தூய்மைப் பணியாளா் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் தூய்மைப் பணியாளா் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நல்ல குற்றாலம் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (57). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரித்து வந்தாா்.
இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட இவா், வேலைக்கு மற்றொரு நபரை அனுப்பி வைத்தாா். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நகராட்சி அதிகாரிகள் நீங்கள் தான் வேலைக்கு வரவேண்டும் எனக் கூறினா்.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன் ஆறுமுகம் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.