செய்திகள் :

தொடரும் புத்தக முடக்கம்: `தமிழைக் கண்டு அஞ்சுகிறது இலங்கை அரசு' - எழுத்தாளர் தீபச்செல்வன் பேட்டி!

post image

இலங்கையின் பிரபல எழுத்தாளர் தீபச்செல்வன். நடுகல், பயங்கரவாதி, சயனைட், எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன் உள்ளிட்டப் பல புத்தகங்களை எழுதி கவனம் ஈர்த்தவர். இவரின் புத்தகங்கள் சென்னையில் அச்சிடப்பட்டு, கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டபோது, 'இந்த புத்தகங்கள் இலங்கையின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்துபவை' எனக் குறிப்பிட்டு இலங்கை சுங்கத்துறையால் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. இது, இலங்கையில், தமிழர்களுக்கு நிலவும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக விரிவாக பேச தீபச்செல்வனை தொடர்பு கொண்டு பேசினோம்.

தீபச்செல்வன்
தீபச்செல்வன்

இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேசிய அவர், ``சென்னையிலிருந்து இலங்கைக்கு 360 புத்தகங்கள் அடங்கிய பொதிகளை இலங்கை சுங்கப் பிரிவினர் தடுத்து வைத்துள்ளனர். தடுத்து வைக்கப்பட்ட அந்தப் பொதிகளில், ஏற்கனவே இலங்கையில் விற்பனையில் உள்ள எனது நாவல்களும், தற்போது புதிதாக வெளியாகியுள்ள ‘எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்’ (நேர்காணல் தொகுப்பு) மற்றும் ‘இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள் தான்’ (கட்டுரைத் தொகுப்பு) ஆகிய புத்தகங்களும் இருந்தன.

கடந்த மார்ச் 27-ம் தேதி எனக்குப் புத்தகங்களைப் பெற்றுத் தரும் முகவர்கள் மூலமாக இந்தத் தகவல் எனக்குத் தெரியவந்தது. 'இந்தப் புத்தகங்களை விடுவிக்க வேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கலாச்சார அமைச்சகம் ஆகிய இரண்டின் அனுமதி கடிதங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்' என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடைக்கு முறையான ஆதாரங்கள் எதையும் அவர்கள் முன்வைக்கவில்லை. எனது 'இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள் தான்' என்ற கட்டுரைத் தொகுப்பின் அட்டைப்படத்தில், இலங்கையின் வடகிழக்கு பகுதி கோடுகளால் பிரித்துக் காட்டப்பட்டிருந்தது.

தீபச்செல்வன்
தீபச்செல்வன்

ஸ்கேனிங் செய்தபோது இந்த அட்டைப்படத்தைப் பார்த்துவிட்டுத்தான் அவர்கள் பொதிகளைப் பிரித்திருக்கக்கூடும் என நினைக்கிறேன். மேலும், ‘பயங்கரவாதி’ என்ற நாவலின் தலைப்பும் அவர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அந்த நாவல், போர்க்காலத்தில் தப்பிப் பிழைத்த ஒரு மாணவன், அரசுப் படைகளால் 'பயங்கரவாதி' என முத்திரை குத்தப்பட்டு கொல்லப்படுவதைப் பற்றியது. ஆனால், அதிகார வர்க்கமோ 'பயங்கரவாதி' என்ற சொல்லைக் கண்டதுமே இது விடுதலைப் புலிகள் தொடர்பான நூல் என அச்சமடைகிறது. தமிழ் மக்கள் மற்றும் போராளிகள் மீது அரசு காலம் காலமாக வைத்திருக்கும் அதே சந்தேகமும் அச்சமுமே இங்கும் வெளிப்பட்டுள்ளது.

