி இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பாண்டீஸ்வரியின் கணவர் இருவரையும் கண்டித்ததால், கடந்த 25-ம் தேதி இரவு சணப்பிரட்டி கிராமம், R.S புதூர் சாலையில் மது குடித்துக் கொண்டிருந்த பொழுது, ராஜமாணிக்கத்திற்கும் செந்தில்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது, ராஜமாணிக்கம் பீர் பாட்டிலால் தலையில் அடித்தும், செந்தில்குமார் கழுத்தை கத்தியால் அறுத்தும் கொலை செய்துவிட்டு, பின்பு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் வாங்கிக் கொண்டு வந்து ஊற்றி செந்தில்குமார் உடலை எரித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை இயற்கை உபாதையைக் கழிக்க சென்ற சிலர், அங்கு கருகிய நிலையில் இருந்த உடலைக் கண்டு, கரூர் பசுபதிபாளையம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோப்ப நாய் உதவியுடன் தடயங்களைச் சேகரித்து விசாரணையை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கருகிய நிலையில் இருந்த உடலை பசுபதிபாளையம் போலீஸார் கைப்பற்றி கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த செந்தில்குமாரின் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில், காவல்துறை விசாரணையில், முதலில் முன்னுக்குப் பின் முரணாக உயிரிழந்த செந்தில்குமாரின் மனைவி பாண்டீஸ்வரி கூறிவந்த நிலையில், ஒருகட்டத்தில் தனது கணவரைத் திட்டமிட்டு கொலை செய்ததைப் பின்னர் ஒப்புக்கொண்டார்.

பாண்டீஸ்வரி அளித்துள்ள வாக்குமூலத்தில், சமையல் மாஸ்டர் ராஜமாணிக்கம், தன் முதல் கணவருக்குப் பிறந்த மகளுக்கு வரன் பார்க்கத் துவங்கியபோது, சமையல் மாஸ்டராக இருந்த ராஜமாணிக்கம் திருமண புரோக்கராகத் தனக்குப் பழக்கமாகி, பின்னர் இருவரும் பல மணி நேரம் செல்போனில் தினந்தோறும் பேசி பழகியதாகவும், இந்த விஷயம் கணவர் செந்தில்குமாருக்குத் தெரிய வந்ததாகவும், அதனைக் கேள்விப்பட்டு இருவருக்கும் செந்தில்குமார் மிரட்டல் விடுத்ததால் ராஜமாணிக்கத்துடன் சேர்ந்து கணவரைத் தீர்த்துக் கட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்தக் கொலை சம்பவத்தில் சமையல் மாஸ்டர் ராஜமாணிக்கம் மற்றும் பாண்டீஸ்வரியை பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் மீறிய தகாத உறவைக் கண்டித்தவரை டீசல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




















