'தமிழ்நாட்டில் மாற்றம் வரும்' - அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் குறித்து ஆடிட...
தீராத பிரச்னைகள் தீர சென்னை குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டை படவேட்டம்மன் கோயிலில் விளக்கு பூஜை!
அன்னை ஆதி சக்தி பல்வேறு ரூபங்களில் இந்த பூவுலகில் அவதரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறாள். அப்படி அவள் அருள்பாலிக்கும் அற்புதத் திருவுருக்களில் ஒன்று படவேட்டம்மன் திருக்கோலம். ஆரணி அருகில் இருக்கும் படவேடு என்னும் தலத்தில் அன்னை ரேணுகாதேவி படவேட்டம்மனாக அருள்பாலிக்கிறாள். தீராத வினை எல்லாம் தீர்த்துவைக்கும் அந்தத் தாய் கோயில் கொண்ட மற்றுமொரு தலம் சென்னையில் இருக்கிறது.
சென்னை குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டையில் கோயில் கொண்டு படவேட்டம்மனாக அருள்கிறாள் தேவி. ஆதியில் கோபாவேசமாக இருந்த அன்னை இங்கே வந்து அமர்ந்ததும் சாந்தமானாள் என்கிறது தலபுராணம். அதன்பின் இங்கேயும் கோயில்கொண்டு அருள்வதாக பக்தர்களுக்கு வாக்களித்தாள். அதன்படி இத்தலத்தில் அன்னை ஸ்ரீபடவேட்டம்மனாகக் கோயில்கொண்டு அருள்பாலித்துவருகிறாள்.

பல ஆயிரம் ஆண்டுப் பழைமை உடைய இந்தத் தலம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் பொலிவு பெற்றது. இந்தப் பகுதியை ஆண்டுவந்த ஜமீன் ஒருவரின் கனவில் தோன்றிய அன்னை, தான் மண்ணில் தவமிருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்து அங்கேயே தனக்குக் கோயில்கட்டி வழிபடச் சொல்லி அருளினாள். கனவு முடிந்து எழுந்த ஜமீன் அன்னை காட்டிய இடத்துக்குச் சென்று தோண்டிப்பார்க்க அங்கே தேவி சிலா ரூபமாக வெளிப்பட்டாள். உடனே அங்கேயே கோயில் எழுப்பி வழிபட ஆரம்பித்தார்கள். அன்று முதல் இன்றுவரை அந்த அம்மன் திருமேனியே கோயில் வழிபாட்டில் உள்ளது.
தலம் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உடையது என்றாலும் தற்காலத்தில் இருக்கும் ஆலய வடிவம் சுமார் 400 ஆண்டுகள் பழைமை ஆனது. இந்தப் பகுதியின் காவல் தெய்வம் இந்த அம்மன்தான். இங்கே இந்தத் தாய் நிகழ்த்தும் அற்புதங்கள் ஏராளம் ஏராளம். இங்கே வந்து வேண்டிக்கொண்டு பலன் பெற்றவர்கள் அநேகர். தாய் கருணாம்பிகை. வரும் பக்தர்களின் பிணிகளைத் தீர்ப்பவள். அதற்கு சாட்சி இங்கு நாடிவரும் பக்தர் கூட்டம்.
இங்கே சில விசேஷ பிரார்த்தனைகள் உண்டு. அத்திமரத்தினால் ஆன அம்பாளின் விக்ரகங்கள் கோயிலில் உண்டு. குறிப்பிட்ட வேண்டுகோளை நினைத்துக்கொண்டு அந்த விக்ரகங்களைச் சுமந்து ஆலயத்தை வலம் வந்தால் அந்த வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதேபோன்று பரசுராமரின் திருமேனி ஒன்றும் உள்ளது. அந்தத் திருமேனியைச் சுமந்தபடி பிராகார வலம் வந்தால் பிள்ளைவரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் இந்த ஆலயத்தில் விசேஷமாக சோமாஸ்கந்த மூர்த்தி விக்ரகம் ஒன்றும் உள்ளது. திருமணமாக நீண்ட காலமாகக் குழந்தை வரம் கிடைக்காதவர்கள் இத்தல அன்னையை வழிபட்டு சோமாஸ்கந்த மூர்த்தத்தைப் பெற்று அங்கே இருக்கும் தொட்டிலில் இட வேண்டும். இடும்போது, தாயே விரைவில் குழந்தைச் செல்வத்தை எனக்கும் நீ அருள இதே தொட்டிலில் அந்த மழலையைத் தவழச் செய்வேன் என்று பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்தவர்கள் விரைவில் மழலைச் செல்வம் பெற்று மகிழ்வோடு வாழ்வார்கள் என்பது இத்தலத்தினர் சொல்லும் நம்பிக்கை.
இத்தலத்தில் கற்பக விநாயகர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமண்யர், துர்கா , காலபைரவர், நவகிரகங்கள், அக்னி தேவர் ஆகியோருக்கு தனிச்ச்சந்நிதிகள் உள்ளன. வாராஹி அன்னையின் உற்சவத் திருமேனி இங்கே மிகவும் பிரசித்தம். வளர்பிறை தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வரும் பஞ்சமி திதிகளிலும் வாராஹி அம்மனுக்கு இங்கே விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. இதில் கலந்துகொண்டால் வியாபாரத்தில் உள்ள பிரச்னைகள் தீரும். கடன் சுமை குறையும். எதிரிகளால் உண்டான துன்பங்கள் தீரும் என்கிறார்கள் பக்தர்கள். இன்னும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கும் இந்த அற்புதத்தலத்தில்தான் வரும் ஜூன் 19 -ம் தேதி சக்தி விகடனும் குரோம்பேட்டை படவேட்டம்மன் கோயில் நிர்வாகமும் இணைந்து சிறப்பு விளக்கு பூஜையை நடத்த இருக்கிறார்கள்.
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!*
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட வாழ்க்கை வளமாகும். அன்னையின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். பிள்ளைகளின் கல்வி, தொழில், வேலை, திருமணம் போன்ற விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாருங்கள் அற்புதமான அந்த அன்னையின் சந்நிதியில் விளக்கேற்றி வழிபாடு செய்வோம்.

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:
விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முன்பதிவுக்கு: 044-66802980/9677069112
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!*
* படிவத்தில் உங்கள் தகவல்களைப் பதிவு செய்தலே போதுமானது. வேறு பதில் செய்தி ஏதும் வரவில்லை என்று கவலைப்பட வேண்டாம். ஆலய வளாகத்தில் சந்திக்கலாம். நன்றி.




