எனக்கு இது போன்ற நெருக்கடிகள் ஏற்படுவது முதல் முறையல்ல. கடந்த 2020-ம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ச ஆட்சியில், எனது முதல் நாவலான ‘நடுகல்’ நூலின் 60 பிரதிகள் இதேபோல் தடுத்து வைக்கப்பட்டன. அன்றைய அரசியல் சூழல் மிகவும் கடுமையாக இருந்ததால், அந்தப் புத்தகங்களை மீட்க முடியாமல் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். மேலும், 2024-ம் ஆண்டில் 'பயங்கரவாதி' நாவலில் வரும் கற்பனை கதாபாத்திரத்திற்காக, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என்னிடம் விசாரணை நடத்தினர். ஒரு நாவலின் கதாபாத்திரத்திற்காக ஒரு அரசு விசாரணை நடத்துவது உலகிலேயே இங்குதான் நடந்திருக்கும். இது தவிர, இராணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு மற்றும் விசாரணைகளை நான் தொடர்ந்து எதிர்கொண்டே வருகிறேன்.

தீபச்செல்வன்
தீபச்செல்வன்

இங்கு வேதனையான விஷயம் என்னவென்றால், இதே 'நடுகல்' நாவல் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானபோது எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. அதன் அட்டைப்படத்தில் நேரடியாகவே ஒரு நடுகல்லின் படம் பயன்படுத்தப்பட்டிருந்தது. சிங்கள மொழியில் அந்த நூல் பெரும் வரவேற்பைப் பெற்று விவாதங்களை உருவாக்கியது. ஆனால், அதே கதை தமிழில் இருக்கும்போது மட்டும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் எப்படிப் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்களோ, அதேபோல்தான் அவர்களின் இலக்கியங்களும் கதைகளும் ஒடுக்கப்படுகின்றன. இது எனக்கு மட்டுமல்ல, பல தமிழ் படைப்பாளிகளுக்கும் நேரும் பொதுவான அவலம்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டிலிருந்து படைப்பாளிகள் தனிப்பட்ட முறையில் குரல் கொடுத்துள்ளனர். சில சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இது குறித்து விசாரித்துள்ளன. சிங்களத் தரப்பிலிருந்து 'வடக்கு - தெற்கு ஒற்றுமைக்கான அமைப்பு', 'இலங்கை கலைக்கழகம்' மற்றும் 'ஊடக சுதந்திர இயக்கம்' போன்றவை எனக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

எனது புத்தகங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து அறிந்த இலங்கை அரசின் அமைச்சர்கள், என்னைத் தொலைபேசி வாயிலாகவும் நேரடியாகவும் தொடர்பு கொண்டு பேசினார்கள். 'புத்தகங்கள் விரைவில் விடுவிக்கப்படும்' என்று உறுதியளித்திருந்தனர்.

பயங்கரவாதி நாவல்
பயங்கரவாதி நாவல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசிய அமைச்சர், 'திங்கட்கிழமைக்குள் தீர்வு கிடைக்கும்' என்றார். ஆனால், தற்போது இலங்கையில் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால், அந்த நடைமுறைகள் இன்னும் தாமதமடைந்து வருகின்றன. இன்னும் புத்தகங்கள் எனது கைகளுக்கு வந்து சேரவில்லை என்பதுதான் தற்போதைய யதார்த்தம்.

இந்த நெருக்கடியான நேரத்தில் எனக்கு மிகப்பெரிய ஆறுதலாகவும் பலமாகவும் இருந்தது சிங்களப் படைப்பாளிகளின் ஆதரவுதான். ஆரம்பத்தில் நான் மிகுந்த மனவேதனையில் இருந்தபோது, எனது சிங்கள நண்பர்களிடம் இதைப் பகிர்ந்தேன். அவர்கள் மூலமாகச் செய்தி பரவி, சமூக வலைதளங்களில் சுமார் 95 சதவீதத்திற்கும் அதிகமான சிங்கள எழுத்தாளர்களும் கலைஞர்களும் எனக்காகக் குரல் கொடுத்தனர்.

கலாச்சாரத் துறை அமைச்சர் இந்தியாவில் இருந்தபோது, அவரை Tag செய்து பதிவுகளை இட்டனர். அதன் விளைவாகவே அமைச்சர் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தினார். இலங்கைத் தமிழ் படைப்பாளிகள் சில காரணங்களால் பேசத் தயங்கும் சூழலில், சிங்களப் படைப்பாளிகள் காட்டிய மனிதாபிமானமும், தோழமையும் எனக்கு நெகிழ்ச்சியைத் தருகிறது.

