BB Tamil 9: "சுயநலமா பேசுற மிகப்பெரிய ஃபிராட்; அவங்க ஒரு கோழை" - திவ்யாவைக் கடும...
திருவள்ளூர், கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார் : கூவம் ஆற்றின் உற்பத்தி தலத்தில் சோழர் காலக் கோயில்!
கூவம்... இன்று நதி அல்ல. சாக்கடைபோல மாறியிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இது மக்கள் பயன்படுத்திய புனித நதி. இதன் கரைகளில் நாகரிகம் செழித்து விளங்கியது. அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவை இதன் கரைகளில் அமைந்திருக்கும் ஆலயங்கள். ஆயிரம் ஆண்டுப் பழைமை வாயந்த ஆலயங்கள் பல கூவம் நதிக்கரையில் ஓரங்களில் உள்ளன. அவற்றுள் பராமரிப்பின்றி சிதைவுற்றுப் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் ஆலயங்கள் பல. அப்படி வழிபாடு இல்லாமல் சிதைந்திருந்த ஆலயத்தை பத்தாண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்துப் புதுப்பித்து வழிபாடு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார் ஆலயம் என்ற அற்புதப் பெயர்கொண்ட இந்த ஆலயத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம் வாருங்கள்.
திருவள்ளூர் அருகே உள்ள பேரம்பாக்கத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது கேசாவரம். புறநகர் ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள், கடம்பத்தூர் ஸ்டேஷனில் இறங்கிக்கொள்ளலாம். அங்கிருந்து சாலை மார்க்கத்தில் பயணித்தால் புதுகேசாவரம் செக்போஸ்டை அடையலாம். அங்கிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது ஆலயம்.

ஆதியில் இத்தலத்துக்கு, 'மோக்ஷ த்வீபம்' என்று பெயர். வடக்குநோக்கிப் பாய்கிற நதிகளுக்கு உத்திரவாகினின்னு பெயர். உத்திரவாகினியில் நீராடினால் மோட்சம் கிடைக்கும் என்கின்றன நம் புராணங்கள். அப்படி வடக்கு நோக்கிப் பாய்கிற கொசஸ்தலை ஆறு, ஈசனின் திருப்பாதத்தில் உருவானதாகப் புராணங்கள் போற்றும் வ்ருத்த க்ஷீரம் எனும் கூவம் நதி, கல்லாறு ஆகிய மூன்று நதிகளும் இந்தப் பூமியில் சங்கமிக்கின்றன.
அப்படிச் சங்கமிக்கும் இடத்தில் உருவானதே இந்த மோட்சத் தீவு. கங்கையே இங்கு மூன்று நதிகளாகிப் பாய்கிறது என்றும், இந்தத் தலம், 'தட்சிணகாளகஸ்தி' என்று சொல்கின்றன கல்வெட்டுக் குறிப்புகள்.
சோழ மன்னர்களில் நீர் மேலாண்மையைப் போற்றிப் பாதுகாத்தவர் முதலாம் குலோத்துங்கன். கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலைவனாகிய இவன் மனைவி ஏழுலகமுடையாள். ஒருமுறை இருவரும் திருவூறல் தலத்துக்கு வந்தபோது மோட்சத்தீவின் பெருமைகளை அறிந்து வந்து தீர்த்தமாடினர். இங்கு பஞ்சாக்ஷர கிரியின்மீது அமைந்திருந்த கூடல்சங்கமேஸ்வரரையும் `கயிலாச ஈஸ்வரம்' என்று போற்றப்பட்ட இத்தலத்தின் சிவனை யும் தரிசனம் செய்தனர். அவ்வாறு குறிப்பிடப்படும் பஞ்சாக்ஷரகிரி எனும் குன்று 25 ஆண்டுகளுக்கு முன்புவரை இங்கு இருந்தது என்கிறார்கள். ஆனால் இன்று குன்றையும் காணோம், கூடல் சங்கமேஸ்வரர் ஆலயமும் இல்லை என்பது வருத்தம் தரும் செய்தி.
இத்தலத்தில் ஏழுலகமுடையாள் உருவாக்கிய ஆலயமே இந்தக் கயிலாசநாதர் திருக்கோயில் கஜபிருஷ்ட விமானத்தோடு கூடிய கற்றளியாக உருவெடுத்த இந்தக் கோயில் பழைமையின் சிறப்போடு இன்றும் விளங்கிறது.

கருவறையில் கயிலாசநாதமுடையார் பிரமாண்டத் திருமேனியராக அருள்பாலிக்கிறார். இவரைக்காணும்போதே நம் கண்கள் பனிக்கின்றன. மனம் அமைதி அடைகிறது. மனநலம் சார்ந்த பிரச்னை உடையவர்கள் இந்த ஆலயம் வந்து ஈசனை வழிபட்டால் பிரச்னைகள் தீரும் என்கிறார்கள். ஈசனுக்கு நேராக நந்தி தேவர் அருள்கிறார். பழைய நந்தி காலவெள்ளத்தில் சிதிலமடைந்ததால் புதிய நந்தி பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.
கோயிலின் சிறப்பு கோஷ்ட தெய்வங்கள். குறிப்பாக விநாயகர். எங்கு நின்று தரிசித்தாலும் அவர் நம்மையே பார்ப்பதுபோல் தோன்றும். மேலும் கோஷ்டத்தில் இருக்கும் திருமேனிகள் அனைத்தும் முப்பரிமாணத் தோற்றத்தில் அமைந்தவை.
வழக்கமாக கோஷ்டத்துக்குள் அடங்கி யிருக்கும் திருமேனிகள் இங்கு பிரமாண்டமாக கோஷ்டத்துக்கு வெளியேயும் விரிந்து நிற்கும். இதுவே நமக்கு முப்பரிமாண உணர்வை ஏற்படுத்துகிறது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி. லிங்கோத்பவர், துர்கை ஆகியோர் எழுந்தருளியிருக்கிறார்கள். துர்கை இங்கே கொற்றவையின் அம்சமாகக் கைகளில் பிரயோகச் சக்கரம் ஏந்தியபடி ஒருகாலை முன்னெடுத்து வைத்து பக்தர்களின் அழைப்புக்கு ஓடோடிவரத் தயாராக நிற்பது போல் அருள்காட்சியருள்கிறாள்.
இங்கே மூன்று கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் ஒன்று 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்காலக் கல்வெட்டு. அதில் இந்த ஆலயத்துக்காக மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள உரியூர் என்னும் கிராமத்தையும் கைலாசன் நல்லூரையும் இறை யிலி நிலமாக சோழன் அளித்த செய்தியும், ஏழுலகமுடையாள் இங்கு ஆலயம் எழுப்பச் சொன்ன செய்தியும் காணப்படுகின்றன.

17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் இந்தத் தலம் தட்சிண காளஹஸ்தி; இங்கு ஈஸ்வரனை தரிசனம் செய்தால் காசி, கயை ஆகிய தலங்களில் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்ற செய்தி காணக் கிடைக்கிறது” என்று விளக்கினார் பாலாஜி.
இவ்வளவு வரலாற்றுச் சிறப்பும் ஆன்மிக முக்கியத்துவமும் வாய்ந்த இந்த ஆலயத்தை வாய்ப்பிருக்கும் அனைவரும் ஒருமுறை சென்று தரிசித்து வாருங்கள். வாழ்வில் வளமும் நலமும் ஒருங்கே கிடைக்கும்.





