இலங்கை அரசு தமிழர்களின் இலக்கியத்தைக் கண்டு அஞ்சுகிறது என்பது, அது உண்மையைக் கண்டு அஞ்சுவதையே காட்டுகிறது. எங்களது கடந்த கால நினைவுகளும் வரலாறும் இப்போதும் அவர்களுக்குத் தொந்தரவாக இருக்கின்றன. "யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற ரீதியில், எனது அண்ணன் ஒரு மாவீரன். அந்த வரலாற்றை அடுத்த தலைமுறைக்குப் பாடமாகச் சொல்ல வேண்டும்" என்று நான் அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

நடுகல் நாவல்
நடுகல் நாவல்

ஆனால், இந்தக் கதைகள் மீண்டும் போராட்டத்தைத் தூண்டும் என்று அரசு தவறாகக் கருதுகிறது. உண்மையில், அரசின் இத்தகைய ஒடுக்குமுறைகள்தான் மீண்டும் போராட்டங்களை உருவாக்கும் என்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை.

ஆட்சிகள் மாறினாலும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை அணுகுமுறைகள் மாறவில்லை என்பதற்கு இந்தப் புத்தக விவகாரமே சாட்சி. கடந்த கால ராஜபக்சாக்களின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அதே சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ்தான் இப்போதும் புத்தகங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

அமைச்சின் அனுமதி கிடைத்தாலும், பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுங்கத்துறையின் தணிக்கைக்கு உட்படுத்தப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சி மாற்றம் என்பது பெயரளவிலேயே இருக்கிறது. ஒடுக்குமுறை இயந்திரம் இன்னும் அப்படியேதான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

படைப்புகளைச் சந்தேகப்படுவதும் ஒடுக்குவதும் ஒரு சமூகத்தைப் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும். படைப்பாளிகள் மீதான இத்தகைய விசாரணைகள் மற்றும் புத்தக முடக்கங்கள், எதிர்காலத்தில் படைப்புத் துறையைத் தேர்வு செய்ய நினைக்கும் இளம் தலைமுறையினரிடையே ஒருவித அச்சத்தை உருவாக்கும். அவர்கள் உண்மைகளைப் பேசத் தயங்குவார்கள். ஒரு சமூகத்தின் ஆயுதமாக இருக்க வேண்டிய இலக்கியத்தின் போக்கை இது சிதைத்துவிடும். படைப்பாளர்கள் அச்சுறுத்தலோடு வாழும் சூழல் ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு அழகல்ல.

தீபச்செல்வன்
தீபச்செல்வன்

எனக்குப் புத்தகங்கள் என்பது வெறும் காகிதங்கள் அல்ல; அவை என் உயிரைப் போன்றது. 'எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்' என்ற எனது புதிய புத்தகத்தைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு ஒன்றரை மாதமாகக் காத்திருந்த எனக்கு, இந்தத் தடை மிகப்பெரிய மன அழுத்தத்தைத் தந்தது.

இருப்பினும், சிங்கள மக்களின் ஆதரவு எனக்குப் புதிய உத்வேகத்தைத் தந்துள்ளது. எனது சொற்களும் கதைகளும் கவிதைகளும் இன்னும் வலிமையாகப் பேசப்பட வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது. ஈழ மண்ணிலும் உலகெங்கும் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் படைப்பாளிகள், தங்கள் எழுத்துரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்." என உறுதியோடு பேசினார்.

கலையும் அரசியலும்: வரலாற்றைத் தீர்மானித்த கணீரென்ற குரல்கள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நூறாண்டு கால விசித்திரம்: லிங்கன் - கென்னடி மர்ம முடிச்சுகள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பெட்ரோடாலர் ஒரு கண்ணிவெடி: அங்கீகரிக்காத நாடுகளுக்கு காத்திருக்கும் போர் அபாயம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

யாதுமாகிய பெண்ணோவியமே! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பணமே தகுதியானால்... எளியோர் ஆட்சியாளர் ஆவதெங்கே?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நிழலாய் நின்ற நினைவுகள்: பல்லடம் இலட்சுமி மில் பள்ளியின் பொற்காலம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க